Nov 8, 2013

பாண்டிய நாடு (2013) - விஷாலின் விஷ்வரூபம்தீபாவளிக்கு வந்த மூன்று படங்களில் "ஆரம்பம்" முதல்நாளே பார்க்க வேண்டும் என்று எப்போதும் போல முடிவு செய்து அதன்படி நண்பர்களுடன் சென்று ரகளையாகப் பார்த்துவிட்டேன். அதேபோல "ஆல் இன் ஆல் அழகுராஜா" ட்ரைலர் பார்த்ததுமே இந்தப்படத்தை ஓசியில் கிடைத்தால் கூட பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். "பாண்டிய நாடு" படம் மட்டும் பார்ப்பதா வேண்டாமா என்று கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. என்னதான் சுசீந்தரனின் இயக்கம் என்றாலும் சற்று சந்தேகமாகவே இருந்தது. அதற்குக் காரணம் விஷால் & ராஜபாட்டை. ஆனால் படம் பார்த்த அத்தனை பேரும் ஆஹா ஓஹோவென்று பாராட்ட, சரி நாமும் இந்தப்படத்தைப் பார்த்து தமிழ்சினிமாவை வாழவைப்போம் என்ற தியாக(!!) மனப்பான்மையுடன் பார்த்துவிட்டேன். படம் எப்படி ?

விஷாலின் படங்கள் இதுவரை எனக்கு அயற்சியையே கொடுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு திமிரு, சத்யம், தோரணை, வெடி, மலைக்கோட்டை போன்ற படங்கள். இவரின் படங்களிலேயே எனக்கு பிடித்த படம் என்றால் அது "சண்டக்கோழி" தான். பல படங்களில் பார்த்த கதைதான் என்றாலும் பரபரப்பான, விறுவிறுப்பான திரைக்கதை அந்தப்படத்தை வெற்றியடையச் செய்து இருக்கும். அதுபோக ராஜ்கிரண் வேறு அந்தப்படத்தில் பட்டயைக் கிளப்பி இருப்பார். காதல், காமெடி, ஆக்சன் என சரிவிகிதத்தில் கலந்துகட்டி அடித்து சரியான கலவையாகக் கொடுத்திருப்பார் அந்தப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி. எனக்குத் தெரிந்து விஷாலுக்கு மாபெரும் வெற்றிபெற்ற படம் அதுதான்.

அதுபோக "தாமிரபரணி" படம், இயக்குனர் ஹரியின் இயக்கத்தினால் வெற்றி பெற்ற படம். சென்டிமெண்டை தூக்கலாக வைத்து, அதிரடி ஆக்சன் காட்சிகளை வைத்து காட்சியமைப்பது அவரது பாணி. அந்தப்படமும் அதற்கு விதிவிலக்கில்லாமல் அமைந்து விஷாலுக்கு வெற்றிப்படம் கிடைத்தது. இதைத்தவிர விஷாலின் முதல் படம் "செல்லமே" முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு நடிப்பில் புகுந்து விளையாடியிருப்பார். தீராத விளையாட்டுப் பிள்ளை சுமாரான படம். இப்படி இவரின் படங்கள் ஒருசிலவற்றைத் தவிர மற்ற அனைத்துமே ஒருவித அயற்சியையே கொடுத்திருக்கின்றன. அதிலும் சமீப காலத்தில் வெளிவந்த அவன் இவன், வெடி, பட்டத்து யானை போன்ற படங்களால் ரொம்பவே பயங்காட்டி விட்டார்.

இந்த சூழ்நிலையில் இயக்குனர் சுசீந்தரனோடு கைகோர்த்து "பாண்டிய நாடு" படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் இவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவரின் பெரும்பாலான படங்கள் இவரின் அப்பா அல்லது அண்ணனால் தயாரிக்கப்பட்டதுதான். ஆனால் இந்தப்படத்தில் தான் முதல் முறையாக தயாரிப்பாளராக இவரது பெயர் வருகிறது. உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ஒருவேளை இயக்குனராக இருந்திருந்தால் நல்ல படங்களைக் கொடுத்திருப்பாரோ என்னமோ ?? இவ்வளவு நாட்கள் கதையில் சரியாகக் கவனம் செலுத்தாத விஷால், இந்தமுறை மிகத்தெளிவாக யோசித்து ஒரு நல்ல இயக்குனரின் கையில் தன்னை ஒப்படைத்துள்ளார்.

இயக்குனர் சுசீந்தரன், சாதாரணக் கதையை கையில் எடுத்துக்கொண்டு அதைத் தனது திரைக்கதை மூலம் அசாதாரணமாக மாற்றுவது இவருக்குக் கைவந்த கலை. கோலிவுட்டின் பெரும்பாலான இயக்குனர்கள் கதை என்றவுடனே 5 பாட்டு, 6 காமெடி சீன், 4 ஃபைட் சீன், ஹீரோயினுடன் காதல், ஹீரோவின் பன்ச் டயலாக், இடையில் பிரச்சனை பண்ணும் வில்லன் என ஃபார்முலாவாகக் கதை யோசித்து, அதற்கு மொக்கையான திரைக்கதை எழுதி நோகடித்து படம் எடுத்தால், இவர் வந்த புதுதிலேயே ஒரு எழுத்தாளருடன் கைகோர்த்து கதை, வசனங்களை எழுதிப் புதுமை படைத்தார். முதல் படம் "வெண்ணிலா கபடி குழு" - கபடியை மையமாக வைத்து வந்து வெற்றி பெற்ற படம். வசனம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.

சினிமா இலக்கியத்துடன் கைகோர்த்தால் அதில் கிடைக்கும் அனுபவமே அலாதியானது. ஆனால் தமிழ் சினிமாவின் சாபக்கேடு- நாவலையோ, சிறுகதையையோ மையமாக வைத்து வந்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்கே நிலைமை உள்ளது. சுசீந்தரன் தனது முதல் படத்திலேயே எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுடன் இணைந்து வேலை செய்தார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் ஏகப்பட்ட வசூலை வாரிக்குவித்தது. மட்டுமின்றி, அந்தப்படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருதுக்காக சுசீந்தரன் பரிந்துரை செய்யப்பட்டார்.

அதையடுத்து பக்கா கமர்சியல் பழிவாங்கும் கதையை தேர்ந்தெடுத்து அடுத்த வெற்றியைக் கொடுத்த படம் "நான் மகான் அல்ல". அந்தப்படத்தின் க்ளைமாக்சில் வரும் சண்டைக்காட்சியை அவ்வளவு எளிதாக எவரும் மறந்துவிட முடியாது. இப்போது நினைத்தால் கூட அதில் வரும் பிண்ணனி இசை அப்படியே காதில் ரீங்காரமிடுகிறது. காதல் காட்சிகள் முதல் பாதி + ஆக்சன் காட்சிகள் மறுபாதி என்று பக்கா கமர்சியலான திரைக்கதை.


அதையடுத்து மீண்டும் இலக்கியத்துக்குள் காலடி எடுத்து வைத்து எடுத்த படம் "அழகர்சாமியின் குதிரை". பாஸ்கர் சக்தியின் சிறுகதையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தார் சுசீந்தரன். அப்புக்குட்டி, சரண்யா போன்றோரை முதன்மைக் கதாபாத்திரங்களாக வைத்து அற்புதமாக திரைக்கதை அமைத்திருப்பார். பல்வேறு திசைகளிலிருந்தும் பாராட்டுக்களை அள்ளிய அந்தப்படத்துக்கு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.

அந்தப்படத்தைப்பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுசீந்தரன் "அடுத்து ரொம்ப ஜாலியா, ரகளையா, சும்மா பூந்து விளாடுற மாதிரி ஒரு மாஸ் ஆக்சன் படம் எடுக்கப்போறேன்" என்று கூறினார். அப்படி எடுத்த படம் தான் "ராஜபாட்டை". பாவம் முதல் மூன்று படங்களில் கிடைத்த பேரை ஒரே படத்தில் தொலைத்துவிட்டு அடுத்த படத்துக்காக அலையவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானார். அடுத்து சுதாரித்துக்கொண்டு எடுத்த படம் தான் "ஆதலால் காதல் செய்வீர்". க்ளிக் செய்து விமர்சனத்தைப் படிக்கலாம்.

மீண்டும் ஒரு பெரிய வெற்றி சுசீந்தரன், விஷால் இரண்டு பேருக்குமே தேவைப்பட்ட நேரத்தில் மிகச்சரியானதொரு வாய்ப்பாக இந்தப்படம் அமைந்துள்ளது. மீண்டும் ஒருமுறை ரிஸ்க் எடுக்க விரும்பாத சுசீந்தரன் தனது பழைய கதையான "நான் மகான் அல்ல" படத்தையே தோசையைத் திருப்பிப்போட்ட மாதிரி சற்றே மாற்றங்களைப் புகுத்தி வெற்றிப்படமாகத் தந்துள்ளார்.

அதே கதை. முதல் பாதி ஹீரோ ஹீரோயின் இடையேயான இளமை ததும்பும் ரொமான்டிக் காட்சிகள். ஆனால் "நான் மகான் அல்ல" அளவுக்கு இல்லை என்பதே உண்மை. இடைவேளையின்போது குடும்பத்தினர் ஒருவர் வில்லன்களால் கொலை செய்யப்படுகிறார். அங்கே அப்பா என்றால் இங்கே அண்ணன். அவ்வளவு தான் வித்தியாசம். பிறகு இரண்டாம் பாதியில் ஹீரோ வில்லனை எப்படிப் பழிவாங்குகிறான் என்பதே கதை. இந்தக்கதையைக் கேக்கும்போதே கொட்டாவி வருகிறதா. அடப்போங்கடா இதைத்தானே வருஷம் பூரா வர்ற அத்தனை படங்கள்லயும் பாக்குறோம் என்று அயற்சியாக இருக்கிறதா ?

ஆனால் இதே கதையை திரைப்படமாகத் திரையில் பார்க்கையில் அடடே என்று ஆச்சரியப்பட வைக்கிறார். அதிலும் முழுக்க முழுக்க "நான் மகான் அல்ல" கதையையே மறுபடியும் கையில் எடுத்து அதை சுவாரசியமாகவும், வெற்றிப்படமாகவும் கொடுத்த இயக்குனரைக் கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும். இரண்டு படங்களிலும் கதாபாத்திரங்கள் கூட ஒரே மாதிரி தான் இருக்கின்றன. நல்ல அப்பா, அம்மா, வெகுளியான கதாநாயகன், அழகான கதாநாயகி (இந்தப்படத்துல இது ஒன்னு மட்டும் கொஞ்சம் டவுட்டுதான்), அதிரடியான வில்லன் என இரண்டிலும் கதாபாத்திரங்கள் கூட ஒரே மாதிரி தான் இருக்கின்றன. ஆனால் அவற்றின் குணாதிசயங்களில் தான் வேறுபாட்டைக் காண்பித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

சுசீந்தரனின் படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சில சீன்களே வருகிற கதாபாத்திரம் என்றாலும் அதற்கும் ஒரு கதாபாத்திர வடிவமைப்பு இருக்கும். அந்த கதாபாத்திரத்தின் பிண்ணனியை முழுமையாக உணர்ந்து அதற்கேற்றாற் போல அந்தக்கதாபாத்திரம் எதிர்வினை ஆற்றுவது போல அருமையாக அமைத்திருப்பார். அதனால் தான் அவரின் அத்தனை படங்களின் கதாபாத்திரங்களும் தனித்து தெரிகின்றன.

"பாண்டிய நாடு" படத்தில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் கதாநாயகனின் அப்பா வேடம்தான். அந்த கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் பாரதிராஜா அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ரியாக்சனும் அவ்வளவு அருமையாக அமைந்து படம் நம்மை மேலும் கவருகிறது. அதிலும் தன் மூத்த பையனை இழந்துவிட்டு, அவனைக் கொலை செய்தவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் இயலாமையில் வருந்தும்போது அப்படியே மிடில்கிளாஸ் அப்பாவைப் பிரதிபலிக்கிறார். இனிமேல் இவர் இந்தமாதிரி இன்னும் நிறையப் படங்களில் நடிக்க வேண்டும்.விஷால் பயந்தாங்கொள்ளிப் பையனாக மறுபடியும் ஒருமுறை நடிப்பில் புகுந்து விளையாடியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், ஆக்சன் காட்சிகளிலும் மிரட்டுகிறார். அண்ணன் இறந்த சீனில் துக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியில் மட்டும் அவரது ரியாக்சன் சற்றே குறைவாக இருந்தது. இன்னும் மெருகேற்றியிருக்கலாம். அதைத்தவிர்த்து அப்பாவிப் பையனாக படம் முழுவதும் வந்து ரசிகர்களைக் கவருகிறார். கடைசியில் வரும் சண்டைக்காட்சியில் கூட அந்த அப்பாவித்தனத்தைக் கடைபிடித்திருக்கிறார். சண்டை போடும்போது சற்றே பயம் கலந்த வெறியுடன் தான் சண்டை போடுகிறார்.

இடையில் கெஸ்ட் அப்பியரன்சாக வரும் விக்ராந்த் ஒருசில காட்சிகளே வந்தாலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ஹீரோயின் லட்சுமி மேனன் பற்றி என்ன சொல்லுவது ? பாவம் புள்ளை. பள்ளிக்கூடம் சென்றவரைப் பிடித்து இழுத்து வந்து இந்தப்படத்தில் டீச்சராக்கி இருக்கிறார்கள். வயதுக்கு மீறிய பக்குவம் தெரிகிறது முகத்தில். நடிப்பு ஓக்கே. முதல் பாதியில் காதலுக்கு மட்டும் வந்துவிட்டு பிற்பாதியில் காணாமல் போகிறார்.

இன்னொருவரைப் பற்றி கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும். அடுத்த சந்தானமாக ஆகிக்கொண்டிருக்கும் சூரிதான் அது. சுசீந்தரன் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு'வில் புரோட்டா சூரியாக அறிமுகமாகி 50 புரோட்டாவுடன் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு இன்றுவரை ஏறுமுகம் தான். சந்தானத்தின் காமெடி போரடிக்க தொடங்கியிருக்கும் இந்த சமயத்தில் இவர் மட்டும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு காமெடி பண்ணினால் அடுத்த காமெடி மன்னன் இவர் தான். இவரின் வசன உச்சரிப்பே வித்தியாசமாக அமைந்து சிரிப்பை மூட்டுகிறது. இந்தப்படத்தில் வெறும் காமெடிக்காக மட்டுமில்லாமல் கதாநாயகனுக்கு வழிகாட்டும் நண்பனாகவும் நடிப்பில் பின்னியிருக்கிறார்.

கதை மதுரையைச் சுற்றி நடப்பதால் அதற்கேற்றாற்போல வில்லன். அவரது குரலிலேயே தான் ரவுடி என்பதை சொல்லாமல் சொல்கிறார். ஒரு மெயின் வில்லன் அதுபோக ஒரு சைடு வில்லன். இரண்டு பேரும் வில்லத்தனத்தில் பிரமாதப்படுத்தி இருக்கின்றனர். கடைசியில் பழிவாங்கவேண்டும் என்ற உணர்வு படம் பாக்கும் நமக்கே ஏற்படும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர்.

ஒரு சந்தோஷமான குடும்பத்தில் ஒரு துர்மரணம் நடந்தால் அந்தக் குடும்பம் எப்படி உடைந்து, சின்னாபின்னமாகும் என்பதை நன்றாக உணர்ந்துள்ளார் இயக்குனர். இரண்டாம் பாதியில் வருகின்ற காட்சிகளில் அதை அழுத்தமாகப் பதிந்து பழிவாங்குவதற்கான காரணத்தை சரியாகப் புரியவைக்கிறார். அதனால்தான் நமக்கும் அந்த வில்லனைப் பழிவாங்கவேண்டுமென்ற எண்ணம் உருவாகின்றது. 

படத்தில் சின்னசின்ன சுவாரசியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. உதாரணத்துக்கு விஷால், தனக்கு பார்க்கப்பட்ட பெண்ணை காபிஷாப்பில் குழந்தையுடன் சந்தித்துப் பேசும் காட்சி, லட்சுமிமேனன் தன்னை டீக்கடையில் ஒருசிலர் கலாய்க்கின்றனர் என்றவுடன் "மாமன்ட சொல்லிட்டேல நான் பாத்துக்குறேன்" என்று கெத்தாகப் பேசும் காட்சி, சண்டை போடும்போது முகத்தை மூடிக்கொள்வது, க்ளைமாக்சில் வில்லனைக் கொல்லும் விதம் என சின்ன சின்ன ஆச்சரியங்கள் படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. 

அதேசமயம் குறைகளும் இல்லாமல் இல்லை. வில்லனுக்கு ஒட்டுக்கேக்கும் வசதியுடன் கூடிய செல்போனை விற்பது, தேவையில்லாமல் படத்தின் போக்கையே கெடுக்கும் வகையில் வரும் ஃபை ஃபை பாடல் என குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் பரபர திரைக்கதை முன் அவை எடுபடாமல் போய்விட்டது என்பது தான் உண்மை. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல ஆக்சன் விருந்து இந்தப்படம்.

பாண்டிய நாடு (2013) - பழிவாங்கும் நாடு

பி.கு:
ஆரம்பம் விமர்சனம் எங்கே என்று கேட்போருக்கு பதில் ஹிஹிஹி..!! தல படம்லாம் விமர்சனம் பண்ணக்கூடாது என்பது என் கொள்கைகளுள் ஒன்று..!!

8 comments:

 1. சரி சரி... பாக்குறேன். நான் மகான் அல்ல பக்கா கமர்ஷியல் படம். இதுவும் அதுபோலவே இருக்கும் என்று நினைக்கிறேன்... வழக்கமான மசாலாவையும் மொன்னைத்தனங்கள் இல்லாமல் பக்காவாக திரைக்கதை அமைத்து எடுத்தால் நாங்களும் என்சாய் பண்ணுவோம்ல அதை விட்டு விட்டு நாரடிக்க வைக்கிறானுவ...

  ReplyDelete
  Replies
  1. பக்கா மசாலா, போரடிக்காத திரைக்கதை. அதனால கண்டிப்பாகப் பார்க்கலாம் :)

   Delete
 2. தல எனக்கும்விஷால் படத்துல ரெம்ப பிடிச்சது சண்டகோழி தான் அப்புறம் பாலாவின் அவன் இவன் ஒரு நடிகரா மிக பெரிய வெற்றி விஷாலுக்கு மிக பிடித்தது ரசிச்சேன், மற்றபடி ஒன்னும் அவர் படம் பிடிக்கலை சரியா கதையை தேர்ந்து எடுக்க தெரியாமல் தடுமாறி கொண்டு இருந்தவருக்கு அடிச்சது ஆர்டர் சுசீந்தரன் மூலம் மிக சிறந்த இயக்குனர் பல களங்களில் புகுந்து விளையாடுறார் ராஜபாட்டை அவரையும் மறந்து தயாரிப்பாளர் மற்றும் விக்ரம் அவர்களின் அழுத்தத்தில் செய்த தவறு தானே அதனால் தான் பகிரங்க மன்னிப்பு விகடனில் சுசீந்திரன் கேட்டார் என்றும் இவரின் படங்களை நான் எதிர் பார்ப்பேன், அதே போல பாண்டியநாடும் ஏமாற்றவில்லை நல்ல கமெர்சியல் படம் , பாரதிராஜா கிளைமாக்ஸ் போது விஷாலை பார்த்து தரும் முகபாவனை செம்ம, எல்லோரின் சிறந்த பங்களிப்பு அந்த லக்ஷ்மி மேனனை தவிர :) ;)

  ReplyDelete
  Replies
  1. ஒரு குட்டி விமர்சனத்தையே எழுதிட்டீங்களே தல..!!
   அதுசரி உங்களுக்கும் அந்தப்புள்ளை லக்ஷ்மி மேனனை புடிக்காதா ? அப்போ யாருக்குதான் புடிச்சிருக்கு ??!! தெரிஞ்சவங்க எல்லாருமே புடிக்கல புடிக்கலனே சொல்றாங்க..

   Delete
 3. சூப்பர் விமர்சனம் தல, ரொம்ப விரிவா எழுதி இருக்கீங்க....
  எனக்கு படம் ரொம்பவே பிடிச்சு இருந்தச்சு. சுசீந்திரன் அக்ஷன் சீன்ஸ் எடுப்பதில் கில்லாடி..ராஜபாட்டை படத்துல வர மார்க்கெட் பைட் எனக்கு ரொம்பவே பிடிச்ச சண்டைகாட்சி. இதுலையும் கடைசி பைட் அப்புறம் மாட்டுத்தாவனி பைட் செம...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு "நான் மகான் அல்ல" க்ளைமாக்ஸ் ஃபைட் தான் தல ரொம்பப்பிடிக்கும். யுவனோட அதிரடி இசைல, கார்த்தி மட்டும் தனியா அந்த 4 பேருகிட்ட மட்டிக்கிடறப்ப ஒரு ம்யூசிக் போட்டுருப்பாரு பாருங்க.. புல்லரிச்சுடும். WWE ல வர்ற சண்டைலாம் கூட அதுல வரும். வெறித்தனமா இருக்கும்.

   Delete
 4. பி. கு பிரமாதம்......நண்பா.... எனக்கு என்னமோ பாண்டியநாடு மொக்க படமா தான் இருந்துச்சு... ஆல் இன் ஆல் அழகுராஜா பாத்துட்டு இந்த படம் பாத்ததால ஒகே ...

  ReplyDelete
  Replies
  1. மாமா.. கமெண்டு போட்டது நீயா.. என்னால நம்பவே முடியலியே.. அதுவும் தமிழ்ல.. சூப்பர்.. நன்றி மச்சி.. :)

   ஆஇஆஅ வேற பாத்தியா நீ..?? பாவம்டா நீ.. :P

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *