முன்குறிப்பு : சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஒரு சில காரணங்களால் அந்த இதழே வெளிவரவில்லை என்பதால் இப்போது இங்கே பகிர்கிறேன்.

Karzan Kader | Iraq | 2012 | 97 min

அமெரிக்கா செல்ல வேண்டுமென்பது இந்திய மக்களுக்கு, குறிப்பாக ஐ.டி. துறையில் வேலை செய்பவர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ஐ.டி. கம்பெனிகளில் இதற்கென நடக்கும் அரசியலும், மோதல்களும் மிக அதிகம். எப்படியாவது அமெரிக்கா சென்று கை நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்கிற அமெரிக்க மோகம் இங்கே ஏறக்குறைய அனைவருக்குமே இருக்கிறது. ஆனால், 1990ல் ஈராக் நாட்டைச் சேர்ந்த இரண்டு அனாதைச் சிறுவர்கள் ‘சூப்பர் மேன்’ உண்மையிலேயே அமெரிக்காவில் வசிக்கிறார் என்று நம்பி யாருடைய உதவியுமின்றித் தனியாக அமெரிக்காவை நோக்கிப் பயணப்படுகிறார்கள். அவர்கள் பயணம் வெற்றியடைந்ததா ? பயணத்தின் போது என்னென்ன தடைகளையெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதே இன்று நாம் பார்க்க இருக்கும் “Bekas (2012)” என்ற ஈராக்கியப் படத்தின் கதை.

ஆண்டு 1990. இடம் ஈராக் நாட்டில் ஒரு சிறிய கிராமம். தம்பி ஜானா (வயது 7), அண்ணன் டானா (வயது 10) சகோதரர்கள் இருவரும் போரில் தங்கள் பெற்றோரைப் பறிகொடுத்துவிட்டுத் தற்போது ஷூ பாலீஷ் போட்டுப் பிழைத்து வரும் கடவுளின் குழந்தைகள். திரையரங்கின் உள்ளே சென்று படம் பார்க்கக் காசில்லாததால், திருட்டுத்தனமாக மேற்கூரை ஓட்டை வழியே சூப்பர்மேன் திரைப்படத்தைக் கண்டுரசிக்கிறார்கள். தீயவர்களைத் தன் சக்தியால் உடனடியாக அழிக்கும் சூப்பர்மேன் அவர்களின் ஆதர்சமாகிவிடுகிறான். படத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போது திரையரங்கு உரிமையாளரிடம் மாட்டிக்கொண்டு அடி உதை வாங்குகிறார்கள்.

பிறகு அங்கிருந்து தப்பித்து அந்த ஊரின் மலை உச்சிக்கு வருகிறார்கள். மலைக்கு அந்தப்பக்கம் தான் அமெரிக்கா இருக்கிறதெனவும் அங்கே தான் சூப்பர்மேன் வாழ்ந்துவருகிறான் எனவும் இருவரும் நம்புகின்றனர். எப்படியாவது அந்த மலையைத் தாண்டி அமெரிக்கா சென்று சூப்பர்மேனைச் சந்தித்துவிட்டால் தங்கள் துன்பமெல்லாம் தீர்ந்துவிடும் என்றும் முடிவெடுக்கின்றனர். தங்களைத் துன்புறுத்திய எதிரிகளையெல்லாம் சூப்பர்மேனிடம் போட்டுக்கொடுத்துத் தண்டனை வாங்கிக்கொடுக்க முடிவெடுக்கின்றனர். அதில் முதல் ஆளாக சதாம் உசேன் பெயரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அமெரிக்கா செல்வதற்கு பாஸ்போர்ட் என்ற ஒரு வஸ்து தேவை எனவும் அதற்கு நிறையப் பணம் செலவாகும் என்பதும் அண்ணன் டானாவிற்குத் தெரிந்திருக்கிறது. அதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க, தீவிரமாக உழைக்க முடிவெடுக்கிறார்கள்.

அவர்கள் தங்குவதற்கென்று வீடோ, வேறு எந்த ஓர் இடமோ கிடையாது. ஷூ பாலீஸ் போடுவதற்கான சாமான்களை எல்லாம் அவர்களுக்கு உதவி செய்யும் ‘பாபா காலித்’ என்ற வயதான, கண்பார்வையற்றத் தாத்தாவின் கடையில் வைத்துள்ளனர். தினமும் அங்கிருந்து அதை எடுத்துச்சென்று மார்க்கெட் அருகே கடைவிரித்து, வருவோர் போவோரிடம் கூவிக்கூவி ஷூ பாலீஸ் போட்டுக் கிடைக்கும் காசு தான் அவர்களின் மொத்த வாழ்வாதாரம். அப்படி ஷூ பாலீஸ் போடவரும் ஒரு பணக்கார ஆசாமியின் மகள் ஹீலியா மீது அண்ணன் டானாவுக்குக் காதல் வருகிறது. அந்தக்காதல் படிப்படியாக வளர்ந்து அவளைத் தனியே சந்தித்து முத்தம் வாங்கும்வரை வளர்கிறது.

‘பாபா காலித்’ தாத்தாவின் மீது ஜானாவுக்குக் கொள்ளைப் பிரியம். தன்னை மகனே என்று அவரை அழைக்கச் சொல்லுமளவுக்கு அவர்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறான். ஒரு நாள் டானாவின் காதலி ஹீலியாவின் தங்கச்செயினை யாரோ ஒரு குறும்புக்கார சிறுவன் பிடுங்கி ஏரியில் எறிந்துவிடுகிறான். ஹீலியா கோபித்துக்கொண்டு ஓடிவிட, அவளைச் சமாதானப்படுத்த டானா ஏரியில் குதித்துத் தன் உயிரைப் பணயம் வைத்து அந்தச் செயினைக் கண்டுபிடிக்கிறான். திரும்பி வந்து பார்க்கும் போது ஹீலியாவும் அவளது குடும்பமும் அமெரிக்காவுக்குக் கிளம்பிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அந்தச் செயினை அவளிடம் கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கடைசியில் முடியாமல் போய்விடுகிறது.

அதற்கடுத்த நாள், அவர்களுக்கென்று இருந்த ஒரே ஆதரவான பாபா காலித் தாத்தா இறந்துபோகிறார். இருவரும் மனமுடைந்து போய், மலையுச்சிக்குச் செல்கின்றனர். இனிமேலும் இந்த ஊரில் இருப்பதில் அர்த்தமில்லை என்றும், கையிலிருக்கும் அந்தத் தங்கச்செயினைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்றும் முடிவெடுக்கின்றனர். அண்ணன் டானா அந்த ஊரில் பாஸ்போர்ட் பெற்றுத்தருபவர்களிடம் சென்று தங்கச்செயினைக் காட்டி பாஸ்போர்ட் கேட்க, அவர்கள் அவனை அடித்துத் துரத்துகின்றனர். இதற்கிடையில் ஜானா மற்றொரு சிறுவனிடம் கோலிக்குண்டு விளையாடி அவனைத் தோற்கடித்து விடுகிறான். தோற்றுப்போன சிறுவன் கோலிக்குண்டை இழக்க விரும்பாமல் அதற்குப் பதிலாக அவன் வீட்டில் இருக்கும் கழுதையை எடுத்துக்கொள்ளச் சொல்கிறான். ஜானா அதை எடுத்துக்கொண்டு ஒய்யாரமாகச் சவாரி போட்டுக்கொண்டு வரும்போது, கழுதையின் சொந்தக்காரர் பார்த்துவிடுகிறார். அடி உதை கொடுத்து அவனை விரட்டிவிடுகிறார். பாஸ்போர்ட் கிடைக்காத சோகத்தில் அண்ணன் டானா வர, பிறகு இருவரும் சேர்ந்து அந்தக் கழுதையையே விலைக்கு வாங்கி அதில் ஏறி அமெரிக்கா செல்லலாம் என்று முடிவெடுக்கின்றனர். தங்கள் கையிலிருக்கும் காசைப்போட்டு அந்தக்கழுதையை வாங்கி அதற்கு மைக்கேல் ஜாக்சன் என்று பெயரும் வைக்கின்றனர். 

ஊரிலுள்ள சிறுவர்களெல்லாம் கூடி அவர்களை வழியனுப்ப, ஓர் உலக வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டு, கழுதையிலேறி இருவரும் உற்சாகமாக அமெரிக்காவை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் வழியில் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள், தடைகள் தான் மீதிப்படம். கடைசியில் அவர்களின் முடிவு என்ன ஆனது ? அமெரிக்காவுக்குச் செல்ல முடிந்ததா ? சூப்பர்மேனைச் சந்திக்க முடிந்ததா ? என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.படம் மொத்தமே ஒன்றரை மணி நேரம் தான். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நாமும் 1990களின் ஈராக் வீதிகளில் நடமாட ஆரம்பித்துவிடுகிறோம். படம் நம்மை அந்தளவு ஆக்கிரமித்துக்கொள்கிறது. அந்தச்சிறுவர்களோடு சேர்ந்து நாமும் அமெரிக்கா நோக்கிப் பயணிப்பதைப் படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உணர்ந்துகொள்ளலாம். அந்தச்சிறுவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு உணர்வுகளும் பார்வையாளர்களும் உணர்ந்துகொள்ளும்படியான காட்சியமைப்புகள், அதற்கேற்ற ஒளிப்பதிவு, நடிப்பு எனப் படம் அத்தனை துறைகளிலும் முதலிடம் பெறுகிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஜானா மற்றும் டானாவாக நடித்த அந்த இரண்டு சிறுவர்கள் தான். தங்களின் துறுதுறுப்பான நடிப்பால் மொத்தப்படத்தையும் தங்களின் பிஞ்சுத் தோள்களில் சுமந்துள்ளனர். படம் பார்த்த எவரும் இந்த இரண்டு சிறுவர்களின் நடிப்பை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதிலும் தம்பி ஜானாவாக நடித்த Zamand Taha வின் நடிப்புப் பிரமாதம். ஜானா, தன் அண்ணனிடமும், பிறரிடமும் எப்போதும் அறை வாங்கிக்கொண்டே இருப்பவன்; எந்தச்சூழ்நிலையிலும் அமைதியாகப் பேசும் பழக்கம் இல்லாதவன். எப்போதுமே பரபரவென்று உற்சாகமாக இருக்கும் ஜானாவை படம் பார்க்கும் எவருக்கும் பிடிக்கும்.

படத்தில் ஜானா செய்யும் குறும்புகள் அனைத்துமே அட்டகாசமாய் அமைந்து நமக்கு வெடிச்சிரிப்பை வரவழைக்கின்றன. மசூதியில் பிரார்த்தனை செய்யும் காட்சியில் மற்றவர்களைப் பார்த்துக்கொண்டே குறும்புகள் செய்வான். பிறகு கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்போது “கடவுளே..!! நானும் என் அண்ணனும் அமெரிக்கா சென்று சூப்பர்மேனைப் பார்ப்பதற்கு உதவிசெய். அதற்காக இந்த ஊரிலுள்ள அனைத்து அழுக்கான ஷூக்களையும் எங்களிடம் அனுப்பு” என்று வேண்டுவான். “அப்படியே கொஞ்சம் பணமும் கேட்கவேண்டியது தானே” என்று அண்ணன் கேட்கும்போது “கடவுளிடம் பணம் கேட்கக்கூடாது என்று பாபா காலித் சொல்லியிருக்கிறார். அப்படிக் கேட்டால் இப்போது இருப்பதையும் திரும்ப எடுத்துக்கொள்வாராம்” என்று பதில் சொல்லுவான் ஜானா. “அடேய் முட்டாள். இப்போது மட்டும் என்ன இருக்கிறது எடுத்துக்கொள்வதற்கு ? எதுவும் தான் இல்லையே. அதனால் கடவுளிடம் என்ன வேண்டுமானாலும் கேள். அப்படியே பாஸ்போர்ட்டும் கேள்” என்று டானா கிண்டல் செய்யும்போது, “கடவுளே..!! என் அண்ணனை மன்னித்துவிடு. இன்றைக்கு அவன் மனநிலை சரியில்லை” என்று மறுபடியும் வேண்டிக்கொள்ளும் காட்சி சிரிப்புக்கு உத்திரவாதம்.

வீடு என்பதே அவர்களுக்கு இல்லை என்பதால், எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஒரு கோணிப்பையைப் போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். குளிப்பதற்குக் கூட யாரிடமாவது இரண்டு வாளிகள் நிறையத் தண்ணீர் வாங்கி அதில் குளிப்பார்கள். அப்படி ஒருமுறை குளிக்க ஆரம்பிக்கும்போது ஜானா அப்படியே வாளிக்குள் இறங்கிவிடுவான். அதைப் பார்த்த டானா பளாரென்று ஓர் அறை கொடுத்து, “எடுத்தவுடனேயே வாளிக்குள் கால் வைக்காதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் ?” என்று கேட்க, அதற்குப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டே “7 தடவைகள் அண்ணா” என்று ஜானா சொல்லுமிடம் அனுதாபச் சிரிப்பை வரவழைக்கிறது.

பாபா காலித் தாத்தா வருவது ஒருசில நிமிடங்களே என்றாலும் அவரும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடுகிறார். ஜானா தன் அண்ணன் டானா மீது கோபப்பட்டு அதை பாபா காலித் தாத்தாவிடம் சொல்லுவான். அதற்கு அவர் ‘ஒற்றைக் குச்சியை உடைப்பது எளிது. ஆனால் கற்றைக் குச்சிகள் இணைந்த கட்டை உடைப்பது கடினம்’ என்கிற ஜென் தத்துவத்தை அவனுக்கு ப்ராக்டிகலாக விளக்கிச்சொல்லி அண்ணன்-தம்பி இருவரும் என்றும் பிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க வேண்டும் என்று எடுத்துரைப்பார். அந்தக்காட்சியும், அதில் தாத்தாவுக்கும் ஜானாவுக்குமிடையே இழையோடும் அன்பும் காண்பதற்கு மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்குகிறது.

இருவரும் கழுதையில் ஏறி அமெரிக்காவை நோக்கி உற்சாகமாகப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தெருமுனையில் நின்று எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் முழிப்பதும் சிரிப்பை வரவழைக்கிறது. அதேபோல, கழுதையில் சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ஒரு வண்டியில் கோக் பாட்டில்கள் இருப்பதைப் பார்த்து அதனைக் குடிக்க ஆசைப்பட்டு டானா அந்த வண்டியில் ஏறுவான். அந்தச் சமயம் பார்த்து கோக் வண்டி கிளம்பிவிட, அதற்குள் டானா மாட்டிக்கொண்டுவிட, ஜானா என்ன செய்வதென்று தெரியாமல் கழுதை மீதேறி அந்த வண்டியைப் பின்தொடர்ந்துசெல் என்று கழுதையைப் பார்த்துக் கத்துவான். அஃது ஆடாமல் அசையாமல் அங்கேயே நின்றுகொண்டிருக்கும். சற்று நேரத்தில் கோக் வண்டி வெகுதூரம் போய்விட, அண்ணனைப் பிரிந்த சோகத்தில் கழுதையிடம் சென்று, “என் அண்ணனைப் பின்தொடர்ந்து போ என்று சொன்னேனா இல்லையா ? ஏன் போகவில்லை ? இப்போது அவனைப் பிரிந்துவிட்டோமே என்ன பண்ணுவது ? கொஞ்சமாவது அறிவிருக்கிறதா உனக்கு. மூளையில்லாத ஜென்மமே” என்று கழுதையைத் திட்டும் காட்சி அட்டகாசம்.

இயக்குனர் (Karzan Kader) நல்ல குறும்புக்காரர் என்பது பல காட்சிகளில் தெரிகிறது. கழுதைக்கு மைக்கேல் ஜாக்சன் எனப்பெயர் வைப்பதும், அதன் நெற்றியில் ‘BMW’ என எழுதியிருப்பதும் அக்மார்க் குசும்புத்தனங்கள். அதேபோல ஜானா சிறுநீர் கழித்துக்கொண்டே மைக்கேல் ஜாக்சன் மாதிரி நடனமாடிக் காண்பிப்பதும், அதற்கேற்றவாறு கழுதை கத்துவதும் பகடியின் உச்சகட்டம். நாட்டின் எல்லைக்கோடு அருகே பாதுகாவலுக்கு நிற்கும் ராணுவ அதிகாரிகளின் முன்னாடி கழுதையுடன் தெனாவெட்டாகச் சென்று, “கொஞ்சம் வழிவிடுறீங்களா ? நானும் என் அண்ணனும் அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம்” என்று கேட்கும் காட்சி அட்டகாசம்.

செம்மண் புழுதிக்காடான ஈராக் நாட்டை அப்படியே அழகாக அள்ளிக்கொண்டுவந்திருக்கிறது ஒளிப்பதிவாளரின் கேமரா. கண்களில் எடுத்து ஒத்திவைத்துக்கொள்ளலாம் போல அவ்வளவு அருமையான ஒளிப்பதிவு, அதற்கேற்றாற்போலப் பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடும் பிண்ணனி இசை, அலுக்காத வகையில் படம் வேகமாகச் செல்ல உதவும் படத்தொகுப்பு எனப் படத்தின் அத்தனை அம்சங்களுமே படத்தை வெகுவாக உயர்த்திப் பிடிக்கின்றன.

படம் முழுவதும் நமக்குப் பலவிதமான உணர்ச்சிகள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிரிப்பு, அழுகை, நெகிழ்ச்சி, அன்பு, பரிதாபம், புன்னகை, ஏமாற்றம், பாசம், சோகம் என அனைத்துவிதமான உணர்ச்சிகளும் கலந்த கலவை இந்தப்படம். படம் படு உற்சாகமாகச் சென்றாலும், படம் முழுவதும் ஒரு மென்சோகம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அது நமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அடுத்த வேளை சாப்பாடுக்குக் கூட வழியில்லாத இரண்டு சிறுவர்கள் எந்தவொரு கவலையுமின்றி வாழ்க்கையை இவ்வளவு நம்பிக்கையுடன் எதிர்கொண்டு பயணிக்கிறார்களே என்று, படம் பார்க்கும் பார்வையாளர்களான நம் மனசுக்குள்ளும் நம்பிக்கை ஊற்றுப் பெருகும். உற்சாகம் அலைகடலெனத் திரண்டுவரும். எவ்வளவு பெரிய தடைக்கற்களையும் உடைத்தெறியும் தைரியம் அதிகரிக்கும். இந்தப்படம் வாழ்க்கைக்கு ஓர் உற்சாக ஊற்று. க்ளைமாக்ஸ் பார்த்து முடிக்கும்போது நமக்கு வாழ்க்கையின் மீதான பார்வையே மாறும். மனசு முழுக்க அன்பும், மனிதாபிமானமும் பெருக்கெடுத்து ஓடும்.

சென்ற வருடம் (2013) பெங்களூருவில் நடந்த உலகத் திரைப்படவிழாவில் இந்தப்படம் திரையிடப்பட்ட போது ஒட்டுமொத்தப் பார்வையாளர்களின் மனதையும் கவர்ந்து பெருவாரியான ஆதரவைப்பெற்ற ஒரே படம் இதுதான். அப்படிப்பட்ட அருமையான இந்தத் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாகத் தவறவிடாதீர்கள்.

Bekas (2012) – வாழ்க்கை வாழ்வதற்கே..!!டிஸ்கி : படத்தின் கதையைப் பற்றி மூச்சுக்கூட விடாததால் ஸ்பாய்லர்கள் பயமின்றித் தைரியமாக இந்தப்பதிவைப் படிக்கலாம்.

இன்டர்ஸ்டெல்லர் படத்தின் அறிவிப்பு எப்போது வெளியானதோ அப்போதிருந்தே, எனக்கு இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. காரணம், படம் எனக்கு மிகப்பிடித்த சயின்ஸ் பிக்சன் ஜானரில் இருக்கிறது என்பது மட்டுமல்ல. படத்தில் வார்ம்ஹோல், டைம் ட்ராவல் போன்ற எனக்குப் பிடித்த சில கான்சப்டுகள் இருப்பதாலும் தான். அது மட்டுமில்லாமல் ஜோனதன் நோலன் எழுதிய இந்தக்கதையைப் படமாக இயக்குவதற்கு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 2006-லேயே விருப்பப்பட்டிருக்கிறார். ஆனால் ஒருசில காரணங்களால் அது முடியாமல் போகப் பிறகு கடைசியில் க்றிஸ்டோபர் நோலனிடமே வந்து சேர்ந்திருக்கிறது. நோலன் சகோதரர்கள் இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி வெளிவரும் சயின்ஸ்பிக்சன் படமென்றால் எதிர்பார்ப்பிற்குச் சொல்லவா வேண்டும் ?

இந்தப்படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், நோலனின் மற்ற படங்கள் எனக்கு எந்தளவுக்குப் பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறேன். இன்றுவரையிலும், நான் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த டாப் ஃபேவரிட்/பெஸ்ட் படங்களைப் பட்டியலிடச் சொன்னால் அதில் எப்போதுமே முதலிடத்தைப் பெறுவது "The Prestige (2006)" படம் தான். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு புது எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அப்படிப்பட்ட மேஜிக்கான படம் அது. என்னைப் பொறுத்தவரையில் நோலனின் படைப்புகளில் உச்சமாகக் கருதுவது அந்தப்படத்தைத் தான். அந்தளவுக்குப் பல விஷயங்கள் அந்தப்படத்தில் இருக்கின்றன.

எனக்குப்பிடித்த நோலன் படங்களை வரிசைப்படுத்த வேண்டுமென்றால் அந்த வரிசை கிட்டத்தட்ட இப்படி இருக்கும்.
The Prestige (2006)
Memento (2000)
The Dark Knight (2008)
Following (1998)
Inception (2010)
Batman Begins (2005)
Insomnia (2002)
The Dark Knight Rises (2012)
இதில் இன்டர்ஸ்டெல்லர் எந்த இடத்தைப் பிடிக்கப்போகிறது என்பதை இந்தப்பதிவின் முடிவில் காண்போம்.

படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் வார்ம்ஹோல் பற்றியும், ப்ளாக்ஹோல் பற்றியும் கருந்தேள் அண்ணன் எழுதியுள்ள இந்த இரண்டு பதிவுகளையும் அவசியம் படிக்க வேண்டும். மிக மிக அற்புதமாக எல்லோருக்கும் புரியும்படி தமிழில் எழுதப்பட்டுள்ள அறிவியல் கட்டுரைகள் இவை. எனது ரெஃபரன்சிற்காக இங்கே சேமித்து வைத்துக்கொள்கிறேன். இதுவரை படிக்காதவர்கள் அவசியம் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வார்ம்ஹோல், ப்ளாக்ஹோல் பற்றித் தெரியாதவர்கள் இந்தக்கட்டுரைகளைப் படித்துக் கொஞ்சம் தெரிந்துகொண்ட பின்பு படத்தைப் பார்த்தால் இன்னும் அதிகமாக ரசிக்கலாம்.
http://karundhel.com/2014/02/interstellar-time-travel.html
http://karundhel.com/2014/02/interstellar-black-holes.html

படம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், விசுவலாக மிகப்பெரிய திருப்தியைக் கொடுத்தது. வார்ம்ஹோல், வேற்றுக்கிரகங்கள், ஸ்பேஸ் ஸ்டேஷன் என ஒவ்வொன்றுமே சிலிர்க்க வைக்கும் விசுவல் ட்ரீட்டாக அமைந்து படத்தைப் பெரியளவில் உயர்த்திப் பிடிக்கிறது. எமோஷனலாகவும் படம் அருமையாக இருந்தது. அப்பா-மகள் பாசத்தைக் கொஞ்சம் அதிகமான எமோஷனலுடனே காட்சிப்படுத்தியிருக்கிறார். நோலனின் படத்தில் இது கொஞ்சம் புதிய விஷயம் தான். அதேபோல மற்ற படங்களில் எல்லாம் இல்லாதவகையில், இந்தப்படத்தில் ஒருசில இடங்களில் புன்னகைக்க வைக்கும் அளவுக்கு லேசான ஹுமர் இருக்கிறது. அதுவுமே புதிய விஷயம் தான்.

படம் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரு நல்ல சயின்ஸ்பிக்சன் அட்வெஞ்சரஸ் ட்ரிப்பாக, விசுவல் ட்ரீட்டாக இருக்கிறது. நோலன் படம் என்று சொன்னால் அதில் ஒருசில அம்சங்கள் தவறாமல் இடம்பெறும். அப்படிப்பட்ட நோலனின் ட்ரேட்மார்க் காட்சிகள் அனைத்தும் இந்தப்படத்திலும் இருக்கின்றன. உதாரணத்திற்கு,

1.படத்தின் இடையில் வரும் ஒரு முக்கியமான காட்சியோ, வசனமோ படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிடும். உதாரணத்திற்கு, "Are you watching closely" இந்த வசனத்தைக் கேட்டவுடனே உங்களுக்குப் புல்லரித்தால் அதுதான் நோலனின் அறிவுஜீவித்தனம். அந்த வசனத்தைக் கேட்டவுடனேயே 'The Prestige' மொத்தப்படமும் கண் முன்னால் விரிகிறதல்லவா ? அப்படி ஆரம்பத்தில் வரும் அந்தக் காட்சியோ, வசனமோ வெகுசாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் அதுவே படத்தில் மறுபடியும், சரியான இடத்தில் வரும்போது அது வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுக்கும். நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதேபோன்றதொரு வசனம் இந்தப்படத்திலும் உண்டு. படத்தின் ஆரம்பத்திலேயே வரும் அந்த வசனம் தான் படத்தின் முடிவும் கூட. நோலனின் தீவிர ரசிகர்கள் வெகு எளிதாக யூகித்துவிடக்கூடிய அம்சமும் கூட.

2.மற்றொரு முக்கியமான ட்ரேட்மார்க் அம்சம். படத்தின் கதையில், ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் காட்சிகளை அடுத்தடுத்து பேரலலாகக் காண்பித்து ரசிகர்களின் எமோஷனலை அதிகரிப்பது. நோலனின் மேக்கிங்க் ஸ்டைலில் எனக்கு மிகவும் பிடித்த ஓர் அம்சமும் கூட. நோலனின் எல்லாப் படங்களிலுமே இந்தவகையான எடிட்டிங்கைப் பார்க்கலாம். இன்சப்ஷன் படத்திலும், ப்ரெஸ்டீஜ் படத்திலும் இந்தப் பேரலல் எடிட்டிங் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நோலனின் ஒவ்வொரு படத்தின் க்ளைமாக்சுமே இந்தவகையான எடிட்டிங்கில் தான் அமைந்திருக்கும். இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.


இந்த Cross cutting parallel action editing இந்தப்படத்திலும் மிக முக்கியமான அம்சமாக இடம்பெறுகிறது.

3.நோலனின் ஒவ்வொரு படத்திலும், ஏதேனும் ஓர் இசைக்குறிப்புப் படம் நெடுகிலும் அவ்வப்போது பிண்ணனியில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்தப்படத்தில் வரும் அந்தப் பிண்ணனி இசையைக் கீழே இருக்கும் யூட்யூப் லிங்கில் கேட்கலாம். ஹான்ஸ் சிம்மரின் அதகளத்தை உணருங்கள்.


இதைத்தவிரக் கதையமைப்பிலும், கதாபாத்திர உருவாக்கத்திலும் ஏகப்பட்ட ட்ரேட்மார்க்குகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் இப்போது விவாதித்தால் அது இண்டர்ஸ்டெல்லர் படத்திற்கு ஸ்பாய்லர்களாய் அமைய வாய்ப்பிருப்பதால், இன்னொரு பதிவில் ஸ்பாய்லர் அலெர்ட்டுடன் விரிவாகப் பார்க்கலாம்.

திரைக்கதை முழுவதுமே நோலனின் டைரக்டர் டச் இருந்துகொண்டே இருக்கிறது. படம் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு காட்சியும் இது நோலன் படம் என்று வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு படத்தின் முடிவிலும் இருக்கும் அந்த ட்விஸ்ட் இந்தப்படத்திலும் இருக்கிறது. மெமண்டோ, ப்ரெஸ்டீஜ், ஃபாலோயிங் போன்ற படங்களிலெல்லாம் படம் எந்தப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறதோ அந்தப்புள்ளியிலேயே வந்து முடியும். கதை ஒரு சுற்று சுற்றிவந்து அந்தப்புள்ளியில் ஒரு முழுமை பெறும். அதேதான் இந்தப்படத்திலும் நடக்கிறது. (இதற்கு மேல் பேசினால் ஸ்பாய்லர் வந்துவிடும் என்பதால் அடுத்த விஷயத்திற்கு நகர்ந்துவிடுவோம்)

படத்தின் பிண்ணனி இசையில் ஹான்ஸ் சிம்மர் கலக்கியிருக்கிறார். படத்தைப் பலமடங்கு உயர்த்திப் பிடிப்பதில் பிண்ணனி இசை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்தால் அந்த விசுவல்களும், பிண்ணனி இசையும் சேர்ந்து நம்மை வேறொரு உலகிற்கே அழைத்துச்செல்வதை உணரமுடியும். அந்தளவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

இதுவரை படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்களாகவே சொல்லிக்கொண்டு வந்தேன். இனி படத்தில் எனக்கு ஏமாற்றங்களை அளித்த விஷயங்களைப் பற்றிப்பார்ப்போம்.

ஆரம்பத்தில் இண்டிபெண்டண்ட் ஃபிலிம்மேக்கராக இருந்த நோலன் தனது படத்திற்காக எதையுமே காம்ப்ரமைஸ் செய்துகொண்டதில்லை. ரசிகர்களுக்குப் புரிய வேண்டுமே என்பதற்காக எந்த சீனையும் விளக்கிச் சொன்னதில்லை (Spoon Feeding). இதற்கு நல்லதொரு உதாரணம் மெமண்டோ. நான்-லீனியர் என்ற திரைக்கதை உத்தியை மட்டும் வைத்துக்கொண்டு ரசிகர்களைத் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்க நோலனால் மட்டுமே முடியும். பல்ப் ஃபிக்சனில் குவண்டின் நான்-லீனியரை மிக அற்புதமாக உபயோகித்திருந்தாலும், மெமண்டோ தான் நான்-லீனியர் திரைக்கதை தேவைப்படுவதற்கான கதையைக் கொண்டிருந்தது. படம் பார்த்து முடித்ததும் உடனே நம் மூளையைக் கசக்கி யோசிக்க வைத்தது. படம் பார்க்கும் நம்மையும்  short term memory loss நோயாளியாக்கியது. எந்த ஓர் இடத்திலும் ஸ்பூன் ஃபீடிங் காட்சிகள் இருக்கவே இருக்காது.

ஆனால் அதுவே பிற்காலத்திய படங்களைப் பார்த்தால் நோலன் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துகொண்டு ரசிகர்களுக்குப் பிடிக்கிற மாதிரியான, புரியும்படியான காட்சிகளை அமைக்க ஆரம்பித்தார். என்னைக் கேட்டால் இன்சப்ஷன் படமே கூட இம்மாதிரியான ஸ்பூன் ஃபீடிங் படம் தான். அதே போல ஆரம்பகாலத்தில் கதையில்/கான்சப்டில் மட்டும் கவனம் செலுத்திய நோலன், பிற்காலத்தில் கமர்சியல் அம்சங்கள் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார். அதற்குமே கூட இன்சப்ஷன் படத்தை ஆரம்பமாகக் கருதலாம். அது "The Dark Knight Rises" படத்தில் இன்னும் வளர்ச்சி பெற்று இப்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்னவென்று சின்னப்பிள்ளை கூடச்சொல்லிவிடும்.

ஹாலிவுட்டில் ஸ்டுடியோக்கள் வைத்தது தான் சட்டம் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். அதன் பிடியில் சிக்கிச் சீரழிந்த நல்ல இயக்குனர்கள் ஏராளம். சுதந்திரமாக, தான் படமாக எடுக்க நினைத்ததை அப்படியே எடுப்பது நோலன் போன்ற பெரிய இயக்குனர்களுக்கே சவாலாக இருக்கிறதென்றால் இந்த ஸ்டுடியோக்களின் கிடுக்குப்பிடி எப்படி என்று தெரிகிறதல்லவா. ஆனாலும் ஸ்டுடியோக்களுக்கு வளைந்துகொடுக்கும் அதே நேரத்தில் தன்னால் முடிந்தவரை தனது அக்மார்க் முத்திரைகளைப் படத்தில் நுழைத்து விடுகிறார். இருந்தாலுமே இந்தப்படத்தில், ஸ்டுடியோக்களின் பிடியில் சிக்கிக்கொண்டு PG-13 பிளாக்பஸ்டர் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் அவரைப் பாடாய்ப்படுத்துவதை அப்பட்டமாகப் பார்க்க முடிகிறது.

இந்தப்படத்தில் மிகமுக்கியமான சயின்ஸ்பிக்சன் கான்சப்டாகச் சொல்லப்பட்டிருப்பது வார்ம்ஹோல் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் கால வித்தியாசம் போன்றவை தான். வார்ம்ஹோல் பற்றிப் பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கும் அறிவியல் அறிஞர் கிப் தோர்ன் இந்தப்படத்தில் வேலை செய்திருக்கிறார். அவரின் ஆலோசனைக்கேற்ப தான் படத்தின் ஸிஜி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய கருத்துக்களை மையமாக வைத்துத்தான் வார்ம்ஹோல் பற்றிய காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் புதிதாக எதுவுமே இல்லை. வார்ம்ஹோல் என்றால் என்ன என்று அவர்களே படத்தில் விளக்கம் கொடுக்கிறார்கள். ஒரு சாதாரண மனிதனுக்கு எந்தளவுக்கு வார்ம்ஹோல் பற்றிய அறிவு இருக்குமோ அதைத்தான் படத்திலும் காண்பிக்கிறார்கள். அதைத்தாண்டிப் புதியதாக எந்தவொரு கற்பனையும் இருந்ததாகத் தெரியவில்லை. வார்ம்ஹோல் அருகே செல்லும்போது காலம் கண்டபடி இயங்கும். பூமியில் நடக்கும் காலத்திற்கும் வார்ம்ஹோல் அருகே செல்லும்போது நடக்கும் காலத்திற்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. அங்கே ஒரு மணி நேரம் செலவிடுவது என்பது பூமியில் 7 வருடங்களுக்குச் சமம் போன்ற காட்சிகளெல்லாமே ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தான்.

இங்கே நமது தளத்திலேயே கூட இதுபோன்ற ஒரு கால மாற்றத்தைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். இங்கே க்ளிக் பண்ணிப் படிக்கலாம்.

இதைத்தவிரவும் முக்கியமான கான்சப்டுகளாகக் காட்டப்பட்ட மூன்றாவது பரிமாணம், ஐந்தாவது பரிமாணம் எல்லாமே ஏற்கனவே பல படங்களில் காட்டப்பட்ட ஒரு விஷயம் தான். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அப்படியே அந்த விஷயத்தைப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வளவு தான். அந்தக்காட்சிப்படுத்தல் தான் படத்தில் அற்புதமாக, மனதைக் கொள்ளை கொள்ளும்படி இருந்ததே தவிர, அந்தக் கான்சப்டுகளில் ஏதும் புதுமை இல்லை. படத்தின் கதையில் எந்தெந்த இடத்திலெல்லாம் அறிவியல் கான்சப்டுகள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் ஒன்றைப் புகுத்தி திரைக்கதை எழுதியுள்ளார்கள்.

இதைவிட நான் பார்த்த பல லோ பட்ஜட் படங்களில் அருமையான சயின்ஸ்பிக்சன் கான்சப்டுகள் மிக அருமையான கற்பனையுடன் வித்தியாசமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அந்தப் படங்களையெல்லாம் கூடியவிரைவில் நம் தளத்திலேயே விரிவாகப் பார்க்கலாம்.

இன்னும் தெளிவாகப் புரியவேண்டுமென்றால், மெமண்டோ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஷார்ட் டெர்ம் மெமரிலாஸ் என்பது வெறும் ஒரு கான்சப்ட். அதை மட்டுமே சொல்லியிருந்தால் நமக்கு எவ்வளவு போரடித்திருக்கும். ஆனால் நம்மையும் ஷார்ட் டெர்ம் மெமரிலாஸ் நோயாளியாக்கும் அளவுக்கு அதில் கதையும், திரைக்கதையும் இருந்ததல்லவா. அதேபோல ப்ரெஸ்டீஜ் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மேஜிக் என்பது ஒரு சாதாரணக் கலை. அவ்வளவுதான். ஆனால் படமே மேஜிக்காய் அமைந்து நம்மை ஆரவாரப்படுத்தியது அல்லவா.

கனவு என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். தினமும் நாம் கனவு கண்டாலும் அதற்கு மேல் அதைப்பற்றி நாம் யோசிப்பதில்லை. கனவு என்பது நம் ஆழ்மனதில் பொதிந்திருக்கும் நினைவுகள் என்றும், கனவு காணும் நேரத்தைவிடக் கனவுக்குள் இருக்கும் நேரம் அதிகமாக இருக்கும் என்றும் மட்டும் தான் சாதாரண ரசிகர்களாகிய நமக்குத் தெரியும். ஆனால் கனவுக்குள் கனவு, அதற்குள் ஒரு கனவு என்ற வித்தியாச சிந்தனை நோலனுக்கு மட்டுமே தோன்றும். (இந்த இடத்தில், வசதியாக paprika-2006 படத்தை மறந்துவிடுவதே நோலன் ரசிகர்களாகிய நமக்கு நல்லது)

அப்படி ஒரு சாதாரண கான்சப்டை அசாதாரணமாக மாற்றும் நோலனின் மேஜிக் இந்தப்படத்தில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தப்படத்தில் காட்டப்படும் எல்லா அறிவியல் கான்சப்டுகளுமே மேலோட்டமாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. சில அறிவியல் கான்சப்டுகள் உண்மைக்குப் புறம்பாக இருப்பதைப் பற்றியும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. ஒரு நோலனின் தீவிர ரசிகனாக (நன்றாகக் கவனியுங்கள். கண்மூடித்தனமான ரசிகன் இல்லை) என்னால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் சில நாட்கள் செல்லட்டும். ஸ்பாய்லர் அலெர்ட்டுடன் விரிவாக இன்னொரு முறை இந்தப்படத்தைப் பற்றி விவாதிக்கலாம். முடிவாக, இந்தப்படம் பொதுவான சினிமா ரசிகர்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய படமாக இருக்கலாம். நோலனின் தீவிர ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது. அட்லீஸ்ட் எனக்கு.

எனக்குப் பிடித்த நோலனின் படவரிசையில் இந்தப்படம் கண்டிப்பாக டாப்-3 க்குள் கூட நுழைய முடியாது. ப்ரெஸ்டீஜ், மெமண்டோ படமே இன்னும் பல வருடங்களுக்கு என்னை ஆக்கிரமிக்கும் படங்களாக இருக்கும். நோலனின் சிறந்த படம் இண்டர்ஸ்டெல்லர் இல்லையென்றாலும், மோசமான படமும் இல்லை. கண்டிப்பாக அந்த விசுவல்களுக்காவே படத்தை நல்ல ப்ரொஜக்சன், சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் பார்க்க வேண்டும். நானும் அதுபோன்றதொரு நல்ல தியேட்டரில் இன்னொருமுறை பார்ப்பேன் என்றே நினைக்கிறேன்.

Interstellar (2014) - Mankind was born on Earth. It was never meant to die here.

பின்குறிப்பு : படத்தில் சொல்லப்படும் சில 'கருத்து கந்தசாமி' டைப் கருத்துக்களை வைத்து நோலனின் படம் சிறந்த படம் என்று ஜல்லியடிக்க முடியாது என்பதால் அவற்றைப்பற்றி இங்கே எதுவும் சொல்லவில்லை. அதனால் அவற்றைப்பற்றி ஏன் சொல்லவில்லை என்று தயவுசெய்து கேட்காதீர்கள் அன்பர்களே. :)


நண்பர்கள் பல வாரங்களுக்கு முன்பே இந்த டிவி தொடரைப் பார்க்கச் சொல்லி பரிந்துரைத்து இருந்தாலும், சில நாட்களுக்கு முன்பு தான் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனைப் பார்த்ததிலிருந்து கலங்கிப் போயிருக்கிறேன். இன்றைய சமூக அவலங்களை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்லும் ஓர் அருமையான தொடர் இது. ஒவ்வொரு எபிசோடு முடிந்ததும் இப்படிப்பட்ட அவலமான சமூகத்தின் ஒரு பகுதியாக நாமும் இருக்கிறோமே என்று பார்க்கிற ஒவ்வொருவரையும் வருத்தப்பட வைக்கிற மாதிரியான கதையமைப்பைக் கொண்டது. இதைப்பார்த்து முடித்த எனக்குப் பளார் பளாரென்று யாரோ செருப்பால் அடித்தது போல் இருந்தது.

ஓவர் பில்டப் எல்லாம் இல்லை. நான் பார்த்தவரையில் உண்மையிலேயே பிரில்லியண்டான ஒரு டிவி தொடர் இது. சமூக மாற்றத்திற்கான அரசியலைப் பற்றிப் பேசி, பொழுதுபோக்குக்காகப் படம் பார்க்கிற ஒவ்வொரு ரசிகனையும் கொஞ்சமாவது யோசிக்க வைக்கிற வெகுசில படைப்புகளில் இதுவும் ஒன்று. மொத்தம் 2 சீசன்கள். சீசனுக்கு 3 எபிசோடுகள் வீதம் இதுவரை மொத்தம் 6 எபிசோடுகள் வந்துள்ளன. ஒவ்வொரு எபிசோடும் ஒரு சிறுகதை போல, ஆறுமே வெவ்வேறு கதைகள். அவை எல்லாவற்றிற்கும் இடையேயான ஒரே தொடர்பு டெக்னாலஜியும் சமூக அவலமும் மட்டுமே.

டெக்னாலஜி என்பது மனிதர்களின் வசதிக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு விஷயம். நாம் செய்யும் கடினமான வேலைகளை எளிதாக்க உதவி செய்யும் ஒரு கருவியே டெக்னாலஜி. ஆனால் இப்போதிருக்கும் இந்தச் சமூகம் டெக்னாலஜியை அப்படியா பயன்படுத்துகிறது. நமக்கு உதவிசெய்ய வந்த டெக்னாலஜிக்கு இப்போது நாம் அடிமையாகிக் கிடக்கிறோம். உண்மையான சமூகம் என்பது ரத்தம், சதையுடைய உயிருள்ள மனிதர்களின் உறவால் பிணைக்கப்பட்டது. ஆனால் இப்போதிருக்கும் சமூகம் வெறும் ஃபேஸ்புக்கால் அல்லவா பிணைக்கப்பட்டிருக்கிறது.

வசதிக்காக உடுத்தும் ஆடையில் தான் நம் கலாச்சாரம் உள்ளது எனச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். மனிதனை மனிதன் மதிக்கக் கற்றுக்கொண்ட நம் உண்மையான கலாச்சாரம் எங்கே போனது ? ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும், அன்பு செலுத்த வேண்டும், உறவுகளைப் பேண வேண்டும், கூடி வாழ வேண்டும், பிறருக்கு உதவிசெய்யும் மனப்பான்மை வேண்டும் போன்ற நம் சமூகப் பண்புகள் இன்றைக்கு ஏன் எல்லோரிடமும் தேடும் நிலையில் உள்ளது. 15 நிமிடத்திற்கும் மேலாக ஒரு மனிதன் புலியின் கூண்டில் மாட்டிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது அனைவரும் வீடியோ எடுப்பதில் தானே ஆர்வமாக இருந்தோம், அப்போது நம் கலாச்சாரத்தின் ஆணிவேரான மனிதாபிமானம் எங்கே போனது? தொலைக்காட்சிகளிலும் சோசியல் நெட்வொர்க்களிலும் அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அந்தப் பரிதாபத்தையும் காசாக்குவதில் தானே நாம் ஆர்வமாக இருந்தோம்.

பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் பெயர் கூடத் தெரியாது. வீட்டில் இருக்கும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு வெளியில் விளையாடக்கூட அனுப்புவது கிடையாது. பிள்ளைகள் ப்ளே ஸ்டேஷனில் விளையாடுவதைத்தான் பெருமையாகக் கருதுகிறோம். யாருக்காவது உதவி செய்தாலும் அதில் நமக்கென்ன ஆதாயம் என்பதைத்தான் முதலில் சிந்திக்கிறோம். மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை விட ட்விட்டர், யூட்யூப், ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிப்பதில் தான் அதிக மகிழ்ச்சி கொள்கிறோம். உறவினர்கள் வீட்டுக்கு வருவதைத் தொல்லையாகக் கருதுகிறோம். மனைவியிடம் கூட மனம் விட்டுப் பேசுவதில் தயக்கம் கொள்கிறோம். வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதைத் தேவையற்ற சுமையாகக் கருதுகிறோம். நண்பர்களைப் பார்த்தால் கண்டும் காணாமலே ஓடி ஒளிந்துகொள்கிறோம். டிவி, செல்போன், லேப்டாப் தான் நம்முடைய ஒட்டுமொத்த பொழுதுபோக்காக இருக்கிறது. உண்மையில் நாம் எங்கே தான் சென்றுகொண்டிருக்கிறோம் ? இப்படியே இருந்து என்னத்தைத்தான் சாதிக்கப் போகிறோம் ? நம்முடைய வாழ்க்கைமுறை அதலபாதாளத்திற்குச் செல்வது நமக்குக் கொஞ்சமாவது புரிகிறதா ? அல்லது புரிந்துகொள்ளத்தான் முயற்சிகள் எடுக்கிறோமா ?

இதையெல்லாம் நமக்குத் தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்து சமூக மாற்றத்திற்கான புரட்சிவிதையைத் தூவுகிறது இந்தத் தொடர். இந்தத் தொடரின் முதல் எபிசோடு கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும் அது சொல்லவரும் கருத்து மிகப்பெரியது. புலியிடம் மாட்டிக்கொண்ட சிறுவனின் வீடியோவிற்கும் இந்த எபிசோடிற்குமே கூட ஒரு பெரிய தொடர்பு உண்டு. முதல் எபிசோடின் முதல் ஐந்து நிமிடங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

ஓர் அதிகாலை நேரத்தில், இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கு அரசாங்க அதிகாரிகளிடமிருந்து ஒரு போன்கால் வருகிறது. முக்கியமான வீடியோ ஒன்று யூட்யூப்பில் தரவேற்றப்பட்டிருப்பதாகவும் அதில் பிரதமர் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். உடனே கிளம்பிச் சென்று அதிகாரிகளுடன் சேர்ந்து அந்த வீடியோவைப் பார்க்கிறார். அந்த வீடியோவில் இங்கிலாந்து நாட்டின் இளவரசியை யாரோ கடத்தி வைத்துக் கட்டிப்போட்டிருப்பது தெரிகிறது. இளவரசியைக் கொல்லப்போவதாக இளவரசியை வைத்தே சொல்லவைக்கிறார்கள், இளவரசியைக் கொல்லாமல் உயிரோடு விடவேண்டுமென்றால் அதற்கு அவர்கள் வைக்கும் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.
அந்த வேண்டுகோள் என்னவென்றால், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் சாயங்காலம் 4 மணிக்கு அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நேரடியாகத் தோன்றி, ஒரு பன்றியுடன் உறவுகொள்ள வேண்டும். என்னாது ???? ஆம். நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். அதுதான் கடத்தியவர்களின் வேண்டுகோள் அல்லது மிரட்டல். அதைச் செய்யாவிட்டால் இளவரசி கொல்லப்படுவாள். இதைக்கேட்டு அதிர்ச்சியாகிறார் பிரதமர். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

விறுவிறுப்பாகச் செல்லும் இந்த எபிசோடின் முடிவில் அந்த வேண்டுகோளுக்கான காரணம் என்னவென்று தெரியவரும்போது தான், மேலே சொன்னேனே நெற்றிப்பொட்டில் அடித்தமாதிரி என்று, அப்படி நம்மை யோசிக்க வைக்கும். மொத்தம் 6 எபிசோடுகள். ஒவ்வொன்றும் 45 நிமிடங்கள். கண்டிப்பாகத் தவறவிடக்கூடாத ஒரு தொடர் இது.

ஒவ்வொரு எபிசோடுமே ஏதாவது ஒரு விதத்தில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். நம் மனதைப் பாதிக்கும் வகையில் இருக்கும். அதற்குக் காரணம் இப்படிப்பட்ட ஓர் அவலமான வாழ்க்கை முறையைத்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற சுயபுரிதல் தான். அதைப் புரியவைக்கும் கருவியாக இந்தத்தொடர் இருக்கும். ஒருசில எபிசோடுகள் கொஞ்சம் அட்வான்ஸ்டாக எதிர்காலத்தில் நடப்பது போலக் காட்டப்பட்டிருந்தாலும் அது சொல்லவரும் கருத்து நம்முடைய இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும்.

மற்றொரு சிறப்பம்சம், இந்தத்தொடரின் மையக்கருத்தை அப்படியே பிரதிபலிக்கும் இதனுடைய டைட்டில். Black Mirror. கருப்புக்கண்ணாடி எங்கெல்லாம் இருக்கும் ? செல்போன், லேப்டாப், டிவி இன்னும் பல டிஜிட்டல் கருவிகளின் மானிட்டர்களில் இருக்கும். இதுபோன்ற கருவிகளின் பிடியில் நம் ஒட்டுமொத்த சமூகமும் சிக்கிக்கொண்டு தவிப்பதைத்தான் டைட்டில் பிரதிபலிக்கிறது. டைட்டில் பற்றி இந்தத் தொடரை உருவாக்கிய சார்லி ப்ரூக்கர் இதைத்தான் சொல்லியிருக்கிறார். "The 'black mirror' of the title is the one you'll find on every wall, on every desk, in the palm of every hand: the cold, shiny screen of a TV, a monitor, a smartphone".

இதுபோன்ற ஒரு தொடரை உருவாக்குவதற்குத் தில் வேண்டும். அப்படித் தில்லுடன் அருமையாக எழுதி உருவாக்கிய இந்தத்தொடரின் க்ரியேட்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிற, புரட்சியைத் தூண்டுகிற இதுபோன்ற ஒரு நல்ல தொடர், பிரபல தொலைக்காட்சியான பி.பி.சி.யில் வரவில்லை. அரசியல் பேசுகிற இப்படி ஒரு தொடர் சேனல் 4-லிருந்து வந்ததில் ஆச்சரியமே இல்லை. இப்போதுவரை 2 சீசன்கள் மட்டுமே வந்துள்ளன. அடுத்த சீசன் வந்தால், அதைப்பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.

தற்போது இந்த வருடம் கிறிஸ்துமஸ் லீவுக்கு ஏதோ ஸ்பெஷல் எபிசோடு வெளிவருவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. அதேபோல இந்தத்தொடரின் "The Entire History of You" என்ற எபிசோடைப் பார்த்த Robert Downey, Jr. (நம்ம அயர்ன் மேனே தான்) அதன் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு அதைப்படமாக்குவதற்கான உரிமையை வாங்கியுள்ளார். வார்னர் பிரதர்சும், அவரது சொந்த ப்ரொடக்சன் கம்பெனியும் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கப் போகின்றன.

சிறந்த டிவி மினிதொடருக்கான எம்மி விருதையும் இந்தத் தொடர் பெற்றுள்ளது. இதற்கு மேல் தொடரின் கதையைப் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் சொல்லப் போவதில்லை. அந்த அனுபவத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். பார்த்துவிட்டுத் தயவுசெய்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Black Mirror - A television anthology series that shows the dark side of life and technology.


அட்டகத்தி படத்தில் சென்னைப் புறநகர்ப்பகுதி மக்களின் வாழ்வியலைப் படமாக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் இரண்டாவது படமான மெட்ராஸ் படத்தைக் கண்டிப்பாகத் தியேட்டரில் சென்று தான் பார்க்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தேன். அதேபோல சென்ற வாரம் சென்று பார்த்தாகிவிட்டது. கடைசியாகப் பார்த்த படங்களில் ஜிகர்தண்டா தான் மனசுக்கு நிறைவான படமாக இருந்தது. அதற்குப்பிறகு இடையில் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" படத்தை வெகுவாக ரசித்துப்பார்த்தேன். அதற்குப் பிறகு இப்போது தான் மனதுக்கு நிறைவான நல்ல படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது.

எல்லோருக்கும் வணக்கம் என்று சாதாரணமாக ஆரம்பித்து, இரண்டு தலைமுறையாக நடக்கும் கோஷ்டி மோதலை முதல் 10 நிமிடத்திலேயே வாய்ஸ் ஓவரில் சொல்லிமுடித்து படம் இப்படித்தான் போகப்போகிறது என்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு முன்னறிவிப்பை செய்துவிடுகிறார் இயக்குனர். ஆனால் அந்த 10 நிமிடத்திலேயே அனைத்து கேரக்டர்களையும் அறிமுகம் செய்து வைத்து அவர்கள் எப்படிப்பட்ட கேரக்டர்கள் என்பதையும் ஆளுக்கொரு வசனம் கொடுத்து பேசவைத்து நமக்கு புரிய வைத்து விடுகிறார்.

1990ல் மெட்ராஸ் வியாசர்பாடி பகுதியில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் கிருஷ்ணப்பர் மற்றும் கருணாகரன். இரண்டு பேரும் ஒரு பிரச்சனையில் சண்டை போட்டு ஆளுக்கொரு கட்சியாகப் பிரிந்துவிட, அதற்கப்புறம் இரண்டு பேருக்குமிடையில் யார் அதிகாரத்தைப் பிடிப்பது என்று போட்டி, விரோதம் உண்டாகிவிடுகிறது. அவர்கள் இருக்கும் ஏரியாவை ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்துக்கொண்டாலும் ஹவுசிங் போர்டில் இருக்கும் ஒரு சுவரைப் பிடிப்பதில் மட்டும் இருவருக்கும் இடையில் சண்டை உருவாகிறது.

அதில் அந்த ஏரியாவைச் சேர்ந்த செங்கன் என்பவனை கிருஷ்ணப்பர் மகன் கண்ணன் கொலை செய்துவிட, அதற்குப் பதிலுக்கு கருணாகரன், மாங்கா என்பவனைத் தூண்டிவிட்டு கிருஷ்ணப்பரைக் கொலை செய்ய வைத்து விடுகிறான். பதிலுக்கு மாங்காவையும் அவனது பையனையும் கொலை செய்கிறான் கண்ணன். அதற்குப் பிறகு இரண்டு பக்கங்களிலும் சிலபல கொலைகள் நடக்கின்றன. ஒரு கட்டத்தில் கண்ணனுக்கு வடசென்னை மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்க, அதன் மூலம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹவுசிங் போர்டு சுவரை எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் கைப்பற்றி அதில் தனது அப்பா கிருஷ்ணப்பர் படத்தை வரைந்து வைக்கிறான்.

சுவர் பறிபோய்விட்டதே, தோற்றுவிட்டோமே என்கிற ஏக்கத்திலேயே கருணாகரன் இறந்துவிட, அவரது பையன் மாரி ஹவுசிங் போர்டு தலைவனாகிறான். கட்சியிலும் பொறுப்பைப் பிடிக்கிறான். அதே சமயம் சுவர் முன்னாடி ஒருசில விபத்துக்களின் மூலம் உயிர்ப்பலி நடக்க, எல்லோரும் அந்த சுவரைப் பார்த்து காவு வாங்குற சுவர் என்று பயப்பட ஆரம்பிக்கின்றனர். அதைவைத்தே தன் அப்பா படத்தை அழியாமல் காத்துக்கொள்கிறான் கண்ணன். ஆனால் எப்படியாவது அந்த சுவரைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று வெறியோடு காத்துக்கொண்டிருக்கிறான் மாரி. இப்படி இரண்டாவது தலைமுறையிலும் தொடரும் இந்த விரோதத்தினால், அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் போட்டியில் என்ன நடக்கிறது என்பதே ரத்தமும் சதையுமான மீதிப்படம். 

முதல் 5 நிமிடங்களில் இந்தக்கதையைச் சொல்லிவிட்டு "சென்னை வடசென்னை" என்ற அட்டகாசமான பாடலுடன் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கிறது படம். பாடலின் இடையிலேயே தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி விடுகிறார் இயக்குனர். "எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்கதானே அட்ரசு" என்ற வெறித்தனமான பாடல் வரிகளின் பிண்ணனியில் வெள்ளை வேஷ்டி சட்டையுடன், மீசை தாடியோடு சிரித்த முகமாக அறிமுகமாகும் 'அன்பு' கேரக்டருடன், பார்த்த மாத்திரத்திலேயே ஒன்றிவிட முடிகிறது. மாரி கும்பலைச் சேர்ந்த அன்பு, 

"அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுறதுல தான் நம்ம மக்களோட விடுதலை. அந்த அதிகாரத்தை நான் புடிச்சே தீருவேன்"

என்று முழங்கும் அந்த முதல் வசனத்திலேயே அந்த கேரக்டர் எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. அதே போல,

"யாருக்குமே பயப்படாத போலிஸ்காரன் நம்மளைப் பாத்து பயப்படறான்னா ஏன்..? அரசியல்... அரசியல் பலம்"

என்று சொல்லிக்கொண்டே அறிமுகமாகும் மாரி,

"நான் பெரிய ஐட்டங்காரன் ஆவனும். என்னைப் பாத்தாலே எல்லாரும் அலறனும். நான்தான் எல்லாம்"

என்று அறிமுகமாகும் கண்ணன் கும்பலைச் சேர்ந்த விஜி, என்ன சொல்கிறார் என்றே புரியாதபடி படபடவென்று பேசி அறிமுகமாகும் ஹவுசிங் போர்டைச் சேர்ந்த ஜானி, நடனமாடிக்கொண்டே அறிமுகமாகும் ப்ளூ பாய்ஸ் டான்ஸ் குழு, கடைசியாக,

"லைஃபே ஷார்ட் மச்சி. இந்த நாளு.. இந்த நிமிஷம்.. ஜாலியா எஞ்சாய் பண்ணனும். அவ்ளோ தான் மச்சி"

என்று அறிமுகமாகும் அன்புவின் நண்பன் காளி என ஒவ்வொரு கேரக்டரையும் முதல் அறிமுகத்திலேயே நமக்கு நன்றாக விளங்கவைத்து விடுகிறார் இயக்குனர். கூடவே அந்தப்பாடலின் ஊடாகவே வடசென்னையைச் சுற்றிக் காண்பிக்கிறார். அந்த ஏரியாவின் முக்கிய அம்சங்களான கால்பந்து, குத்துச்சண்டை, கேரம் போர்டு, கபடி, குழாயடி சண்டைகள், ஒண்டுக்குடித்தன ஹவுசிங் போர்டு வீடுகள், நெரிசலான சந்துகள், கானா பாடல், பேண்டு இசை, குத்து டான்ஸ், ரவுடியிசம், போஸ்டர், தெருக்கூட்டங்கள் இன்னும் பலப்பல விஷயங்களைக் காட்டி நம்மை வடசென்னைக்கே அழைத்துச் சென்று கதை சொல்ல ஆரம்பிக்கிறார் இயக்குனர். இப்படி முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே கதைக்குள் மூழ்கி அந்த கதைக்களத்திற்கே நாம் சென்றுவிட்டபடியான அனுபவத்தைத் தந்துவிடுகிறார். பிறகு நடப்பதெல்லாம் ஏதோ நிஜத்திலேயே நம் கண் முன்னாடி நடப்பது போல அவ்வளவு தத்ரூபமாக காட்சிப்படுத்தி, இயக்குனர் தன் கட்டுப்பாட்டிலேயே நம்மை வைத்திருக்கிறார்.

இப்படி ஒரு அட்டகாசமான அனுபத்தைக் கொடுத்த ஓபனிங்கை சமீபத்தில் வேறு எந்தப்படத்திலும் பார்க்கவில்லை. அதிலேயே ஒரு இயக்குனராக ரஞ்சித் ஜெயித்துவிட்டார் என்றே கூற வேண்டும். அதற்கப்புறம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் நம் வாழ்வில் நடப்பதுபோல நம்மை நம்பவைத்து ஒவ்வொரு காட்சியிலும் நம் உணர்வுகளோடு விளையாடுகிறார். கிட்டத்தட்ட கார்த்தி கேரக்டர் அனுபவிக்கும் ஒவ்வொரு உணர்வையும் நம்மையும் உணரவைத்து விடுகிறார். படத்தின் கடைசியில், அந்த துரோகத்தைப் பற்றி அறிந்தவுடன் கார்த்தி கேரக்டருக்கு எழும் அடங்கமாட்டா கோவம் நமக்கும் ஏற்படுவது இதனால் தான். அந்த சுவரை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற வெறியைக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள்ளும் உணரவைத்துவிடுவார்.

படம் பார்க்கும் ஆடியன்சின் மனதை எப்போது ஒரு இயக்குனர் தன்வசப்படுத்துகிறாரோ, தான் நினைத்தபடியெல்லாம் ஆடியன்சை ஃபீல் பண்ணவைக்கிறாரோ அப்போதே அவர் ஜெயித்துவிட்டார் என்றே அர்த்தம். அந்தக் கைவண்ணம் பெரும்பாலும் பல படங்களை இயக்கிய பிறகே ஒரு இயக்குனருக்கு அமையப்பெறும். ஆனால் பா.ரஞ்சித் அதைத் தனது இரண்டாவது படத்திலேயே அமையப் பெற்றிருக்கிறார். அதனால் இன்னும் தரமான படங்களை இவரிடமிருந்து நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

படத்தின் கதாபாத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அன்பு-மேரி ஜோடி தான். படத்தின் முதல் பாதி முழுக்க நம்மைக் கவர்வது இவர்கள் தான். ஒருசில சமயம் ஒருவேளை இவர்கள் தான் ஹீரோ-ஹீரோயினோ என்று சந்தேகப்படும் அளவுக்கு நம்மை ரசிக்கவைத்திருக்கிறார்கள். "குத்துக்கல்லு மாதிரி உக்காந்திருந்தா தலைவனுக்குத்தான் முத்தம் கொடுப்பாங்க" என்று காதலுடன் மேரி சொல்ல, அதை உடனே உணர்ந்துகொண்டு அன்பு அவளை அள்ளியணைத்து முத்தமிட அந்தக்காட்சி கவிதையோ கவிதை. இப்படி ஒருசில காட்சிகளில் வந்தாலும் இவர்களின் காதல், ஏனோதானோ என்று காரணமே இல்லாமல் வரும் காளி-கலையரசி காதலை விட மேலானதாக நமக்குத் தோன்றுகிறது.

அதேபோல குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ஜானி. சற்றே மனநிலை பிறழ்ந்த அந்தக் கதாபாத்திரத்தை மிக அசால்ட்டாகச் செய்திருக்கிறார் அந்த நடிகர். யாரிவர் என்று எல்லோரையும் ஒரு நிமிடம் புருவம் தூக்கிப் பார்க்க வைத்துவிட்டார். ஒவ்வொரு ஏரியாவிலும் இவரைப் போன்ற ஒருவர் கண்டிப்பாக இருப்பார். நம் வாழ்வில் ஒருமுறையாவது இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தைச் சந்தித்திருப்போம். அதையே படத்திலும் பார்க்கும்போது படத்தின் யதார்த்தம் அதிகரிக்கிறது. பெரும்பாலான நேரங்களிம் ஜானி பேசுவது என்னவென்றே சுத்தமாகப் புரியவில்லை. புரியவேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் படம் முழுவதும் வடசென்னையின் அடையாளமாக அந்தக்கதாபாத்திரமும் கூடவே வருகிறது. மெட்ராஸ் படத்தை சில வருடங்களுக்குப் பிறகு நினைத்துப் பார்த்தால், தவறாமல் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஜானி கதாபாத்திரமும் ஒன்றாக இருக்கும். அந்தளவுக்கு தன் வசன உச்சரிப்பிலும், பாடி லாங்க்வேஜிலும் பிரித்திருக்கிறார் அந்த நடிகர்.

அதேபோல காளியின் அம்மாவாக நடித்திருக்கும் 'என்னுயிர்த்தோழன்' ரமா, வெத்தலை பாக்கு போட எப்போதும் காசு கேக்கும் காளியின் பாட்டி, ஆரத்தி எடுத்துவிட்டு காசு கொடுக்கும்போது வேணாம் வேணாம் என்று சொல்லிக்கொண்டே காசை வாங்கிக்கொள்ளும் அந்தப்பாட்டி, பெருமாள், விஜி, மாரி என்று ஒவ்வொரு கேரக்டரும் நம் மனதிலேயே நிற்கிற அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கிறது. கலையரசியாக நடித்திருக்கும் கேத்ரீன் தெரசா சுமாரான அழகுடன் இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் மனதை அள்ளுகிறார். "நீதான் வேணும். கல்யாணம் பண்ணிக்கிறியா" என்று கோவம் கலந்த காதலுடன் சொல்லும்போதும், "உனக்கு அன்பு முக்கியமா நான் முக்கியமா" என்று கேக்கும்போதும், கையை வாயருகில் வைத்து மறைத்துக்கொண்டு ஃப்ளையிங் கிஸ் கொடுக்கும்போதும் அப்படியே மிளிர்கிறார்.

ஒவ்வொரு கேரக்டருடனும் இப்படி வெகு எளிதாக நம்மால் ஒன்றிவிட முடிகிறது ஒரே ஒரு கேரக்டரைத் தவிர. அது கார்த்தி. அமுல் பேபி மாதிரி இருக்கும் அவரை வடசென்னையின் ஒரு லோக்கல் ஆளாகக் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்தப்படத்தில் கார்த்திக்குப் பதிலாக தனுஷ் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எனக்கு தோணுமளவுக்கு உறுத்தலாக இருந்தது. (அப்படி மட்டும் தனுஷ் நடித்திருந்தால் பட்டயைக் கிளப்பியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை). தோற்றத்தில் தெரிகிற உறுத்தலைத் தனது நடிப்பினாலும், வசன உச்சரிப்பாலும் மாற்ற முயற்சித்திருக்கிறார். படத்தின் கதை பரபரவென்று பட்டாசாய் பறப்பதால் அந்த உறுத்தல் சிறிதாகி அவரைக் காப்பாற்றியிருக்கிறது. நடிப்பிலும் ஒருபடி முன்னேறியிருக்கிறார்.

படத்தில் எனக்கு மிகப்பிடித்த மற்றொரு விஷயம் இசையும் ஒளிப்பதிவும். அந்த சுவரையும் ஒரு கேரக்டராகக் காட்டுமளவுக்கு சிறந்த ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.முரளி. வடசென்னையின் தெருக்களை அப்படியே நம் கண் முன்னால் கொண்டுவந்து படத்தின் யதார்த்தத்தை அதிகப்படுத்தியதில் ஒளிப்பதிவின் பங்கு தான் அதிகம். சுவரின் முன்னால் கார்த்தி நிற்க, ஸ்லோமோஷனில் கேமராவைப் பின்னுக்குக் கொண்டு போகும்போது, சுவரில் அவரது நிழல் பெரிதாகிக்கொண்டே போகும் அந்தக்காட்சி ஒளிப்பதிவாளரின் திறமைக்கு ஒரு சான்று. அதேபோல கார்த்தி ஒரு இடத்தில் ஷாக் ஆகி நிற்பதைக் காண்பிப்பதற்கு Dolly Zoom Shot-இல் எடுத்திருப்பார். அப்படி என்றால் என்ன என்பதற்கு இந்த யூட்யூப் லிங்கைக் கிளிக் செய்து பார்க்கலாம்.

ஒரு ஆப்ஜெக்டை ஃபோகஸ் செய்தபிறகு, டாலியில் கேமராவை வைத்து பின்னாடியே செல்லவேண்டும் அதே சமயம் கேமராவில் ஸூம் செய்ய வேண்டும். அப்படிச்செய்தால் இந்த எஃபக்ட் கிடைக்கும். இந்தப்படத்தில் இரண்டு முறை அந்தமாதிரி காட்சி வருகிறது. முதல் முறை கார்த்தி ஷாக் ஆகி நிற்கும் போது வந்தபோது அந்த எஃபக்ட் நன்றாக இருந்தது. மறுபடியும் இன்னொரு இடத்தில் வந்தது. அதைத் தவிர்த்திருக்கலாம்.

இசை. சந்தோஷ் நாராயணன் பிரித்து விளையாடியிருக்கும் மற்றொரு படம். வெர்சடைலான இசையமைப்பாளர் என்று இப்போதைய நிலையில் யாரையாவது சொல்ல வேண்டுமென்றால் அது இவர் தான். மனிதர் ஒவ்வொரு பாடலையும் செதுக்கியிருக்கிறார். ஒவ்வொரு பாடலும் படத்தின் சூழலுக்கேற்ப அமைந்து படத்தின் கதையோட்டத்தையும், அந்த ஃபீலையும் அப்படியே ஒருபடி உயர்த்துகிறது. சென்னை வடசென்னை பாடல் ஆல்ரெடி பிரபலமடைந்து விட்டது. அதற்கப்புறம் வரும் "காகிதக்கப்பல்", "ஆகாயம் தீப்பிடிச்சா", சாவு வீட்டில் கானா பாலா குரலில் ஒலிக்கும் "இறந்திடவா நீ பிறந்தாய்" என அனைத்துப் பாடல்களுமே ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் ஏதோ ஒரு பாடல் மட்டுமே படத்திற்கு பிரேக் போடுவதாய் எனக்குத் தெரிந்தது. பாடல்கள் மட்டுமில்லாமல், பிண்ணனி இசையிலும் படத்தை பலமடங்கு உயர்த்தியிருக்கிறார் சந்தோஷ். ஜிகர்தண்டாவில் படத்தின் உயிர்நாடியாய் பிண்ணனி இசை அமைந்தது போல இந்தப்படத்திலும் மிக முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி ஒரு வெர்சடைலான இசையமைப்பாளர் நமக்குக் கிடைத்தது மிகப்பெரிய கிஃப்ட் தான்.

படத்தில் குறைகளென்று பார்த்தால் அவை மிக மிகக் குறைவே. முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி வேகமாகச் செல்வதில்லை. இரண்டாம் பாதியின் இடையில் ஒரு 10 நிமிடத்திற்கு படம் போரடிக்கிறது. ரொம்பவே நீளமான படம் என்று ஓரிரு குறைகள் இருந்தாலும் அவை பெரிதாகத் தெரிவதில்லை. அதேபோல படத்தில் வரும் அந்த முக்கிய ட்விஸ்ட் முன்பே தெரிந்துவிடுகிறது. ஆனால் அதுவும் கூட பெரிய குறையாய் தெரியவில்லை. இயக்குனரும் அந்த ட்விஸ்டைப் பெரிதாக அதிர்ச்சி தரும் காட்சியாகக் காண்பிக்காமல் அந்த துரோகம் எவ்வளவு பெரியது என்பதைக் காண்பிப்பதாகவே தெரிகிறது. அதனால் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

முடிவாக, அதிகாரம் என்ற பெயரில் சாமான்ய மக்களை வைத்து நடக்கும் அரசியலைப் புட்டுப் புட்டு வைத்ததிற்காகவும், "மனுசனை மனுசன் மதிக்கிறதுக்கும் சமூகப்பிரச்சினையை அணுகறதுக்கும் இங்கே வெறும் கல்வி மட்டும் பத்தாது கல்வியோட சேர்ந்த சமூக அரசியலும் பகுத்தறியும் தன்மையும் தேவை" என்கிற வலுவான கருத்தை முன்வைத்ததற்காகவும், வன்முறையும் பழிவாங்கும் குணமும் தவறு என்று வன்முறைக்கெதிராகக் கொடி பிடித்ததற்காகவுமே படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். இது எங்கள் தமிழ் சினிமா என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளக்கூடிய படங்களுள் ஒன்றாக இந்தப்படமும் அமைகிறது.

மெட்ராஸ் - அதிகாரத்தின் பெயரில் நடக்கும் அரசியலைத் தோலுரிக்கும் படைப்பு. வடசென்னையின் அடையாளம்.

இந்த வருடத்தில் நான் அதிகமாக எதிர்பார்த்திருந்த படங்களுள் ஜிகர்தண்டாவும் ஒன்று. பீட்ஸாவில் பட்டையைக் கிளப்பியிருந்த கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தில் என்ன சொல்லப்போகிறார் என்ற ஆர்வமே அதற்குக் காரணம். பட வெளியீட்டில் பல பிரச்சனைகளைச் சந்தித்து ஒருவழியாக இன்று ரிலீஸ் ஆகப்போகிறது என்று தெரிந்தவுடனேயே முடிவு பண்ணிவிட்டேன், முதல் நாள் முதல் ஷோ படத்திற்கு செல்வது என்று. அதிலும் கேங்க்ஸ்டர் கதை என்றதும் எதிர்பார்ப்பு ஒருபடி மேலேயே இருந்தது.

தியேட்டருக்குச் செல்லும் வழியில் ட்ராஃபிக்கில் சிக்கிக்கொண்டதால் முதல் 15 நிமிடங்களைப் பார்க்க முடியவில்லை. இதற்காகவே மறுபடியும் ஒருமுறை படத்திற்குச் செல்லலாம் என்று தோன்றுகிறது. நான் பார்த்த இடத்திலிருந்து படத்தின் கதையைச் சொல்கிறேன்.

சித்தார்த் இயக்குனர் ஆக விரும்புகிற ஒரு நாளைய இயக்குனர். ஒரு கேங்க்ஸ்டர் பற்றிய படம் எடுக்க வேண்டும் என்பதற்காக, உண்மையான ஒரு ரவுடியை நேரில் பார்த்து கள ஆய்வு செய்வதற்காக மதுரை வருகிறார். மதுரையில் கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என பிரபல ரவுடியாக ஊரையே கலக்கிக்கொண்டிருக்கிற தாதா சேது (சிம்ஹா). தன்னைப்பற்றி பத்திரிக்கையில் எழுதினான் என்பதற்காக, சேது ஒருவனைக் கொலை செய்து எரித்த சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்படுகிற சித்தார்த், சேதுவை நேரடியாக அணுகாமல் அவனது சகாக்கள் மூலம் அணுக முயற்சி செய்கிறான்.

சேதுவுக்கே தெரியாமல் அவனைப் பற்றி வெவ்வேறு வழிகளில் தெரிந்துகொள்ள முயற்சிக்கும்போது ஒரு இடத்தில் சேதுவிடம் மாட்டிக்கொள்கிறான். பிறகு சேதுவே சித்தார்த்துக்குத் தன் கதையைச் சொல்லி படமாக எடுக்க உதவி செய்கிறான். ஒரு கட்டத்தில் தானே அந்தப்படத்தில் ஹீரோவாக நடித்தால் என்ன என்று நாயகி லட்சுமி மேனனால் தூண்டப்படுகிறான். இதற்கு சித்தார்த் ஒத்துக்கொள்ளாமல் போகவே மிரட்டிப்பணிய வைக்கிறான் சேது. இதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே கதை என்று ஒற்றை வரியில் முடித்துவிட முடியாது.

நான் இங்கே மேலே சொல்லியிருக்கும் கதை வெறுமனே மேலோட்டமான கதைச்சுருக்கம் மட்டுமே. படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் திரைக்கதையின் பல லேயர்களை அமைத்து ஒவ்வொரு காட்சியையுமே சுவாரசியமாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தில் முதலில் என்னைக் கவர்ந்த விஷயம் சிம்ஹா. மனுசன் என்னமா நடிச்சிருக்காரு என்பது போல சேது என்கிற கேரக்டராகவே மாறிப்போனார் அவர். என்னைப் பொறுத்தவரை இந்தப்படத்தின் நாயகன் சிம்ஹா தான். சித்தார்த் இல்லை.மதுரையின் பிரபல ரவுடியாக அவர் வரும்போது, சூது கவ்வும் படத்தில் நயன்தாராவுக்குக் கோவில் கட்டியவரா இவர் என்று சந்தேகப்படுகிற அளவுக்கு சேது என்கிற தாதா தான் திரையில் தெரிகிறார். அட்டகாசமான நடிப்பு. அலட்டிக்கொள்ளாமல் அல்வா சாப்பிடுவது போல நடித்துள்ளார். ஒரு இடத்தில் கூட அவர் நடித்த வேறு படங்களின் கேரக்டர்கள் நினைவுக்கு வரவில்லை. ஒரு நடிகனுக்கு அதுதானே முக்கியம். அந்தளவு நடை, உடை, பாவனை என்று தன்னுடைய மொத்த பாடி லேங்க்வேஜையும் மாற்றி முழுக்க முழுக்க மதுரைக்காரனாகவே மாறியிருக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனல் தெறிக்கிறது. பந்தயம் கட்டிச் சொல்கிறேன், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஒரு ரவுண்டு வருவார் இவர்.

சித்தார்த் படத்தின் கதாநாயகன். தனக்கான வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார். ஆனால் இவரது கேரக்டரை விடவும் சேது கேரக்டருக்குத்தான் அதிக கெத்து என்பதால் இவரது கேரக்டரோடு நம்மால் அதிகமாக ஒன்ற முடியவில்லை. இரண்டாம் பாதியில் படம் முடியும் சமயத்தில் தான் இவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது கேரக்டரை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

லட்சுமி மேனன் எப்போதும் போல பொம்மையாக வந்துபோகிறார். முதல் காட்சியில் ஜவுளிக்கடையில் சேலை திருடும்போது மட்டும் சற்றே மனம் கவர்கிறார். சித்தார்த்தைக் காதலிக்கும் வேலையையும், ஒரு முக்கியமான கதைத் திருப்பத்திற்கும் மட்டுமே வந்துபோகிற இவரது கேரக்டர் அந்தளவு மனதில் நிற்கவில்லை. சிம்ஹாவிற்குப் பிறகு அதிகமாகப் பிடித்த இன்னொரு ஆள் கருணா. சித்தார்த்தின் நண்பனாக வந்து படம் முழுவதும் கலகலப்பூட்டுகிறார். இவரும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார்.

ஆரண்யகாண்டம் படத்தில் காளையனாக வாழ்ந்த சோமசுந்தரம் இந்தப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலக்கின்றன. அதேபோல சிம்ஹாவின் அடியாட்கள், லட்சுமி மேனனின் அம்மாவாக வரும் அம்பிகா, அறுவையாகப் பேசி கடைக்கு வருபவர்களை ஓடவைக்கும் பெட்டிக்கடை சங்கிலி, கெஸ்ட் அப்பியரன்சாக வரும் விஜய் சேதுபதி என ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், முதல் பாதியில் எவ்வளவு ஸ்டைலாக கேங்க்ஸ்டர் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ அந்தளவு சொல்லியிருக்கிறார். நாம் இதுவரை க்வண்டின், கோயன் பிரதர்ஸ், ஸ்கார்சசி படங்களில் தான் இப்படிப்பட்ட ஸ்டைலான கேங்க்ஸ்டர் படங்களைப் பார்த்திருப்போம். முதன் முறையாக தமிழில் இப்படியானதொரு படத்தைப் பார்ப்பதற்கே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. முதல் பாதியின் விசுவல்களையும், பிண்ணனி இசையையும், கதையைக் காட்சிப்படுத்திய விதத்தையும் பார்த்துவிட்டு மிரண்டு விட்டேன். இந்தப்படம் கண்டிப்பாக நாயகன், தளபதி, தேவர்மகன், புதுப்பேட்டை படங்களின் வரிசையில் கல்ட் க்ளாசிக் கேங்க்ஸ்டர் படமாக சேரும் என்று என் நண்பர்களிடம் கூறிக்கொண்டிருந்தேன்.

அதே எதிர்பார்ப்போடு அடுத்த பாதியைப் பார்த்தால், இயக்குனர் நம் தலையில் டங் டங்கென்று அடித்து முதல் பாதியில் என்ன உணர்வுகள் கொடுத்தாரோ, என்ன மூட் இருந்ததோ அதற்கு நேர் மாறாக, அப்படியே மொத்தமாகக் கதையைத் திருப்பிப்போட்டு வேறுவழியில் கதையைத் திருப்பிவிடுகிறார். இந்த மாற்றத்தை ஆடியன்ஸ் ஏற்றுக்கொண்டனரா(கொள்வார்களா) என்பதை விட இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு படமெடுத்த இயக்குனரின் தைரியத்தைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும்.

ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சி இதுதான் என்று நாம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும்போது, நாம் எதிர்பார்த்ததுக்கு நேர்மாறான ஒரு காட்சியை வைத்து சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துகிறார். இந்த சர்ப்ரைஸ் எலிமெண்ட்கள் இரண்டாம் பாதியின் ஒவ்வொரு காட்சியிலுமே தொடர்வது பலமா இல்லை பலவீனமா என்று சொல்லத்தெரியவில்லை. அது படம் பார்க்கும் ஆடியன்சின் மனநிலையைப் பொறுத்தது. அதேபோல பீட்ஸா படத்தின் க்ளைமாக்ஸில், எப்படி படத்தையே புரட்டிப்போடுமளவுக்கு ஒரு ட்விஸ்ட் இருந்ததோ அதேபோல இந்தப்படத்திலும் ஒரு பெரிய ட்விஸ்ட்டை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார். அதேபோல சினிமாவைப் பற்றிப் படமெடுத்திருப்பதால், அதில் நடக்கும் அரசியலைப் பற்றியும் பகடியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். எனக்கு அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது ஜே.கே.ரித்தீஸ் தான் ஞாபகம் வந்தார்.

படத்தின் மற்றொரு பலம் வசனம். சிம்ஹா பேசும் ஒவ்வொரு வசனமும் ஈட்டியாக வந்து விழுகிறது. "நம்மைப் பார்த்து பலபேரு பயந்து ஒதுங்கும்போது நமக்கு ஒரு கிக் வரும் பாரு. அதுக்கப்புறம் அப்டியே தொடர்ந்து போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்" என்று தான் எப்படி ரவுடியானேன் என்ற கதையைச் சொல்லும்போது எனக்கும் ரவுடியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்தளவு கவிதையாக அந்தக்காட்சியை வடித்திருப்பார் இயக்குனர். இன்னொரு காட்சியில், இயக்குனராக ஆசைப்பட்டு அந்த ஆசை நிறைவேறாமல் போய் வயசாகிப்போன பெட்டிக்கடைக்காரர் சித்தார்த்தைப் பார்த்து "நீ தோத்தியா ஜெயிச்சியானு அடுத்தவன் சொல்லக்கூடாது. உனக்குள்ளே இருக்கறவன் சொல்லனும். புத்தியுள்ளவன் ஜெயிப்பான்" என்று சொல்வார். அந்தக்காட்சியும் வசனமும் அருமையாக இருக்கும்.படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவும், இசையும் தான். இந்த இரண்டையும் நீக்கிவிட்டால் இது படமே கிடையாது என்று சொன்னால் அதில் மிகையே இல்லை. மதுரையை முழுக்க முழுக்க வேறு கோணத்தில் வெவ்வேறு கலர்டோனில் காண்பித்து படத்தையே ஸ்டைலாக்குவது ஒளிப்பதிவு தான். அதிலும் இடைவேளைக்கு முன்பான காட்சியில், சித்தார்த்தும், கருணாவும் பயத்துடன் அந்த வீட்டிலிருந்து வெளியே வர, வெளியில் சிம்ஹா தன்னுடைய அடியாட்களுடன் கொட்டும் மழையில் கொலைவெறியில் காத்திருக்க, சிம்ஹா துப்பாக்கியை உயர்த்தி சித்தார்த்தை நோக்கி சுடும் அந்தக்காட்சியில் என்னையும் மெய்மறந்துபோய் விசிலடித்து, ரசித்து, அனுபவித்தேன். அந்தக்காட்சியின் ஒளிப்பதிவும், கலர்டோனும், லைட்டிங்கும் அவ்வளவு ஸ்டைலாக இருந்தது.

இந்தப்படம் கேங்க்ஸ்டர் ம்யூசிகல் என்றுதான் விளம்பரப்படுத்தப்பட்டது. அது நூற்றுக்கு நூறு சத்தியமான உண்மை. ஒவ்வொரு காட்சியையுமே பலமடங்கு உயர்த்திப் பிடிப்பதில் சந்தோஷ் நாராயணனின் பிண்ணனி இசைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பாடல்களனைத்தும் ஏற்கனவே சூப்பர்ஹிட்டான நிலையில், பிண்ணனி இசையையும் கலக்கலாகப் போட்டு தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் தானும் ஒருவன் என்பதை நிரூபித்திருக்கிறார். அங்கங்கே என்னியோ மோரிக்கோனின் இசை ஞாபகத்துக்கு வந்ததைத் தடுக்க முடியவில்லை. ஒருசில இசைக்கோர்வைகள் இன்ஸ்பிரேஷன் தான் என்பதை உணரமுடிந்தது. ஆனாலும் சந்தோஷ் நாராயணன் இல்லாவிட்டால் இந்தப்படம் சாதாரண படமாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் மீண்டும் ஒருமுறை படம் பார்க்க திரையரங்கிற்குச் செல்வேன் என்றால் அது இந்தப்படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவுக்காக மட்டும் தான். சாதாரண கதையை ஸ்டைலாக சொன்னதுக்கு இவையே காரணம். கூடவே எடிட்டிங்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் படம் தான் மிகப்பெரிய படமாக இருக்கிறது. 2 மணி நேரம் 51 நிமிடங்கள் ஓடுகிறது. ஆனால் அவ்வளவு நேரமும் போரடிக்கவில்லை என்பது தான் இந்தப்படத்தின் சிறப்பு.

இப்படி இந்தப்படத்தைப் பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றாலும், என்னால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். 

பீட்ஸாவில் 8 அடி தாண்டிய கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டாவில் 16 அடி தாண்டியிருக்கிறார்.

ஜிகர்தண்டா - கேங்க்ஸ்டர் ம்யூசிகல்

1.Veronica Mars (2014)


  
Genres : Comedy | Crime | Drama | Mystery

2004-07 காலகட்டங்களில் 3 சீசன்களாக வெளிவந்த Veronica Mars என்ற டிவி சீரிஸின் தொடர்ச்சியே இந்தப்படம். சீரிஸின் மூன்றாவது சீசனில் நடந்த சம்பவங்களுக்குப்பிறகு 9 ஆண்டுகள் கழிந்து இந்தப்படத்தின் கதை தொடங்குகிறது. சீரிஸ் பார்க்காவிட்டாலும் இந்தப்படத்தைத் தனியாகப் பார்க்கும்படி தான் எடுத்திருக்கிறார்கள். நான் டிவி சீரிஸ் பார்க்கவில்லை என்பதால் அதனோடு இதை ஒப்பிட முடியவில்லை. ஆனால் தனியாக படம் என்று வரும்போது சுமாரான டிடெக்டிவ் படம் என்ற வகையில் திருப்தியளிக்கிறது.

வெரோனிகா மார்ஸ் (ப்ரைவேட் டிடெக்டிவ்) தற்போது நியூயார்க்கில் தனது பாய்ஃப்ரண்ட் Piz உடன் வாழ்ந்துவருகிறாள். ஒரு பெரிய கம்பெனியில் வேலை கிடைப்பதற்காகக் காத்திருக்கிறாள். கலிஃபோர்னியாவில் அவளுடைய பெஸ்ட் ஃப்ரண்ட் Carrie Bishop என்கிற பிரபல பாப் ஸ்டார் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகச் செய்தி பரவுகிறது. அதற்குக் காரணம் அந்த பாப் ஸ்டாரின் பாய்ஃப்ரண்ட் Logan Echolls தான் காரணம் என்று அனைவரும் நம்புகின்றனர். லோகன் வெரோனிகாவின் எக்ஸ் பாய்ஃப்ரண்ட். லோகன், தான் அந்தக்கொலையைச் செய்யவில்லை என்று கூறி வெரோனிகாவிடம் உண்மையைக் கண்டுபிடிக்கச் சொல்லி உதவி கேட்கிறான். அதே சமயம், வெரொனிகாவின் அப்பாவும் கவுண்டி ஷெரீஃப் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதால் தனியார் டிடெக்டிவ் ஏஜன்ஸியை ஆரம்பித்திருக்கிறார். லோகனுக்கு உதவி செய்ய கலிஃபோர்னியா செல்லும் வெரோனிகா அந்தக்கொலையைத் துப்பறிந்து உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிப்பதே மீதிக்கதை.

சீரிசில் நடித்த நடிகர்கள் பலர் இந்தப்படத்திலும் நடித்துள்ளனர். பல கேரக்டர்கள் சீரிசிலேயே அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் இங்கே படத்தில் அறிமுகமெல்லாம் இல்லாமல் நேரடியாகக் கதைக்கு வந்துவிடுகின்றனர். படத்தின் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான். கேரக்டர்களுடன் நாம் ஒன்ற முடியாததற்கு அதுதான் காரணம். அப்படி ஒன்றுவதற்குள் படமே முடிந்துவிடுகிறது. இந்தமாதிரி படங்களில் யார் கொலையாளி என்ற சஸ்பென்சை ஆடியன்சிற்குத் தூண்டிவிட்டு அவர்களையும் யோசிக்கவைத்தால் தான் படம் ஹிட் ஆக முடியும். ஆனால் இந்தப்படத்தில் அம்மாதிரியான சஸ்பென்சை ஆடியன்சிற்கு தூண்டவில்லை. யார் கொலையாளியாக இருந்தால் எனக்கென்ன என்ற மனநிலையிலேயே படம் முழுவதும் பார்க்க வேண்டியிருந்தது. ஏனென்றால் படத்தின் கதை கொலையை மட்டும் ஃபோகஸ் பண்ணாமல், இன்னபிற விஷயங்களையும் ஃபோகஸ் பண்ணுகிறது. ஒரு பெண் டிடெக்டிவாக நடித்திருக்கும் வெகுசில படங்களுள் இதுவும் ஒன்று. சீரிசில் நடித்த அதே பெண் இந்தப்படத்திலும் வெரோனிகாவாக நடித்திருக்கிறார்.

'க்ரைம் மன்னன்' ராஜேஷ்குமார் நாவல் பாணியில் அமைந்திருக்கும் இந்தப்படம் சூப்பர் என்று சொல்லமுடியாவிட்டாலும் ஒருதடவை பார்க்கலாம்.

என்னுடைய ரேட்டிங்க் : 6.5


2.Jack Ryan Shadow Recruit (2014)Genres : Action | Mystery | Thriller

ஜாக் ரையன் என்கிற கேரக்டரை வைத்து இதுவரை 4 படங்கள் வந்துள்ளன. அதில் ஐந்தாவது படம் இது. இதற்கு முன் வந்த 4 படங்களுமே நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டவை. இந்தப்படத்திற்கு மட்டும் தான் தனியாக ரூம் போட்டு யோசித்துத் திரைக்கதை எழுதியுள்ளனர்.

இதற்கு முன் வந்த 4 படங்களின் பெயர்களும் அதில் ஜாக்காக நடித்த நடிகர்களின் பெயரும் இதோ,

1.The Hunt for Red October (1990) - Alec Baldwin
2.Patriot Games (1992) - Harrison Ford
3.Clear and Present Danger (1994) - Harrison Ford
4.The Sum of All Fears (2002) - Ben Affleck

இந்தப்படத்திற்குக் கதை விவாதம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. எப்படி திராபையாகப் படமெடுப்பது என்று எக்ஸ்பெரிமெண்ட் செய்திருப்பார்கள் போலத் தெரிகிறது.

"நல்ல பரபரனு ஒரு ஆக்சன் படம் வேணும். என்ன பண்ணலாம்."

"இருக்கவே இருக்கு அமெரிக்கா-ரஷ்யா பிரச்சனை. ரெண்டு நாட்டுக்கும் இடையில சண்டை வரப்போகுது. ரஷ்ய நாடு அமெரிக்காவை அழிக்கப்பாக்குது. அதை நம்ம ஹீரோ தடுத்து நிறுத்துறாரு. எப்புடி ?"

"நல்லாத்தான் இருக்கு. ஆனா இதே கதையைத்தானே 176934 படங்கள்ல பாத்துருக்கோம். மறுபடி இதே கதையை எடுத்தா படம் ஓடுமா ?"

"அட.. நீங்க வேற சார்.. கட்டிடம் இடியற மாதிரி ஒரு நாலு சீனு. கார்கள் சர்ரு சர்ருனு விரட்டற மாதிரி ஒரு சேஸ் சீனு. என்னதான் துப்பாக்கி சண்டை இருந்தாலும் இந்த மக்களுக்கு அடிதடி தான் புடிக்கும். ஸோ அதுக்கொரு சீனு. அழகான ஹீரோயினு. ஸ்மார்ட்டான ஒரு ஹீரோ. அவங்களுக்கு உதவி செய்ய மேலதிகாரி ரேஞ்சுல ஒரு கெத்தான ரோல். அதுக்கு இருக்கவே இருக்காய்ங்க ஹாலிவுட்டின் முன்னாள் ஹீரோக்கள். அப்டி இப்டினு ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு சீன் ரெடி பண்ணா போதும் சார். இந்த முட்டாப்பயலுக அமெரிக்க மக்கள் புள்ள குட்டிகளோட வந்து பாத்துர மாட்டாய்ங்க. ஆனா PG-13 ரேட்டிங் ரொம்ப முக்கியம் சார். அப்பத்தான் உலகளவுல முட்டாள்களைப் படம் பாக்க வரவைக்க முடியும்."

"அப்டிங்கறீங்க. சரி. அப்போ ஷூட்டிங் போயிரலாம். இடையிடைல செப்டம்பர் 11, ஈராக், ஈரான், ஆஃப்கானிஸ்தான், டெரரிஸ்ட், உளவாளி அது இதுனு என்னமாச்சும் மானே தேனேனு போட்டுக்கனும். ஓக்கே."

இப்டித்தான் கதை விவாதம் பண்ணி (Please avoid comments like 'நீ போய் நேர்ல பாத்தியா'), ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு ஆக்சன் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார்கள். பாப்கார்ன் ஒரு பெரிய கூடை முழுக்க ரொப்பிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கொறித்துக்கொண்டே, மூளைக்கு 0.00001% கூட வேலை கொடுக்காமல், வேண்டுமானால் இன்னும் மழுங்கடித்துக்கொண்டே, சோஃபாவில் படுத்துக்கொண்டே பார்ப்பதற்கு ஏற்ற மற்றுமொரு ஹாலிவுட் ஆக்சன் த்ரில்லர் இந்தப்படம். என்சாய்..!!

என்னுடைய ரேட்டிங்க் : 5.5/1


(முந்தைய 4 படங்களும் பரவாயில்லை நன்றாக இருக்கும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அவற்றை யாராவது பார்த்திருந்தால் அதுபற்றிய கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்)


3.The Experiment (2010) - English Genres : Drama | Thriller

ஒரு நாளைக்கு 1000 டாலர் வீதம் 14 நாட்களுக்கு 14000 டாலர் கூலியாகத் தரப்படும் என்ற விளம்பரத்தைக் கண்டு நிறைய பேர் அந்த வேலையில் சேர ஆசைப்படுகின்றனர். அதிலிருந்து 26 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களை வைத்து ஒரு எக்ஸ்பரிமெண்ட் நடத்தப்படுகிறது. அதில் ஒருசிலர் சிறைக்காவலர்களாகவும், மற்றவர்கள் சிறைக்கைதியாகவும் ரோல்ப்ளே செய்ய வேண்டும். ஒரு தனி பில்டிங்கில் சிறை போலவே இருக்கும் இடத்தில் அவர்கள் அமர்த்தப்படுகின்றனர். சிறைக்காவலர்களுக்கு சிறைக்கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று 5 விதிகள் சொல்லப்படுகிறது. 14 நாட்கள் தானே எப்படியாவது நாட்களைக் கடத்தி விட்டால் கடைசியில் பணம் கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். ஆனால் ?? நாளாக, நாளாக அவர்கள் செய்யும் அந்த ரோல்ப்ளேவை சீரியஸாக எடுத்துக்கொள்கின்றனர். அதனால்...

இதற்கு மேல் சொல்ல முடியாது. ரொம்ப அருமையான சைக்காலாஜிகல் ட்ராமா த்ரில்லர். படம் ஆரம்பித்ததிலிருந்து போகப்போக டென்சனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் படியான சீன்கள், ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் ரோல்ப்ளேயை சீரியசாக நினைக்கும் அந்த மனமாற்றம் என நுணுக்கமாகப் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். வெறுமனே ஆக்சன் என்றில்லாமல், அந்த கேரக்டர்களின் மனமாற்றத்தோடு நம்மையும் ஒன்றச்செய்து, அதற்கான காரணத்தைக் கற்பித்து, நமக்குள்ளும் வெறியை ஏற்றி சண்டையிடுமளவுக்கு நுட்பமான காட்சிகள் கொண்ட படம். ஒன்றரை மணி நேரம் நம் மனநிலையோடு படம் விளையாடுவதை, படம் முடிந்தபின்பு தான் உணர முடியும்.

மனித இனம் தான் இருப்பதிலேயே அதிக ஆபத்தான மிருகம் என்பது தான் படம் மறைமுகமாகச் சொல்லவரும் கருத்து. ஒவ்வொரு சூழ்நிலையைப் பொறுத்தும் மனித மனம் எப்படி செயல்படுகிறது அல்லது மாற்றமடைகிறது என்பதைக் காட்சிப்படுத்துகிறது. இந்தப்படம் 2001ல் இதே பெயரில் வெளிவந்த ஒரு ஜெர்மன் படத்தின் (Das Experiment-2001) ரீமேக். அந்தப்படம், 1971ல் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தை (Stanford prison experiment) அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு 1997ல் வெளியிடப்பட்ட Das Experiment - Black Box (1999) என்ற புத்தகத்தைத் தழுவியது. 


இந்தப்படத்தை விட ஒரிஜினல் படமான ஜெர்மன் படம் தான் நன்றாக இருக்கும் எனவும், இது மோசமாக ரீமேக் செய்யப்பட்ட படம் எனவும் இணையத்தில் பலர் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் எனக்கு இந்தப்படமே நன்றாகத்தான் இருந்தது. அதனால் உடனடியாக ஜெர்மன் படத்தை டவுன்லோட் போட்டுவிட்டேன். அது இன்னும் நன்றாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. படத்தில் முக்கியமான இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ள Adrien Brody மற்றும் Forest Whitaker இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். அதிலும் ஃபாரஸ்ட் விட்டேக்கர் நடிப்பில் நான் மெய்மறந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய ஃபேவரிட் நடிகர்கள் பட்டியலில் அவரும் இணைந்துவிட்டார்.

சிறைச்சாலை பற்றிய படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தவகையில் இந்தப்படமும் எனது ஃபேவரிட் படங்களின் வரிசையில் ஒன்றாக இணைகிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களுள் இதுவும் ஒன்று. Don't miss it.

என்னுடைய ரேட்டிங் - 7.5/104.Mean Girls (2004) - EnglishGenres : Comedy

15 வயதுவரை தன் வீட்டிலிருந்தே (home school) படிக்கும் ஒரு பெண், 16 வயதில் முதன்முதலாகப் பள்ளிக்குச் சென்றால் என்னாகும் ? இந்த ஒன்லைன் தான் கதை.

கதை இங்கே ஒரு பெரிய விஷயமே இல்லை. திரைக்கதை தானே முக்கியம். படம் பார்க்கிற ஒன்றரை மணி நேரமும் கொஞ்சம் கூட போரடிக்காமல், அதே சமயம் நன்றாக சிரித்து மகிழும்படி எடுக்கப்பட்டுள்ள படம் இது. இந்தப்படத்தை யாரெல்லாம் பார்த்து மகிழலாம் என்றால்,

1.ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற படம்.
2.ஆண்கள் தங்கள் காதலிகளுடன் சேர்ந்து பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற படம்.
3.பெண்கள் தங்கள் தோழிகளுடன் சேர்ந்து பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற படம்.
4.பெண்கள் தங்கள் காதலன்களுடன் சேர்ந்து பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற படம்.
5.குடும்பமாகக் கூட சேர்ந்து பார்க்கலாம். ஆனால் இது ஒரு ஹாலிவுட் படமென்பதால் அதற்கேற்ற மாதிரி தயாராகிக்கொண்டு பார்க்க வேண்டும். PG13 தான் ரேட்டிங்க் என்றாலும் எச்சரிக்கை தேவை.

மொத்தத்தில் எல்லோருமே பார்த்து சிரித்து என்ஜாய் பண்ணக்கூடிய ஒரு படம். முக்கியமாக டீனேஜில் இருக்கும் ஆண்கள்/பெண்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும். படம் முழுவதும் பெண்களைப் பற்றியும், அவர்களுக்குள் இருக்கும் பொறாமை, கோபம், சந்தோஷம், காதல், ஆசை என முழுக்க முழுக்க பெண்களைப் பற்றியே பேசும் படம் என்பதால் ஆண்களுக்கு இந்தப்படம் ஒருபடி கூடுதலாகப் பிடிக்கும்.

அதுபோகப் படம் முழுவதும் அழகழகான பெண்கள் விதவிதமான உடைகளில் வலம் வருகின்றனர். படம் எனக்கு ரொம்பப் பிடித்தது. அதிலும் இருப்பதிலேயே அடிமுட்டாளாக நடித்திருக்கும் Amanda Seyfried-ஐ எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்துப்போயிற்று. இப்போது அமாண்டாவைத் தான் கூகுளிக்கொண்டிருக்கிறேன். இந்தப்படத்திற்கு ஒரு சீக்வல் கூட இருக்கிறது. ஆனால் அந்தப்படம் திராபையாக இருப்பதாக விமர்சனங்கள் சொல்லுகின்றன. இருந்தாலும் அதையும் முயற்சி செய்யலாமென்று தோணுகிறது. பார்க்கலாம்.

டேக்லைன் : காமெடி/டீன் படங்கள் பிடிக்குமென்றால் தவறவிடக்கூடாத படம் இது.
என்னுடைய ரேட்டிங் : 7.5/10குறிப்புகள்:

1.ஒவ்வொரு நாளும் ஏதோவொரு படத்தையோ அல்லது டிவி சீரிசையோ பார்க்கிறோம். ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய 30+ எண்ணிக்கையைத் தொட்டுவிடுகிறது.
2.அப்படி பார்க்கும் படங்களில் சில நல்ல படங்களாகவும், சில மொக்கைகளாகவும், சில சுமாரான படங்களாகவும் அமைகின்றன.
3.அந்தப் படங்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதி வைத்தால் அது நமக்குப் பின்னாடி வரும் சந்ததியினருக்கு உதவியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தில் இந்தக் கல்வெட்டை செதுக்குகிறேன்.
4.ஏற்கனவே ஒருசில படங்களைப் பற்றி ஃபேஸ்புக் பேஜில் எழுதியிருக்கிறேன். இனிமேல் தினமும் தொடர்ந்து எழுதப்படும். அங்கே எழுதப்படும் அந்தக் குட்டி விமர்சனங்கள் இங்கே பதிவாக வெளியிடப்படும். காரணம் சில நாட்களுக்குப் பிறகு ஃபேஸ்புக் பேஜில் இருக்கும் பழைய பதிவுகளைத் தேடுவது சிரமமாக இருக்கும் என்பதால் தான்.
5.ஒவ்வொரு பதிவிலும் 3 முதல் 4 படங்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும்.
6.இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் நன்றாயிருக்கும் என்று எண்ணுபவர்கள் தயவுசெய்து தங்கள் கருத்தைக் கூறிவிட்டுச் செல்லுங்கள்.

1.21 Jump Street (2012)

 


தற்போது இந்தப்படத்தின் சீஃக்வல் "22 Jump Street" வெளிவந்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. முதல் படத்தை விட அதிக வரவேற்பை, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெற்றிருக்கிறது. நான் இன்னும் முதல் படத்தையே பார்க்கவில்லை என்பதால் இன்று காலையே டவுன்லோட் செய்து பார்த்துவிட்டேன்.

இதே பெயரில் வந்த டிவி சீரிஸை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கின்றனர். Schmidt (Jonah Hill), Jenko (Channing Tatum) ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல். ஜோனா நல்ல படிப்பாளி ஆனால் ஸ்மார்ட் கிடையாது. ச்சேனிங்க் நல்ல ஸ்மார்ட் ஆனா படிப்பறிவு கிடையாது. ரெண்டு பேரும் ஸ்கூல், காலேஜ்-க்கு அப்பறம் போலிஸ்ல ஜாயின் பண்றாங்க. அங்கே ட்ரெயினிங்க் முடிஞ்சு ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ் ஆகறாங்க. முதல் நாள் வேலையையே பயங்கரமாக சொதப்புவதால் 21 ஜம்ப் ஸ்ட்ரீட்-க்கு ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு அனுப்பிடறாங்க. ரெண்டு பேருமே அமெச்சூர்டு + பாக்கறதுக்கு ரொம்ப சின்னப்பசங்களா தெரியறதால ஒரு ஸ்கூல்ல நடக்குற ட்ரக்ஸ் சப்ளை பத்தின இன்வெஸ்டிகேஷனுக்கு ஸ்டூடண்ட்ஸ் மாதிரி அண்டர்கவர்ல போய் விசாரணை பண்றாங்க. அங்க அவங்க பண்ற கலாட்டா + ட்ரக்ஸ் சப்ளை பண்றவங்களை கண்டுபிடிச்சாங்களா இல்லியாங்கறது தான் கதை.

கதை ஒன்னும் அவ்ளோ பெருசா இல்லைனாலும், படம் முழுக்க எண்டர்டெயினிங்கா இருக்கு. ஸ்கூல்ல சேர்ந்தப்பறம் அந்த ட்ரக்கை (Drug) முதல் தடவையா ரெண்டு பேரும் பயன்படுத்திட்டு போடற கலாட்டா செம ரகளை. படம் முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்கற மாதிரி நிறைய சீன்ஸ் இருக்கு. ஸ்கூல், பார்ட்டி, என்டர்டெயின்மெண்ட் மாதிரியான படங்கள்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்கறதால நான் நல்லா என்ஜாய் பண்ணிப்பாத்தேன். அது போக டார்லிங் Brie Larson வேற இருந்ததால எனக்கு ரொம்பப் பிடித்தது. க்ளைமாக்ஸ் அப்போ ஒரு பிரபலமான நடிகர் கேமியோல வந்து திடீர் இன்ப அதிர்ச்சி கொடுப்பார். விழுந்து விழுந்து சிரிக்க வச்ச சீன் அது. யார் அதுனு ஒரு க்ளூ வேணுமா ? இவரோட உண்மையான முகத்தை விட இவரோட கேரக்டர்கள் முகம் தான் சட்டுனு நம்ம ஞாபகத்துக்கு வரும். அவ்ளோ வித்தியாசமான கேரக்டர்கள் பண்ணியிருக்காரு. அவர் வர்றது ஒரு சீன்-தான்னாலும் அதகளம் பண்ணியிருப்பாரு.

இப்போ, அதே ரெண்டுபேரும் காலேஜ்ல சேர்ந்து அண்டர்கவர் ஆபரேஷன்ல இன்வெஸ்டிகேட் பண்றது தான் "22 Jump Street" படத்தோட கதையாம். கூடிய சீக்கிரம் அதையும் பாத்துடனும்.

லாஜிக்கை பத்தி எந்தவொரு கவலையுமில்லாம ஜாலியா சிரிச்சு என்ஜாய் பண்ணனும்னா கண்டிப்பா இந்தப்படம் பாக்கலாம்.

என்னோட ரேட்டிங்க் - 7/10

2.Take Shelter (2011)

 


 Genres: Drama | Thriller

என்ன மாதிரியான படமென்று எதுவுமே தெரியாமல் பார்த்த படம். மொத்தப்படமே 2 மணி நேரம் தான். நேற்றிரவு ஒரு 10 மணிக்கு ஆரம்பித்திருப்பேன். 1 மணி நேரம் கழிந்த பிறகு, படம் இன்னும் எவ்வளவு நேரம் பாக்கியிருக்கிறது என்று பார்த்தால் அப்போதுதான் 10 நிமிடங்கள் முடிந்ததாகக் காட்டுகிறது. அதிர்ச்சியில் உறைந்தவன் வேறு வழியில்லாமல் ஆரம்பித்த படத்தை முடித்தேயாக வேண்டும் என்கிற குறிக்கோளோடு தொடர்ந்து பார்த்தேன். கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் முடிந்திருக்கும். அப்போதும் படம் இன்னும் முடியாமல் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. மீதி இன்னும் ஒரு மணி நேரப்படம் பாக்கியிருப்பதாகக் காட்டியது. இந்தப்படம் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்று வைராக்கியத்துடன் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்த நான் திடீரென கதவு தட்டப்பட்ட சத்தத்தைக் கேட்டு விழித்தேன். என் நண்பன் ஒருவன் வந்து "என்னடா அதுக்குள்ளே தூங்கிட்டே" என்று என்னை எழுப்பிவிட்டான். அப்போதுதான் என்னையுமறியாமல் தூங்கியதே தெரியவந்தது.

8 மணி நேரத்துக்கும் மேல் தூங்கியது போல உணர்விருந்தாலும் படம் இன்னும் அரை மணி நேரத்திற்கும் மேல் பாக்கியிருந்தது. எப்படியோ கடைசியாகப் படம் முழுவதையும் முடித்துவிட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட 15 மணி நேரங்கள் தொடர்ந்து படம் பார்த்த களைப்பு ஏற்பட்டது. அப்படியே அந்தக்களைப்பிலேயே உறங்க ஆரம்பித்த எனக்கு சொர்க்கம் மாதிரி தூக்கம் வந்தது. அதனால் யாரெல்லாம் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களோ, அவர்களுக்கெல்லாம் இந்தப்படத்தினை அவசியம் பரிந்துரை செய்கிறேன். தூக்கம் இல்லாமல் அவதிப்படும் நிலையைப் பொறுத்து இந்தப்படத்தைப் பார்க்க வேண்டும். நார்மலாகத் தூங்குபவர் இந்தப்படத்தை 10 நிமிடத்துக்கு மேல் பார்த்தால், பிறகு தொடர்ந்து 2 நாட்கள் தூங்க வேண்டியிருக்கும். அதேபோல எவ்வளவு தூக்க வியாதி இருந்தாலும் அதிகபட்சம் 1 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும். அதற்கு மேல் பார்த்து, நிரந்தரத் தூக்கம் ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

அவ்வளவு வேகமான(!!??) திரைக்கதையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், உண்மையில் மிக அருமையான உணர்வுப்போராட்டத்தைப் பதிவு செய்கிற படம் இது. சைக்காலாஜிகல் ட்ராமா த்ரில்லர் படம். ஒரு கிராமத்தில் மனைவி மற்றும் காதுகேளாத, வாய் பேசமுடியாத ஒரு குழந்தையுடன் வாழ்ந்துவரும் நமது கதாநாயகன், திடீரென ஒருநாள் பயங்கரமானக் கனவு காண்கிறான். நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கும் அந்தக்கனவினால் பயங்கர அதிர்ச்சியாகிறான். அதைத்தொடர்ந்து தினமும் கனவுகள் வர ஆரம்பிக்கிறது. அத்தனை கனவுகளும் ஏதோ ஒரு பெரிய சூறாவளி/புயலைப் பற்றியதாகவே இருக்கிறது. அந்தக்கனவுகள் அவனை மனஅழுத்தத்தில் தள்ளுகிறது. உண்மையிலேயே இன்னும் கொஞ்ச நாட்களில் பெரிய சூறாவளி வரப்போகிறது என்று நம்பும் அவன், சூறாவளியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தன்னுடைய வீட்டின் அருகேயே பள்ளம் தோண்டி ஒரு தங்குமிடத்தை உருவாக்குகிறான். நாளாக நாளாக அவனுடைய நடவடிக்கைகள் மிகவும் மோசமாகிக்கொண்டே வருகிறது. இதனால் அவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும், சுற்றத்தாருக்கும் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவனுக்கு என்ன பிரச்சனை ? அவன் மனநிலை பிறழ்ந்தவனா ? அவனது குடும்பத்துக்கு என்ன ஆனது ? உண்மையிலேயே சூறாவளி வந்ததா ? என்பது தான் கதை.

படம் மெதுவாகச் சென்றாலும், சிறிது நேரத்திலேயே கதாநாயகன் உணரும் அத்தனை உணர்ச்சிகளையும் படம் பார்க்கும் நமக்கும் உணர்த்திவிடும்படியான காட்சியமைப்புகள். தெளிவான திரைக்கதை, அற்புதமான ஒளிப்பதிவு இரண்டும் இந்தப்படத்தின் பிளஸ் பாயிண்ட்கள். கடைசிவரை அவன் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதை ஒருமாதிரி சஸ்பென்சுடனே வைத்திருந்தது, படம் முடியும்போதும் நேரடியாக முடிவைச் சொல்லாமல், படம் பார்க்கும் ஆடியன்ஸின் உணர்ச்சிகளுக்கேற்ப அவர்களாகவே முடிவுசெய்துகொள்ளும்படியான பன்முகத்தன்மை கொண்ட க்ளைமாக்ஸ் என இந்தப்படத்தின் பெருமைகளைச் சொல்லலாம். (படம் பார்த்தவர்களுடன் க்ளைமாக்சைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். வாருங்கள் பேசலாம்)

படம் பார்க்கும் ரசிகர்களை வெறுமனே என்டர்டெயின் பண்ணுவது ஒருவகையான படம் என்றால், ரசிகர்களை படம் நடக்கும் களத்துக்கு இழுத்து வந்து அவர்களையும் அந்த இடத்தில் நடமாடவிட்டு உணரவைப்பது இன்னொருவகையான படம். இந்தப்படம் இரண்டாவது வகை.

மொத்தப்படமுமே கதாநாயகனின் பார்வையில் தான் செல்கிறது என்பதால் மிகவும் பொறுப்புவாய்ந்த வேடம் அது. அதைத் தன்னுடைய அனாயசமான நடிப்பில் மிக இயல்பாக நடித்துப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் Michael Shannon. மொத்தமே ஒரு நாலைந்து கேரக்டர்கள் தான் சுற்றிச் சுற்றி வருவதால், மிகவும் மெதுவாகச் செல்லும் திரைக்கதை ஒன்றுதான் மிகப்பெரிய குறை. அதை மட்டும் தவிர்த்திருந்தால் மிக நல்லதொரு சைக்கலாஜிகல் த்ரில்லர் என்ற பெயரைப் பெற்றிருக்கும்.

படத்தின் நிறை, குறை இரண்டையுமே சொல்லிவிட்டேன். இனிமேல் படம் பார்ப்பதைப் பற்றி முடிவுசெய்யப்போவது நீங்கள் தான். படம் பார்த்தால், அதைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

3.சைவம் (2014) 

 

  
"ஹாய்டா மச்சி"

"ஹாய் மச்சி.. இன்னிக்கு சைவம் படத்துக்குப் போனியே எப்புடிடா இருந்துச்சு. டைரக்டர் விஜய்யோட படம் தானே. எங்கயாச்சும் ஆட்டயப் போட்டாவது செம்மயா கதை சொல்வாருல்ல. இந்தப்படம் என்னா கதைடா"

"அதாவது மச்சி.. ஒரு கிராமத்துல ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். எல்லாரும் திருவிழாவுக்காக ஒன்னு சேர்றாங்க"

"வாவ்.. கிராமத்து சப்ஜெக்டா.. சூப்பர்டா.. எனக்கு ரொம்பப் பிடிச்ச ஏரியா. அதுவும் குடும்பத்துக்கதை வேற. சரி.. அப்பறம்.."

"அவங்க சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவல் திடீர்னு காணாமப் போயிருது"

"அய்யய்யோ.. அப்றம் என்னாச்சி ?"

"அப்றம் என்ன.. மொத்தக் குடும்பமே காணாமப்போன அந்த சேவலைத் தேடுறாங்க"

"இன்டரஸ்டிங்க்டா... அப்பறம் என்னாச்சி ?"

"ஒவ்வொருத்தரா அந்த காணாமப்போன சேவலைத் தேடுறாங்க"

"அதான் சொல்லிட்டியே மச்சி. அதுக்கப்புறம் என்னாச்சி ?"

"அந்த சேவலை குடும்பத்துல இருக்கற சின்னப்பசங்கள்லருந்து பெரியவங்க வரைக்கும் ஒருத்தர் விடாம தேடுறாங்க"

"டேய்.. சொன்னதையே எத்தனை தடவை திருப்பித் திருப்பிச் சொல்லுவே. அப்பறம் என்ன ஆச்சினு சொல்லுடா"

"ஏண்டா வென்று.. ஒரு மூனு தடவை திருப்பிச் சொன்னதுக்கே இந்தக்கோவம் வருது உனக்கு. ரெண்டு மணி நேரம், படம் பூரா அதையே பாத்த எனக்கு எவ்ளோ கோவம் வரும். மூடிக்கிட்டுப்போயிரு.. கதை கேக்கறானாம் கதை.. அப்டியே ஓடிப்போயிரு"

My Rating : 5.5/10முந்தைய பகுதி

இதற்கு முந்தைய பகுதியில் நல்ல கான்சப்டுகளை எப்படி சொதப்பலான படங்களாக எடுக்கிறார்கள் என்பதைப் பற்றிப் பார்த்தோம். இனிவரும் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ந்து இம்மாதிரியான சொதப்பலான படங்களைப் பற்றிப் பார்க்கலாம் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் அதற்குப் பிறகு சோம்பேறித்தனம் முற்றிவிட்டதால் இப்படி ஒரு தொடர் ஆரம்பித்ததையே மறந்துபோனேன். இப்போது சமீபத்தில் அப்படி ஒரு சொதப்பலான படத்தைப் பார்க்க நேர்ந்த காரணத்தால் இத்தொடருக்குப் புத்துயிர் கொடுத்து மறுபடியும் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் இதோ இன்றைய பகுதி.

இன்றைய படம் எப்படி இருந்தது என்பதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக ஒரு விடயம். 2 அல்லது 3 வயதுவரையுள்ள பக்கத்து வீட்டுக்குழந்தைகளைக் கவனத்திருக்கிறீர்களா ? அவர்களின் சேட்டைகளை ரசித்திருக்கிறீர்களா ? இன்னதான் சேட்டை செய்யப்போகிறார்கள் என்று யூகிக்கவே முடியாத அளவுக்கு ரொம்ப ஹைபர் ஆக்டிவாக துருதுருவென்று எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். மிக அழகாகச் சிரிப்பார்கள். அந்த அழகிய சிரிப்பைக் கண்டு ரசிக்கவே இரண்டு கண்களும் போதாது. அவ்வளவு ரம்மியமாக இருக்கும். அதேசமயம் அவர்கள் கக்கா போய்விட்டால் என்ன செய்வார்கள் ? சுத்தம் செய்வதற்கு யாரும் இல்லையென்றால், அப்படியே அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த அசுத்தத்தில் கையை வைத்து அப்படி இப்படி என்று கோடு போட்டு விளையாடுவார்கள். இன்னும் ராவாகச் சொல்வதென்றால் உழப்பு உழப்பென்று உழப்பி அந்த இடத்தையே ரணகளப்படுத்திவிடுவார்கள். சிலசமயம் உழப்பிய கையையே எடுத்து வாயில் வைக்க முயற்சி செய்வார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. "அய்யே அப்டியெல்லாம் பண்ணாதே.. ச்சேய்.. உவ்வே.. " என்று அந்தக்குழந்தையின் அம்மாவைக் கூப்பிட முயற்சி செய்வோம்.

இன்றைக்கு நான் பார்த்த படமும் அப்படித்தான் இருந்தது. க்ளைமாக்சுக்கு முன்புவரை அருமையாகச் சென்ற படம், க்ளைமாக்சில் அந்தக்குழந்தையைப் போல உழப்பு உழப்பென்று உழப்பி வைத்து ரணகளப்படுத்திவிட்டார்கள். 'ஏய்யா.. நல்லா போய்க்கிட்டிருக்கற படத்தை இப்புடிப் போட்டு உழப்புறே' என்று அந்தப்படத்தின் இயக்குனரை நினைத்து புலம்ப வைத்துவிட்டார்கள். நான் பார்த்த அந்தப்படம்,

Anna (2013) - "Mindscape" (original title)Mindscape என்ற பெயரே படம் எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாகக் கூறி சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. படத்தின் கதை மனித நினைவுகளைப் பற்றியது. நாம் பிறந்தது முதல் இன்று இதைப் படித்துக்கொண்டிருக்கும் வரை நடந்த அத்தனை சம்பவங்களும், நம் மூளையில் நினைவுகளாகச் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதில் அத்தனை சம்பவங்களும் நமக்கு ஞாபகம் இருக்கிறதா என்பது சந்தேகமே. ஒருவேளை அந்த நினைவுகளையெல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் ? அந்த நினைவுகளையெல்லாம் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் ஒருவருக்குக் கிடைத்தால் ?

ஜான் வாஷிங்க்டன் (John Washington) ஒரு மெமரி டிடெக்டிவ் (Memory Detective). அதாவது மக்களின் மனசைப் படிக்கத் தெரிந்த ஒரு டிடெக்டிவ். ஒருவரின் நினைவுகளுக்குள் புகுந்து, அவருக்குத் தேவையான நினைவை மறுபடியும் மீட்டெடுத்து அதை வைத்து கேஸ்களை ஆராய்கிற திறமை வாய்ந்த ஒருசில டிடெக்டிவ்களுள் இவரும் ஒருவர். உலகில் ஒருசிலருக்குத்தான் இந்த வரம் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் ?

உதாரணத்துக்கு, ஒரு கொலையாளியை எடுத்துக்கொள்ளலாம். அவன் யாரோ ஒருவரைக் கொலை செய்துவிட்டு, பல மில்லியன் டாலர் பணத்தை எங்கோ ஓரிடத்தில் ஒளித்துவைத்துவிட்டு, தான் கொலை செய்யவே இல்லை என்று சாதிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். நமது ஹீரோ ஹாயாகச் சென்று அவனுடைய நினைவுகளை ஆராய்ந்து அந்தக்கொலை சம்பவம் பற்றிய நினைவுகளை மட்டும் தேடி எடுத்து, அதை கோர்ட்டில் ஒரு சாட்சியமாக அளிக்கலாம். அதைவைத்து கோர்ட் அவனுக்குத் தண்டனை அளிக்கும். அவன் ஜெயிலுக்குப் போனபின்பு அந்த பல மில்லியன் டாலர் பணம் எங்கிருக்கிறதோ, அங்கு சென்று அதை எடுத்து வைத்துக்கொண்டு சொகுசாக வாழலாம். இதில் ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால், அந்தக் கொலையாளியின் நினைவுகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை இன்னும் தெளிவாகச் சொல்வதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

நான் கல்லூரியில் படிக்கும்போது பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதில் பல நினைவுகளை நான் எனக்கேற்றபடி மாற்றிக்கொண்டு தான் வாழ்ந்துவருகிறேன். ஆண்களிடம் உள்ள ஒரு மிகப்பெரிய குறை என்னவென்றால், அவர்கள் மனதுக்குப் பிடித்த பெண்ணிடம் பேசுவதற்கு மட்டும் அவர்களுக்கு ரொம்ப நாள் எடுக்கும். எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும் சரி, வாயாடியாக இருந்தாலும் சரி அவர்களுடனெல்லாம் சரிக்கு சரி சமமாக நின்று பேசிவிடுவார்கள். ஆனால் அவர்களுக்குப் பிடித்த பெண்ணுடனோ அல்லது காதலிக்கும் பெண்ணுடனோ மட்டும் முதன்முதலில் பேச்சை ஆரம்பிப்பதற்கு, ஒரு ஹாய் சொல்லுவதற்குக் கூட அந்தத் தயங்கு தயங்குவார்கள்.

நானும் அப்படித்தான் எனக்குப்பிடித்த பெண்ணுடன் பேசுவதற்கு பல முறைகள் தயங்கியிருக்கிறேன். அப்படியே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சென்றாலும் வாயிலிருந்து வெறும் காத்து தான் வரும். அப்படியும் தைரியப்படுத்திக் கொண்டு பேசினால் அந்தப்பெண் பேசமாட்டாள். நம்மைவிட அதிகம் பயந்தவளாக இருப்பாள். அல்லது அடப்பு (பல்பு) கொடுப்பாள். இப்படி சொதப்பல்களின் மொத்த உருவமாகத்தான் அந்தக்காலகட்டம் இருந்தது. இப்படி நான் சொதப்பு சொதப்பென்று சொதப்பும்போதெல்லாம் என் கூடவே இருக்கும் தளபதிகளான என் நண்பர்கள் பயங்கரமாகக் கலாய்ப்பார்கள். இந்தப்பதிவின் ஆரம்பத்தில் குழந்தையின் உழப்பைப் பற்றிச் சொன்னேனே அதுகூட என் தளபதி ஒருவன் என்னை கலாய்த்தது தான். :)

அந்த சொதப்பல்களில் பல சொதப்பல்கள் நல்ல நினைவுகளாகத்தான் இருக்கும். இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரவழைக்கக் கூடியவையாக இருக்கும். ஆனால் ஒரு சில சொதப்பல்கள் மனதுக்குச் சங்கடத்தையும், வலியையும் தரக்கூடியவை. அப்படிப்பட்ட நினைவுகளையெல்லாம் மனதின் ஆழத்தில் போட்டு புதைத்துவிட்டு, அதே சம்பவங்கள் நல்லபடியாக முடிந்தமாதிரி நினைத்துக்கொண்டு அந்த நினைவுகளை மட்டும் சேமித்துவைத்துக் கொள்வேன். அதனால் எப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் நல்ல நினைவு மாத்திரமே நினைவுக்கு வரும். உண்மையான நினைவு உள்ளுக்குள் மறைந்து கிடக்கும்.

இப்போது யாராவது ஒரு மெமரி டிடெக்டிவ் என் மனதுக்குள் நுழைந்து என் கல்லூரிக்கால நினைவுகளை ஆராய்ந்தால் ஒரே பசுமையாக இருப்பதாகத்தான் நினைத்துக்கொள்வார். ஆனால் உண்மையான நினைவுகள் பாலைவனம் என்பதை அவர் அறியமாட்டார். இதை எதற்குச் சொல்லவந்தேன் என்றால், படத்திலும் அப்படி தவறான, உண்மையில் நடக்காத நினைவுகளை வைத்து மெமரி டிடெக்டிவை ஏமாற்றுவதற்கும் வாய்ப்பிருக்கிறது இல்லையா..?

இதெல்லாம் இந்த மெமரி டிடெக்டிவிற்கு உள்ள பிரச்சனைகள். அதேபோல வேறு ஒருவரின் நினைவுகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது அந்த டிடெக்டிவின் சொந்த நினைவுகளும் குறுக்கிட்டு அவருடைய உயிருக்கும், மனதுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஜானுடைய மனைவி தற்கொலை செய்துகொண்டதால், அந்த நினைவு அவனை அதிகமாகப் பாதிக்கிறது. வேறொருவரின் நினைவுகளை ஆராய்ந்துகொண்டிருக்கும்போது இடையில் வந்து விசாரணையைத் தடுக்குமளவுக்கு அவனைப் பாதிக்கிறது. இதனால் அவனுக்குத் தொழில் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்பட்டு பணப்பிரச்சனை ஏற்படுகிறது.

இப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் ஜானுக்கு, அவனுடைய பாஸ் செபாஸ்டியன் மூலம் ஒரு கேஸ் கிடைக்கிறது. ஆன்னா (Anna) என்ற 16 வயதுப்பெண் பணக்காரப் பெற்றோருக்கு மகள். அளவுக்கு அதிகமான அறிவுடையவள் ஆனால் பிரச்சனைக்குறியவள். அவளுக்கு என்ன வேண்டுமென்று அவளுடைய பெற்றோரால் கூட தீர்மானிக்க முடியவில்லை. திடீரென ஆன்னா ஒரு வாரமாகச் சாப்பிடாமல் வீட்டிலிருந்தபடியே பட்டினிப்போராட்டம் நடத்துகிறாள். அவளுடைய பெற்றோர் என்னென்னவோ முயற்சி செய்தும் அவர்களால் ஆன்னாவைச் சாப்பிடவைக்க முடியவில்லை. அவளுக்கு என்ன வேண்டுமென்றும் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

கடைசி முயற்சியாக ஜானை அணுகி, அவள் மனதில் உள்ள நினைவுகளை ஆராய்ந்து, அவளுக்கு என்ன பிரச்சனை என்பதைக் கண்டுபிடித்து, அவளைச் சாப்பிடவைக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அந்த சவாலை ஏற்றுக்கொண்டு ஆன்னாவைப் பார்க்கவரும் ஜான் அவளைச் எப்படி சாப்பிட வைத்தான் ? அவளுடைய நினைவுகளை ஆராயும்போது ஆன்னா பல சிக்கல்கள் நிறைந்த பெண்ணாகத் தெரிகிறாள். உண்மையில் அவளுக்கு என்ன ஆனது ? அவள் உண்மையில் ஒரு சைக்கோவா ? இல்லை மற்றவர்களால் தண்டிக்கப்பட்ட அப்பாவிப் பெண்ணா ? என்பது தான் படத்தின் கதை.

அடித்து துவம்சம் செய்து அதகளம் பண்ணியிருக்க வேண்டிய கதைக்களம். நினைவுகளை ஆராய்தல் என்கிற கான்சப்டே ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு கான்சப்ட். இதை வைத்துக்கொண்டு எப்படிப்பட்ட ஒரு அருமையான சைக்கலாஜிகல் த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கலாம். நோலனிடம் கொடுத்திருந்தால் மற்றுமொரு இன்செப்ஷனைக் கொடுத்திருப்பார். ஆடியன்சைத் தன் கதைக்களத்தில் புகுத்தி, ஆடியன்சின் மனதிலுள்ள நினைவுகளையே ஆராய்ந்து, நம்மையே நமக்கு அடையாளம் காட்டியிருப்பார். ஆனால் இந்தப்படம் அப்படியெல்லாம் இல்லாமல் வெகுசாதாரணமாகச் செல்வதும், உப்புச்சப்பில்லாத ஒரு க்ளைமாக்சைக் கொண்டிருப்பதும் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

நோலன் ரசிகர்கள் வெகு எளிதில் இந்தப்படத்தின் க்ளைமாக்சை யூகித்துவிடலாம். அதேபோல க்ளைமாக்ஸ், அவ்வளவு நேரம் நாம் பார்த்த கதையோடு ஒன்றாமல், முரண்பட்டு தனித்துத் தொக்கி நிற்கிறது. லாஜிக் மீறலால் படம் முடியும்போது ஒருவித அசூயையே ஏற்படுகிறது. க்ளைமாக்சுக்கு முந்திவரை இருக்கிற ஒரு ஃபீல் படம் முடியும்போது சப்பென்று ஆகிவிடுகிறது.

ஆனால் படத்தில் பல சுவாரசியமான காட்சிகளை ரசிக்காமலும் இல்லை. படத்தில் ஜானுக்கும், ஆன்னாவுக்கும் இடையில் நடக்கும் கான்வர்சேஷன்களும், ஜான் ஆன்னாவின் நினைவுகளை ஆராயும் காட்சிகளும், மிகுந்த ரசிப்புக்குரியவை. கிட்டத்தட்ட திருடன்-போலிஸ் விளையாட்டு மாதிரி, ஜான் ஆன்னாவின் நினைவுகளை ஆராய, ஆன்னா ஜானின் நினைவுகளோடு விளையாடுவது நமது ஆர்வத்தை இன்னும் தூண்டிவிடுகிறது. ஆனால் கடைசியில், க்ளைமாக்சின் போது ஃப்பூ இவ்வளவுதானா என்று ஆகிவிடுகிறது. நாம் எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் வந்து அமையும்போது ஏமாற்றம் வரத்தானே செய்யும்.

டைரக்டர் Jorge Dorado-வுக்கு இது முதல் படமாம். முதல் குழந்தை. அதனால் குழந்தை உழப்புவதை நாம் மன்னித்து விட்டு, குழந்தையின் அழகிய சிரிப்பை மட்டும் ரசிப்போம். அதேபோல நடிகர்களும் அவ்வளவாகப் பிரபலம் இல்லாதவர்கள் தான். அதனால் நடிப்பிலும் அவ்வளவாக எதையும் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் குற்றம் சொல்வதற்கில்லை. முக்கியக் கதாபாத்திரங்களான ஜான், ஆன்னா கேரக்டர்களில் நடித்தவர்கள் முடிந்தவரை சிறப்பாகத்தான் நடித்துள்ளார்கள். 4.35 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான படம் கிட்டத்தட்ட 1.16 மில்லியன் டாலரை மட்டுமே வசூலித்துள்ளதாக விக்கி சொல்கிறது.

இந்தப்படத்தின் பெயரைப் போலவே உள்ள Dreamscape (1984) என்ற படமும் முன்பே வந்திருந்தாலும், அந்தப்படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்று இணையம் சொல்லுகிறது. ஆர்வமிருப்பவர்கள் அதையும் பார்த்துவிட்டு உண்மை என்னவென்று இங்கே சொல்லலாம்.

வெறும் ஒன்றரை மணி நேரமே படம். அதனால் தாராளமாக இந்தப்படத்தைப் பார்க்கலாம். பார்த்துவிட்டு இந்தப்படத்திற்கு எப்படி க்ளைமாக்ஸ் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். முடிந்தால் அந்த யோசனைகளை இங்கேயும் பகிருங்கள்.

Anna (2013) -  Don't Let Her In

அடுத்தபகுதி
-தொடரும்