Nov 24, 2013

இரண்டாம் உலகம் (2013) - செல்வாவின் கடைசி உலகமா ?


"இரண்டாம் உலகம்" முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று வெறியில் இருந்து ஒருசில காரணங்களால் பார்க்க முடியாமல் போயிற்று. சனிக்கிழமை இரவுதான் பார்க்க நேர்ந்தது. படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் ஒருசில விடயங்கள் சொல்ல ஆசைப்படுகிறேன்.

இயக்குனர் செல்வா என்ற படைப்பாளியின் மீது எப்போது எனக்கு மரியாதை வந்தது என்று யோசிக்கிறேன். காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் கேரக்டரை வெளிப்படுத்தும் படியான அந்த லன்ச் சாப்பிடும் காட்சியைப் பார்த்துவிட்டு, இப்படி ஒரு கேரக்டரைஷேஷனா என ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனேனே அப்போதா ? இல்லை, 7ஜி ரெயின்போ காலனியில், எதிரும் புதிருமாக இருக்கும் கதிருக்கும் அனிதாவுக்கும் இடையே மலரும் காதலை அற்புதமாகக் காட்டி, க்ளைமாக்சில் கதறி, தேம்பி அழ வைத்தானே அப்போதா ? புதுப்பேட்டையின் ஒவ்வொரு காட்சியிலும் புல்லரிக்க வைத்து தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பாதையை வகுத்தானே, தமிழ்சினிமா இனி மெல்ல பிழைத்துவிடும் என நம்பிக்கையைக் கொடுத்தானே அப்போதா ? இல்லை, ஆயிரத்தில் ஒருவனில் யாரும் யோசிக்க முடியாத ஒரு தளத்தில் கதை யோசித்து, அதில் எந்தவித சமரசமும் செய்யாமல் சொல்ல நினைத்ததைப் பட்டென சொல்லி மனம் கவர்ந்தானே அப்போதா ? இல்லை, மயக்கம் என்ன படத்தில் தனுசும் ரிச்சாவும், தங்களிருவருக்கும் உள்ள காதலை உணர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு முத்தமிட்டுக் காதலை வெளிப்படுத்தும், இன்டர்வெல்லுக்கு முன்னதான பஸ் ஸ்டாண்ட் காட்சியைப் பார்த்து, காதலை இப்படி அணு அணுவாக ரசிக்க வைக்கிறானே என்று பரவசமடைந்தபோதா ? தெரியவில்லை. 

ஆனால் இந்த படைப்பாளியின் தாக்கமும், ஒரு செல்வா வெறியனும் என்னுள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தான். அது ஒன்றும் கண்மூடித்தனமான வெறித்தனம் இல்லை. ஒவ்வொரு படத்திலும் அவனது காட்சியமைப்பைப் பார்த்தும், திரைக்கதையைப் பார்த்தும், கதாபாத்திரங்களைப் பார்த்தும், அவன் கட்டமைக்கும் கதைக்களத்தைப் பார்த்தும் வந்த வெறித்தனம். அவன் இதுவரை என்னை ஏமாற்றியதே இல்லை. ஒவ்வொரு படத்திலும் இதற்கு முந்தையை அவனது படத்தை விட அதிகமான பரவசத்தையே, காட்சி இன்பத்தையே கொடுத்திருக்கிறான். ஒருசிலர் அவனது கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஒரேமாதிரி இருக்கின்றனவே என்று குறைபட்டுக்கொள்ளலாம். ஆனால் அதில் ஏதும் தவறு இருக்கிறமாதிரி எனக்குத் தெரியவில்லை. கதைக்களங்கள் ஒவ்வொரு படத்திலும் வேறு வேறாகத்தானே இருக்கின்றது.

இதுவரை அந்த படைப்பாளி எடுத்த அத்தனை படங்களும் தமிழ் சினிமாவின் முகமூடிகளைக் கிழித்தெறிந்த படங்கள். ஹீரோவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டுதான் கதையையே எழுத ஆரம்பித்த ஆட்கள் நிறைந்த இந்த தமிழ்சினிமாவில், சாதிக்க வேண்டும் தமிழ் சினிமாவில் நிறைய புதுமைகள் புகுத்த வேண்டும் அதன் போலிபிம்பங்களை வேரோடு அறுக்க வேண்டும் என்று கலைவெறியுடன், படங்களை எடுத்து தமிழ் ரசிகர்களின் காலடியில் இந்தா பிடித்துக்கொள் என்று கர்வத்துடன் போட்ட இளைஞன் அவன். பணம் சம்பாதிப்பது மட்டுமே சினிமாவின் நோக்கமல்ல, ரசிகனை தனது படைப்பால் மனம் கவர்ந்து அவனை மெய்மறக்கச்செய்யும் அளவுக்கு படைப்பை வழங்கவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவன்.

ஆனால் அவனது படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். புதுப்பேட்டையும் ஆயிரத்தில் ஒருவனும் காலங்கடந்துதான் அதற்குரிய அங்கீகாரம் பெற்றது. உரிய நேரத்தில் கிடைக்காத அங்கீகாரம், உற்சாகம், என்னைப்பொறுத்தவரை வேஸ்ட் தான். செல்வா என்ற படைப்பாளியைக் கொன்றுவிட்டு அவன் செத்தபிறகு அவனது படைப்புகளைப் புகழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. இதைப்பற்றி பேபி ஆனந்தன் எழுதிய இந்தப்பதிவை ஒருமுறை படித்துவிட்டு வாருங்கள்.

இவ்வளவுக்குப் பிறகும் அவனுக்கு கிடைக்கும் பெயர் என்ன தெரியுமா ? சைக்கோ டைரக்டர். ஒவ்வொரு முறை இந்த வார்த்தையை எவராவது சொல்லி கேட்கும்போதும் அவர்கள் மேல் பரிதாபமாக இருக்கும். இவர்களை எல்லாம் எப்படி வீட்டில் உள்ளவர்கள் சமாளிக்கிறார்கள் என்று. செல்வாவை சைக்கோ என்று கூறுபவர் நிச்சயம் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க முடியும். அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் வாழ்க்கையில் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களை நினைத்தால் அச்சமாக உள்ளது. படத்தையும் அதை இயக்கிய ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய அளவிற்கு அற்பப்பதர்கள் இங்குதான் இருக்க முடியும்.

எவ்வளவு அடிவாங்கினாலும் சற்றும் மனம் தளராமல் தனது அடுத்த படைப்பான இரண்டாம் உலகத்தை வெளியிட்டு இருக்கிறான் அந்த படைப்பாளி. இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு ஜானர். ஃபேண்டசி. (ஹீரோ 10-20 பேரை அடிப்பது மாதிரி வந்த படங்கள் எல்லாம் வேறு மாதிரியான ஃபேண்டசி) இரண்டாம் உலகம் முழுக்க முழுக்க தனது கற்பனையால் உருவாக்கி அதில் கதாபாத்திரங்களை உலவ விட்டிருக்கிறான் செல்வா என்னும் படைப்பாளி.


படம் பேரலல் யுனிவெர்ஸ் பற்றிப் பேசுகிறது. இரண்டு வெவ்வேறான உலகங்களைச் சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகளைப் பற்றிய படம். ஒருவன் காதலுக்காக எவ்வளவு தூரம் செல்லுவான் என்பதுதான் படத்தின் மையக்கரு. படம் பார்த்து முடித்தவுடன் என்னமோ தப்பா இருக்கே என்ற 'மயக்கம் என்ன' தனுசின் டயலாக்தான் தோன்றியது.

காதல் கொண்டேன், 7ஜி, யாரடி நீ மோகினி (தெலுங்கு வெர்ஷன்), மயக்கம் என்ன என இதற்கு முந்தைய அத்தனை படங்களும் காதலைப் பற்றிப் பேசியவை தான். அதில் ஒவ்வொரு படமும் கொடுக்கும் அனுபவம் வேறெந்தப்படத்திலும் கிடைக்காது. அந்தளவு காதலின் அத்தனை பரிமாணங்களையும் பல கோணங்களில் காட்டிய செல்வா இந்தப்படத்தில் அந்த உணர்வைக் கொடுக்க தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

அதற்கு முக்கிய காரணம் ஆர்யா. இதுவரை கதாபாத்திரங்களுக்கு நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்த செல்வா இதில் தவறிவிட்டார். ஆர்யா இந்தப்படத்திற்கு முற்றிலும் தவறான சாய்ஸ். பாலாவின் பட்டறையிலே இருந்து வந்தபிறகும் கூட இந்த ஆளுக்கு நடிப்பு வரவில்லை என்றால் என்ன சொல்லுவது. இவருக்கு யாராவது நடிப்பு வரவில்லை என்று எடுத்துக் கூறினால் தேவலாம். கூத்துப் பட்டறை போன்ற இடங்களுக்குச் சென்று நடிப்பு கத்துக்கொண்டு பிறகு நடிக்க வாருங்கள் என்று சொன்னால் பரவாயில்லை. மனுசன் உணர்ச்சிகளே வராத அந்த முகத்தை வைத்துக்கொண்டு படுத்தி எடுக்கிறார். இந்த உலகத்தைச் சேர்ந்த ஆர்யா மட்டும் ஒருசில இடங்களில் மிளிர்கிறார். மத்தபடி எரிச்சல் தான்.

இந்தப்படம் ஒருவேளை தனுஷ் நடித்திருந்தால் மிக நன்றாக வந்திருக்குமோ என்று தோன்றுகிறது. அவரது நடிப்பு பசிக்கு நல்ல தீனி போட்டதுபோல இருந்திருக்கும். அவருக்கும் இந்த மாதிரி கதாபாத்திரங்கள் செய்வது எல்லாம் கைவந்த கலை. பல வருடங்களுக்கு முன்பே தனுஷ், ஆன்ட்ரியாவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம்தான் இது. ஏனோ சில காரணங்களால் ட்ராப் ஆகி விட்டது. அப்போதே திட்டமிட்டபடி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

அதேபோல படத்தில் இன்னும் ஒருகுறை அனுஷ்கா. நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது. அனுபவம் மிக்க, மிக நேர்த்தியான நடிப்பு. ஆனால் தோற்றம் தான் கொஞ்சம் கவலை தருகிறது. ஆன்ட்டி மாதிரி தோற்றமளிக்கிறார். முகத்தில் வயதான முதிர்ச்சி அப்படியே தெரிகிறது. உடம்பும் நன்றாக சதை போட்டு வயதை அப்படியே எடுத்துக்காட்டுகிறது. இந்தப்படத்தில் ஒரு ஆன்ட்டியாக தான், அனுஷ்காவை நன்றாக ரசித்தேனே தவிர ஒரு இளம்பெண்ணாகப் பார்க்க முடியவில்லை. இருவருக்கும் இடையேயான காதலில் நமக்கு எந்த உணர்வும் வராததற்கு இந்த வயது முதிர்ச்சியும் ஒரு முக்கிய காரணம்.


அதேபோல திரைக்கதை. கச்சிதமாக திரைக்கதை அமைப்பதில் செல்வாவை விட்டால் ஒன்றிரண்டு பேர்கள் தான் இருக்கின்றனர் தமிழ் சினிமாவில். (வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா). அதிலும் கடைசியாக வந்த மயக்கம் என்ன படத்தில் எல்லாம் ஒரு ஷாட், ஃப்ரேம் கூட தேவையில்லாமல் இருக்காது. படத்திற்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக அமைத்திருப்பார். அதேசமயம் போரடிக்காமல் செல்லும் விதத்தில்தான் திரைக்கதை அமைந்திருக்கும். இந்தப்படத்தில் பல இடங்களில் போரடித்தது.

அதேபோல கதாபாத்திரங்கள். செல்வாவின் படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். இந்தப்படத்தில் இரண்டாம் உலகத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களில் அது மிஸ்ஸிங். இந்த உலகத்தை சேர்ந்த அனுஷ்காவின் ஃப்ரண்ட், ஆர்யாவின் அப்பா, ஆர்யாவின் ஃப்ரண்ட் என அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்க, இரண்டாம் உலகத்தை சேர்ந்த பல கதாபாத்திரங்கள் குழப்பம் மிகுந்தவையாகவே இருக்கின்றன. ராஜா, அவனது மந்திரிகள், வில்லன் என பலபேரின் கதாபாத்திரங்களும், அவற்றின் நோக்கமும் சற்றும் புரியாதபடிக்கு காட்சியமைப்புகள் இருக்கின்றன. செல்வா சற்றே சறுக்கிவிட்டார் என்றே தோன்றியது.

அதேபோல பாடல்கள். "பழங்கள்ளா" பாடல் படம் வருவதற்கு முன்பே நிறைய தடவை கேட்டு ரசித்திருந்தேன். மற்ற பாடல்கள் எல்லாம் ஏற்கனவே எங்கோ கேட்டமாதிரியே இருக்க அந்தளவு ரசிக்க முடியவில்லை. மனதிலும் ஒட்டவில்லை. அதேபோல பாடல்காட்சிகளின் படமாக்கமும் ரசிக்கும் விதத்தில் இல்லை. பழங்கள்ளா பாடலில் அனுஷ்காவின் இடுப்பசைவை ரசிக்கலாம். அவ்வளவுதான். மற்ற பாடல்கள் போரடித்தன.

பிண்ணனி இசை. பல இடங்களில் இரைச்சலாக இருந்தது. ஒருசில இடங்களில் மயக்கம் என்ன பிண்ணனி இசை போன்று இருந்தது. ஒருவேளை ஜி.வி.பிரகாஷ் தான் இந்தப்படத்திற்கும் பிண்ணனி இசையோ என்று சந்தேகப்பட வைத்துவிட்டார் அனிருத். மற்றபடி பல இடங்களில் இந்த பிண்ணனி இசைதான் படத்தைத் தூக்கிப்பிடித்தது.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவும் சிஜியும். அப்படியே கண்ணில் எடுத்து ஒத்திக்கொள்ளலாம் போல அவ்வளவு அருமையான ஒளிப்பதிவு. அதேபோல ஹாலிவுட்டிற்கு இணையான கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ். இரண்டாம் உலகம் முழுவதுமே சிஜிக்களால் நிரம்பியதுதான். இந்தளவுக்கு நம்பகத்தன்மையுடனான க்ராபிக்ஸ் இதற்கு முன் தமிழ்ப்படங்களில் நாம் பார்த்திருக்கவே முடியாது. அவ்வளவு அருமை. இந்த விடயத்தில் தமிழ்சினிமாவை அடுத்த இடத்துக்கு இந்தப்படம் நகர்த்தியிருக்கிறது.

என்னதான் பல குறைகள் சொன்னாலும் மிகவும் துணிச்சலான முயற்சி இந்தப்படம். தமிழ்சினிமாவுக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசையில் உருவாக்கிய படம். அதில் சற்றே சறுக்கியிருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி. "இப்டி சிரிச்சிக்கிட்டே இருந்தா உலகத்தையே உன் காலடில கொண்டுவந்து போட்டுற மாட்டேன்" என க்ளைமாக்சில் சொல்லும்போது படம் முழுவதும் வந்த குறைகள் மறந்துதான் போகின்றன.

செல்வா, உன்மீது நாங்கள் (அட்லீஸ்ட் நான்) வைத்திருக்கும் நம்பிக்கை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அந்த வெறியன் உள்ளே அப்படியே இன்னும் பசியோடே காத்திருக்கிறான். யானைப்பசிக்கு சோளப்பொறி போட்டிருக்கிறாய். அதற்கென்று சாப்பாடே போடாமல் ஏமாற்றவில்லை நீ. இருந்தாலும் வெறியனுக்கு பசி இன்னும் அடங்கவில்லை. அடுத்த படத்தில் இன்னும் முழுவேகத்துடனும், வெறியுடனும் செயல்பட்டு, தவறுகளைத் திருத்திக்கொண்டு எங்களுள் இருக்கும் செல்வா வெறியனுக்கு பசியைத் தணிப்பாய் என்று நம்புகிறோம்.

இது செல்வாவுக்கு கண்டிப்பாக கடைசி உலகம் இல்லை. ஒருசில குறைகளால் சற்றே சறுக்கிவிட்டார் அவ்வளவுதான். ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயிர்த்தெழுவார். அந்த நம்பிக்கை எனக்கு முழுதாக இருக்கிறது. இரண்டாம் உலகம் செல்வாவின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது சுமாரான படம். ஆனால் அதற்கென்று மோசமான படமில்லை. கண்டிப்பாக ஒருமுறை படம் பார்க்கலாம். இந்தப்படத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் தமிழ் ரசிகர்கள் இந்தப்படத்தை ஒருபோதும் புறக்கணிக்க மட்டும் முடியாது. இனிவரும் ஃபேண்டசி தமிழ் படங்களுக்கு ஒரு முன்னோடியாய் இந்தப்படம் காலங்காலத்துக்கும் விளங்கும்.

இரண்டாம் உலகம் : ஃபேன்டசி ஜானரில் ஒரு புதிய முயற்சி

பின் குறிப்புகள்:
1.ஒரு செல்வா ரசிகனாக எனக்கு இந்தப்படம் ஓரளவு பிடித்தே இருந்தது. ஆனால் முந்தைய படங்களுடன் ஒப்பிட்டால் சுமார் என்றளவில் பிடித்தது.
2.தியேட்டரில் படம் முடிந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ஆன்ட்டி தனது துணையை "ஏய் மாடு" என்று அழைக்க, மொத்த கூட்டமும் திரும்பிப்பார்க்க, அந்த ஆன்ட்டி வெட்கத்தில் தலைகுனிய, அப்பாடா ஒருவருக்காவது இந்தப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியதே என்று சந்தோஷமாக இருந்தது.
3."The Fountain" படம் சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். இரண்டிலும் ஒரே மையக்கருதான் என்றாலும் இரண்டும் வெவ்வேறான படங்கள். அந்தப்படம் பார்த்த நாள் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத முக்கியமான நாள். அந்தளவு உணர்வுகளைக் கொடுத்த படம் அது. ஃபேஸ்புக்கில் கூட எனது உணர்ச்சிகளைப் பகிர்ந்திருந்தேன். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் அது.

15 comments:

 1. ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயிர்த்தெழுட்டும்...

  ReplyDelete
 2. // செல்வா, உன்மீது நாங்கள் (அட்லீஸ்ட் நான்) வைத்திருக்கும் நம்பிக்கை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அந்த வெறியன் உள்ளே அப்படியே இன்னும் பசியோடே காத்திருக்கிறான்.//

  உங்கள் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்... அருமையான, உண்மையான விமர்சனம்...நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல,
   நான் உங்களோட டீட்டெயிலான விமர்சனத்துக்காக காத்துக்கிட்டிருக்கேன்.. சீக்கிரம் எழுதுங்க.

   Delete
 3. அருமை தல எனக்கு பிடிச்சி தான் இருந்துச்சு ஆனா இது செல்வா பெஸ்ட் இல்லை அதே போல தவிர்க்க கூடாத படம் , சிஜி இந்த படம் தான் இனிமே வர போற படங்களுக்கு முன்னோடியா இருக்கும் , ஆனா செல்வாவா எதிர்த்து வர விமர்சனங்கள் நிச்சயம் இந்த முறை அவரை அதிகம் பாதிக்க போகுது அது மட்டும் உண்மை பாருங்க நண்பா அதான் கஷ்டமா இருக்கு ஒரு நல்ல கிரியெடர இழந்திடுவோமொனு வருத்தமா இருக்கு. தனுஷ் நடித்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று கொஞ்சம் நினைச்சி பார்த்தேன் ஏன் அதை செல்வா மாத்திடார்னும் தெரியல. செல்வா என்ற இயக்குனரின் மேல் உள்ள நம்பிக்கை என்றைக்கும் என்னை விட்டு போகாது.

  ReplyDelete
  Replies
  1. //ஆனா செல்வாவா எதிர்த்து வர விமர்சனங்கள் நிச்சயம் இந்த முறை அவரை அதிகம் பாதிக்க போகுது அது மட்டும் உண்மை பாருங்க நண்பா அதான் கஷ்டமா இருக்கு ஒரு நல்ல கிரியெடர இழந்திடுவோமொனு வருத்தமா இருக்கு.//

   கண்டிப்பா இல்லை தல.. அவரு அதிகம் பாதிக்கப்படத்தான் போறாரு.. ஆனா அது பாசிட்டிவ்வாதான் வந்து முடியும் பாருங்க. அடுத்த படத்துல மறுபடியும் உயிர்த்தெழுந்து வருவாரு

   Delete
  2. அப்படிஒரு நாளை எதிர்பார்த்தே உள்ளேன் நண்பா பார்ப்போம் :)

   Delete
 4. தல, நேர்மையான விமர்சனம்...உங்க பதிவுல எனக்கு ஒரே ஒரு நெருடல்..
  //இவ்வளவுக்குப் பிறகும் அவனுக்கு கிடைக்கும் பெயர் என்ன தெரியுமா ? சைக்கோ டைரக்டர். ஒவ்வொரு முறை இந்த வார்த்தையை எவராவது சொல்லி கேட்கும்போதும் அவர்கள் மேல் பரிதாபமாக இருக்கும். இவர்களை எல்லாம் எப்படி வீட்டில் உள்ளவர்கள் சமாளிக்கிறார்கள் என்று. செல்வாவை சைக்கோ என்று கூறுபவர் நிச்சயம் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க முடியும். அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் வாழ்க்கையில் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களை நினைத்தால் அச்சமாக உள்ளது. படத்தையும் அதை இயக்கிய ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய அளவிற்கு அற்பப்பதர்கள் இங்குதான் இருக்க முடியும்//

  இது நீங்க செல்வாவை வெறுக்கிற ஆளுங்களுக்கு குடுத்த கவுண்டர்ன்னு வச்சுக்கலாம்.. செல்வாவை விரும்புற ஆட்களுக்கு இருக்கிற மனநோயை என்னால் பொட்டில் அறையுற மாதிரி சொல்ல முடியும்..அவங்களுக்கு இருக்கிற உளவியல் ரீதியான பிரச்சனைகள் ரொம்ப மோசமானது.. :-)
  இத சொல்லுற நாள எனக்கும் செல்வா பிடிக்காதுன்னு நினைக்காதீங்க. :-)

  ReplyDelete
  Replies
  1. அண்ணா,
   உங்களின் மேல் மானாவாரியாய் மரியாதை வைத்திருக்கிறேன். இருந்தாலும் உங்கள்ட்டருந்து இப்படி ஒரு பின்னூட்டத்தை எதிர்பார்க்கலை. பதிவு முழுவதும் செல்வா படங்கள் எனக்கு எந்தளவு ரொம்ப பிடிக்கும்னு சொல்லிருக்கேன். இதுல,

   //செல்வாவை விரும்புற ஆட்களுக்கு இருக்கிற மனநோயை என்னால் பொட்டில் அறையுற மாதிரி சொல்ல முடியும்..அவங்களுக்கு இருக்கிற உளவியல் ரீதியான பிரச்சனைகள் ரொம்ப மோசமானது..//

   அப்டினு சொன்னா, இது நேரடியா என்னை மென்ஷன் பண்ற மாதிரிதான் தெரியுது.. எதுக்காக இப்பிடி போட்டீங்கன்னு தெரியலை.

   //இத சொல்லுற நாள எனக்கும் செல்வா பிடிக்காதுன்னு நினைக்காதீங்க//
   சொல்றதெல்லாம் சொல்லிட்டு இத வேற சொல்லிக்கிறீங்களேண்ணா..!!

   இத நான் மேற்கொண்டு தொடர விரும்பலை. நீங்க அப்டி நினச்சி சொல்லிருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். ஆனா நீங்க மென்ஷன் பண்ணிருக்கற என்னோட கருத்துக்களுக்கு மறுபடியும் விளக்கம் கொடுக்க விரும்பறேன்.

   ஒரு படத்தை எடுத்த இயக்குனரை சைக்கோ என்று கூறுமளவுக்கு அந்த ஆள் அப்படி என்ன படம் எடுத்துவிட்டார். அப்படியே டிஸ்டர்ப்டான படங்களை எடுத்திருந்தாலும் அது படம்தானே.. அதையும் அவரது சொந்த வாழ்க்கையையும் ஏன் இணைக்கிறீர்கள். இப்படி எதற்கெடுத்தாலும் பிற்போக்குத்தனமாக யோசிக்கும் ஒருவருடைய குடும்பத்தில் அவரது மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வளவு சுதந்திரம் இருக்கும் ? எவ்வளவு பிரச்சனைகளை சந்திப்பர். இதை வைத்துதான் செல்வாவை சைக்கோ என்று கூறுபவர் நிச்சயம் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க முடியும் என்று கூறினேன்.

   நீங்கள் என்ன சொன்னாலும் எனது இந்தக்கருத்தில் மாற்றமில்லை.

   Delete
 5. சாரி தல...நான் உங்களை ஹர்ட் பண்ணனும் என்கிற எண்ணத்துல இதை சொல்லல.. நானும் செல்வாவோட அதி தீவிர ரசிகன் தான்....7G பார்த்திட்டு ரொம்ப நேரம் அசையாம உட்கார்ந்து இருந்தேன்....ஆனா அதே படத்தை இப்ப பார்த்தா வேற மாதிரி எண்ணங்கள் வருது, அதுல இருக்கிற வக்கிர எண்ணங்கள் இன்னும் எனக்கு நல்லா புரியுது, பெண் என்பவள் வெறும் சதை பிண்டம் மட்டும் தான், என்கிற ஸ்டார்ங்க Belief செல்வாவுக்கு இருக்கிற மாதிரி சில சமயம் எனக்கு தோணும்..... அதை வச்சு தான் அப்படி சொன்னேன்.. அது உங்களை குறிக்கிற மாதிரி ஆகும்ன்னு நான் எதிர்பார்க்கல. அப்படி நான் சொன்ன கருத்து உங்களை குறிச்சா நான் மறுபடியும் மன்னிப்பு கேட்டுகிறேன்... :-(
  என்னோட நெருங்கிய நண்பர் ஒருத்தர், வயசு 32 க்கு மேல, அவரோட பார்வையில செல்வா ஒரு சைக்கோ டைரக்டர்ன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லுவார். காதல் கொண்டேன், 7G, மயக்கம் என்ன படங்களை ரொம்ப மோசமா விமர்சனம் பண்ணுவார். அவரோட வாழ்க்கை அனுபவங்களை வச்சு அப்படி சொல்லுறார். எனக்கும் அவர் வயசு ஆச்சுனா, நானும் இதே மாதிரி தான் பேசுவேன்னு சொல்வார். நீங்க சொன்ன \\ அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் வாழ்க்கையில் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களை நினைத்தால் அச்சமாக உள்ளது.\\ இந்த கருத்தை அவரோட வாழ்கை கூட இணைச்சு பார்த்தேன்...கொஞ்சம் கோவம் வந்திரிச்சு.. அதனால் தான் அப்படி கமெண்ட் எழுதிட்டேன்.... கடைசிகா மறுபடியும் சாரி தல...
  இதை நம்ம இத்தோட நிறுத்திக்கலாம்.....முடிஞ்சா போன்ல விவாதத்தை தொடரலாம்...

  ReplyDelete
  Replies
  1. அண்ணா,

   உங்களப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. நீங்க அப்டி நினச்சு சொல்லியிருக்க மாட்டீங்கன்னும் எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் நான் அத படிச்ச அந்த நிமிசம், டைரக்டா என்னை குத்திக் காட்டறமாதிரி இருந்துச்சி. Felt very sad.. நீங்க என் நிலைமைல இருந்து யோசிச்சுப் பாத்தா இதப் புரிஞ்சுக்குவீங்க.. மத்தபடி வேற ஒன்னும் இல்லைண்ணா. நீங்க இத்தனை சாரி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பீ கூல்ல்.. :)

   இப்போ மேட்டருக்கு வருவம்.. எந்த ஒரு விஷயமும், நல்லதா கெட்டதாங்கறது நாம பாக்கற கண்ணோட்டத்துலதானே-ண்ணா இருக்கு. காதலுக்கு முதல் படியே காமம் தான். சும்மா மனச பாத்து காதல் வர்றதுலாம் டுபாக்கூரு. ஒரு பையனுக்கு ஒரு பெண்ணை பார்த்தவுடனே அவ அழகாயிருந்தா மட்டும் தான் அவனுக்கு அவமேல் ஈர்ப்பு வரும். அல்லது அவனுக்கு ஈக்வ்லான அழகாவாச்சும் இருக்கனும். அப்போதான் ஈர்ப்பு வரும். அதுக்கப்புறம் அவ நல்லவளா, நம்மளோட அலைவரிசைக்கு ஏத்தமாதிரி இருந்தாள்னா காதல் வரும். இல்லேன்னா காமத்தோட நின்னுடும். அப்டியே நல்ல மனச பாத்து காதல் வந்தாலும், காமம் இல்லாமல் காதல் இல்லை. இரண்டும் ஒன்றரக் கலந்ததுதானே.

   அதை அந்தப்படத்தில் வெளிப்படையாகக் காட்டினார் செல்வா. அவ்வளவுதான். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மேல் ஏற்படும் காமத்தை அதன்பிறகு ஏற்படும் காதலைக் காமிக்கனும்னா அந்தப்பெண்ணை காமிச்சே ஆகனும். அதுல எந்தவித தப்பும் இருக்கற மாதிரி எனக்கு தெரியலை.

   பெண் என்பவள் வெறும் சதை பிண்டம் மட்டும்தான்னு நினைக்கற அளவுக்கு அந்தப்படத்தில் எந்தக்காட்சிகளும் எனக்குத் தோணலை. இன்ஃபாக்ட் பெண்களுக்கு ஈக்வல் உரிமை உண்டு என்பதைத்தான் காண்பித்திருப்பார். நான் அந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்த்தேன். அதை விடுத்து பார்க்கும் ரசிகர்கள் எதைவேண்டுமானாலும் கற்பனை பண்ணிக்கொண்டு அவர்கள் மனம் சங்கடப்பட்டால், அதற்கு செல்வா என்ன செய்வார். காதலை உணர்த்தும் காட்சியில் காதலை ரசிக்காமல், வேறுவிதமாகப் பார்த்தால் அது பார்த்தவர்களின் குற்றமா ? இல்லை செல்வாவின் குற்றமா ?

   இதற்கு மேலும் விரிவாக இதைப்பற்றிப் பேச விருப்பம்தான். முடிந்தால் நீங்க உங்க கருத்துக்களை பதிவாகப் போடுங்கண்ணா. விவாதித்துப் பார்க்கலாம். வெவ்வேறான பார்வையில் வெவ்வேறான கருத்துக்கள் கிடைக்கலாம் இல்லியா. நான் தவறென்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள ரெடியா இருக்கேன். :)

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *