Jun 30, 2013

Oz the Great and Powerful (2013) - 3 பெண் மந்திரவாதிகளுக்கிடையே சிக்கித்தவிக்கும் மேஜிக்மேன்


டிஸ்கி : இன்று பிறந்தநாள் கொண்டாடும் சினிமா பதிவுலகத்தந்தை அய்யா ஹாலிவுட் பாலா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

எனக்கு இந்த ஃபேண்டசி, சயின்ஸ்பிக்சன் கதைகள்னா ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல என் அப்பா எனக்கு நிறைய கதைகள் சொல்லிருக்காரு. தினமும் இரவு தூங்கப்போறதுக்கு முன்னாடி அப்பா-ட்ட கதை கேட்டுட்டுதான் தூங்குவேன். சில சமயம் அப்பா வர லேட்டாயிடுச்சுன்னா அம்மா கதை சொல்லி தூங்க வைப்பாங்க. அம்மா சொல்ற கதைகள் பெரும்பாலும் ஃபேண்டசி கதைகள் தான். அப்பா சொல்ற சமூகக்கதைகளக் காட்டிலும் அம்மா சொல்ற ஃபேண்டசி கதைகள் தான் ஆரம்பத்துல ரொம்ப பிடிச்சது. பெரும்பாலும் தானே யோசிச்சுதான் சொல்லுவாங்க. அப்போதைக்கு என்ன தோணுதோ அத அப்டியே சொல்லுவாங்க. இருந்தாலும் ரொம்ப சுவாரசியமா இருக்கும். அப்டியே கேட்டுட்டே தூங்கிருவேன். (சில சமயம் பேய்க்கதைகள் கேட்டு தூங்க முடியாம போனதும் நடந்துருக்கு)

ஆங்கிலப் படங்கள் பாக்க ஆரம்பிச்ச புதுசுல கூட முதல்ல ஜுராசிக் பார்க், பேக் டு த ஃப்யூச்சர், டாய் ஸ்டோரி னு ஃபேன்டசி அல்லது சயின்ஸ்பிக்சன் படங்கள்தான் ரொம்பப் பிடிச்சது. இன்று வரையிலும் கூட சன்டிவியில போடற டப்பிங் படங்கள, நேரமிருந்தா என் தம்பி கூட சேர்ந்து பாப்பேன். (இந்த பதிவு டைட்டில் பாத்திங்கள்ல. சன் டிவில அடிவயித்துல இருந்து கத்தி விளம்பரப் படுத்துறது ஞாபகம் வருதா ?) அந்த மாதிரி ஒரு ஃபேண்டசி படம் தான் இது.


வருடம் 1905,ஆஸ்கார் டிக்ஸ் (Oscar Diggs) - சுருக்கமா ஆஸ்(Oz) - கேன்சாஸ்ங்கற நகரத்துல வாழ்ந்துட்டு இருக்கற ஒரு சின்ன மேஜிக்மேன். கொஞ்சம் சுயநலமுள்ளவன். பார்க்கிற பெண்கள் எல்லார்ட்டயும் ஜொள்ளு விடுறான். அங்க இருக்கற ஒரு பயில்வான் பொண்டாட்டி கூடயே ஜொள்ளு விட, அந்த பயில்வான் இவன அடிக்கறதுக்கு துரத்திட்டு வர்றான். அவன்ட்டருந்து தப்பிக்கற ஆஸ் ஒரு பலூன்ல ஏறி பறந்து தப்பிக்கறான். ஆனா அந்த பலூன் ஒரு புயல் காத்துல சிக்கிக்குது.


பயங்கரமான அந்த புயல்லருந்து தப்பிக்கற ஆஸ், இப்போ வேற ஒரு உலகத்துக்கு வந்துட்டத உணர்றான். அதுதான் ஆஸ் உலகம். அங்க  தியோடோரா (Theodora) ங்கற ஒரு அழகிய பெண் மந்திரவாதிய சந்திக்கிறான். வழக்கம்போல அவள்ட்டயும் ஜொள்ளு விட, அவளோ இவன் தான் தங்களோட பிரச்சனய தீர்க்க வந்த மந்திரவாதினு நம்புறா. டார்க் ஃபாரஸ்ட்ங்கற இடத்துல வாழ்ற கொடிய, தீய மந்திரவாதியான க்ளிண்டாவ (Glinda) கொன்னு ஆஸ் உலகத்த காப்பாத்தி மன்னனா முடி சூட்டப் போறவன்னு நம்புறா.

ரெண்டு பேரும் எமரால்டு சிட்டிக்கு போறாங்க.போற வழியில ஒரு பறக்கும் குரங்கை ஒரு சிங்கத்துட்ட இருந்து காப்பாத்துறான் ஆஸ். தன்னோட உயிரைக் காப்பாத்துனதால சாகுற வரைக்கும் உன்னோட அடிமையா இருப்பேன்னு சொல்லி அதுவும் ஆஸ் கூட சேர்ந்து வருது. எல்லாரும் சேர்ந்து எமரால்டு சிட்டி அரண்மனையில தியோடோரா-வோட சகோதரி எவனோராவ ( Evanora) சந்திக்கறாங்க. ஒரு ரூம் ஃபுல்லா தங்கத்த காமிக்கற எவனோரா, அந்த கொடிய பெண் மந்திரவாதி க்ளிண்டாவ கொன்னுட்டா இந்த தங்கம் முழுக்க உனக்கே சொந்தம். அது மட்டுமில்லாம இந்த ஆஸ் உலகத்துக்கும் மன்னனா ஆகிடலாம்னு ஆஸ்கிட்ட சொல்லுறா.


தங்கத்து மேல ஆசைப்பட்டு தீய பெண் மந்திரவாதியக் கொல்லறதுக்கு, பறக்கும் குரங்கோட டார்க் ஃபாரஸ்டுக்குப் போறான். போற வழியில ஒரு அழகிய உயிருள்ள சீனப்பெண் பொம்மையைப் பாக்குறான். தீய பெண் மந்திரவாதியோட பறக்கும் படைகளால தன்னோட குடும்பத்தையே இழந்து, பயந்து உயிருக்குப் போராடிகிட்டு இருக்கற அந்த பொம்மையைக் காப்பாத்துறான். அதுவும் அவன் கூட சேர்ந்து டார்க் ஃபாரஸ்ட்டுக்கு போகுது. ஆஸ், பறக்கும் குரங்கு, சீனப்பெண் பொம்மை 3 பேரும் சேர்ந்து அந்த தீய மந்திரவாதியை அழிக்கறதுக்காகப் போறாங்க.


பிளான் பண்ணி க்ளிண்டாவோட மந்திரக்கோலை எடுத்துடறாங்க. ஆனா அதப் பாத்துடற க்ளிண்டா அவங்க முன்னாடி வந்து நான் கெட்டவ கிடையாது. உண்மையான கெட்ட மந்திரவாதி அந்த எவனோரா தான்னு சொல்லுறா. அத நம்பி அவ கூட 3 பேரும் போறாங்க. அப்புறம் என்னாச்சி ?


உண்மையிலேயே யாருதான் கெட்ட மந்திரவாதி ?ஆஸ் அந்த உண்மையை தெரிஞ்சிக்கிட்டானா ? அந்த கெட்ட மந்திரவாதிக்கிட்டருந்து ஆஸ் உலக மக்களைக் காப்பாத்துனானா ? தான் நினச்சபடியே ஆசைப்பட்ட தங்கத்த எல்லாம் அடைஞ்சானா ? அவனை உண்மையா காதலிச்ச தியோடோரா என்ன ஆனா ?

எல்லாத்தயும் லேப்டாப் திரையில் காண்க.


கதை ரொம்ப மெதுவா போனாலும் ரொம்ப சுவாரசியமா போகுது. சில பல திருப்பங்கள்னால போரடிக்காம போகுது. படம் ஆரம்பிக்கும் போது கருப்பு வெள்ளை ஸ்க்ரீன், மோனோ ஆடியோ சிஸ்டம், 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோவோட ஆரம்பிக்குது. கிட்டத்தட்ட முதல் 20 நிமிடங்களுக்கு இதே நிலைமை தான். 20வது நிமிடத்துல ஆஸ், புயல்லருந்து தப்பிச்சு ஆஸ் உலகத்துக்குள்ள நுழையும்போது படம் அப்பிடியே கலர் ஸ்க்ரீன், DTS சவுண்ட் சிஸ்டம், 2.35:1 ஆஸ்பெக்ட் ரேஷியோவுக்கு மாறுது. அந்த மாற்றம் பாக்கறதுக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு.


அதுவரைக்கும் பிளாக் அண்ட் ஒயிட் பாத்ததுக்கெல்லாம் சேர்த்து மொத்தமா கலர் ஸ்க்ரீன் வருது. எனக்குத்தெரிஞ்சு இவ்ளோ கலர்ஃபுல்லான ஸ்க்ரீன் இதுக்கு முன்னாடி நான் பாத்தது இல்ல. (வேற எதுனா படம் இந்த மாதிரி கலர்ஃபுல்லா இருந்தா சொல்லுங்கப்பு) படம் முழுக்கவே கலர அள்ளித்தெளிச்சுருக்காங்க. பளபளனு மின்னுது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கிற விதத்துல எடுத்துருக்காங்க. ஒவ்வொரு பிக்சலும் செம கலர் தான். ஆனா அத்தனையும் ஸிஜினு அறிவுக்கு அப்பிடியே நல்லாத் தெரியுது. இருந்தாலும் அதெல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காம படம் பாத்தோம்னா நல்ல என்டர்டெயின்மெண்ட் நிச்சயம்.


ஹீரோ ஆஸ் - ஸ்பைடர்மேன் படத்துல பீட்டர் பார்க்கர் நண்பன் ஹாரியா வருவாரே அந்த தான் ஆஸ் கேரக்டர்ல நடிச்சுருக்காரு. Robert Downey Jr., Johnny Depp போன்ற பல பிரபல நடிகர்கள் நடிக்கறதா இருந்து அப்புறம் கடைசில இவருக்கு வாய்ப்பு கிடைச்சுருக்கு. கிடைச்ச வாய்ப்ப நல்லா பயன்படுத்திக்கிட்டாருனு தான் சொல்லனும். தியோடோராவா . இந்தப்பொண்ணு நடிச்ச  Friends with Benefits படத்து சீன் ஒன்னு ஒன்னும் இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு. அவ்ளோ நல்லா நடிப்பாங்களா பாஸ்?-னு கேட்டா நீங்க இன்னும் கொழந்தனு தான் அர்த்தம். சீக்கிரம் காம்ப்ளான் குடிச்சு வளருங்க.


மத்த 2 மந்திரவாதிகளும் அழகுப் பெண்கள் தான். அதுக்காண்டியாச்சும் படம் போரடிக்காம இருக்கும். அந்தக் குரங்கோட ரியாக்சன் பல இடங்கள்ல ரசிக்க வைக்குது. அந்த குட்டி சீனப்பெண் பொம்மையை கண்டிப்பா உங்களுக்குப் பிடிச்சுப் போகும். அவ்ளோ க்யூட்டா இருக்கும். கடைசில க்ளைமாக்ஸ்ல அந்த தீய மந்திரவாதியை பயமுறுத்துறதுக்காக ஆஸ் பண்ற அந்த மேஜிக் ரொம்பவே ரசிக்கற விதத்துல இருந்தது. மொத்தத்துல ஒரு ஃபேன்டசி படத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் இந்தப் படத்துல இருந்தது.


இந்தப் படம் L. Frank Baum அப்டிங்கறவரு எழுதுன Oz நாவல்களை அடிப்படையா கொண்டு எடுக்கப்பட்டது. மொத்தம் 14 ஆஸ் நாவல்கள் எழுதியிருக்காரு. இங்க கிளிக்கினீங்கனா மொத்த நாவல் லிஸ்ட்டயும் பாக்கலாம். இதெல்லாமே இப்போ பொதுவுடமை ஆயிடுச்சு. ஸோ நெட்ல ஃப்ரீயா கிடைக்கும். படம் பிடிச்சுருந்தா இந்த நாவல்களையும் தேடிப்பிடிச்சு படிச்சுப் பாருங்க.

ஏற்கனவே 1939ல ஆஸ் பத்தின படம் எம்.ஜி.எம். தயாரிப்புல வந்திருக்காம். அதுக்கப்புறம் டிஸ்னி கூட ஒரு படம் தயாரிச்சுருக்கு. இது டிஸ்னி தயாரிப்புல வர்ற ரெண்டாவது ஆஸ் படம். இதுவும் படம் முடிஞ்சு போற மாதிரி காட்டல. அடுத்து இதோட தொடர்ச்சியா அடுத்த படம் வரப்போகுதுனு வேற அறிவிச்சுருக்காங்க.

அப்புறம் இந்தப்படம் பாக்கும்போதே தோணுன ஒரு விஷயம். ஸ்மார்ட்ஃபோன் யூஸ் பண்ற எல்லாருக்கும் "Temple Run"னு ஒரு கேம் இருக்கறது தெரியும். இதை விளையாடாதவங்களே கிடையாது. இதுல ரெண்டு வெர்ஷன்ஸ் வந்துருக்கு. எல்லாருமே இமாங்கி ஸ்டுடியோஸ் வெளியிட்ட அந்த ரெண்டு டெம்பிள் ரன் கேமையும் விளையாடியிருப்பீங்க. இதே டெம்பிள் ரன் கேம டிஸ்னியும் ரெண்டு வெர்ஷன்ஸ் வெளியிட்டுருக்கு. அதுல ரெண்டாவது வெர்ஷன் பேரு டெம்பிள் ரன் ஆஸ் (Temple Run : Oz). அப்பிடியே இந்தப் படத்துல இருக்கற அத்தனை விஷயங்களும் இந்த கேம்ல வரும். நான் அதனாலயும் ரொம்ப ரசிச்சுப் பார்த்தேன்.

அந்த கேம ஆன்ட்ராய்டு மொபைல் வச்சுருக்கறவங்க டவுன்லோடு பண்ண இங்கன க்ளிக் பண்ணுங்க.

அப்பறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். இந்தப் படத்தோட டைரக்டர் யாரோ சாம் ரெய்மியாம். ஈவில் டெட், ஸ்பைடர் மேன் போன்ற படங்கள இயக்குனவராம்.

Oz the Great and Powerful : கொழந்த மனம் கொண்ட ஃபேண்டசி பிரியர்களுக்கு.

4 comments:

 1. // கொழந்த மனம் கொண்ட ஃபேண்டசி பிரியர்களுக்கு//

  என்ன மாதிரி குழந்தைகளுக்காக கொஞ்சம் Animation படங்கள் பத்தியும் எழுதுங்க தல

  ReplyDelete
  Replies
  1. நண்பா லியோன்,

   இந்தப் படம் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும். அப்புறம், அனிமேஷன் படங்கள் நான் ரொம்ப கம்மியாதான் பாத்துருக்கேன். இதுவரைக்கும் மொத்தமே 10,20 படங்கள் தான் பாத்துருப்பேன். இருந்தாலும் உங்க பேச்ச தட்ட முடியுமா ? கண்டிப்பா எழுத முயற்சி பண்றேன். :) :)

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!!

   Delete
 2. தல,
  எனக்கு பேண்டசி கதைகள் மேல அவ்வளவு ஆர்வம் இல்ல, ஆனா இந்த படம் பிளைட்ல இருந்திச்சு...ஏனோ பார்க்க தோனல. படத்தை பத்தி ரொம்ப சுவாரிசியமா எழுதி இருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. தல,

   பொதுவா ஆண்களுக்கு அவ்வளவா ஃபேண்டசி கதைகள் பிடிக்காது தான். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தான் ரொம்ப பிடிக்கும். இதுல நான் ஒரு குழந்தை, சின்னப்பையன்-கறத மறந்துறாதீங்க.. :) :)

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல..!!

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *