Jan 23, 2014

Captain Phillips (2013) - பரபர விறுவிறு கடற்கொள்ளை


உனக்குப் பிடித்த ஹாலிவுட் நடிகர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு, யோசிக்காமல், அடுத்த நொடியே என்னிடம் இருந்து வரும் பதில் டாம் ஹேங்க்ஸ் ஆகத்தான் இருக்கும். ஹாலிவுட் படங்களில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவர்கள் இவரின் படங்களிலிருந்து ஆரம்பிப்பது நலம். நான் அப்படித்தான் ஆரம்ப காலகட்டங்களில் இவரின் படங்களைப் பார்த்துத் தான் வளர்ந்தேன். இன்றுவரை, எனக்குப் பிடித்த நடிகர்களின் பட்டியலில் இவருக்குத்தான் முதலிடம். அதிலும் தலைவர் ஸ்பீல்பெர்கின் இயக்கத்தில் இவர் நடித்த படங்களைப் பார்ப்பதென்றால் கண்ணா ரெண்டாவது லட்டும் தின்ன ஆசையா தான். ஸ்பீல்பெர்கின் இயக்கத்தில் முத்தான மூன்று படங்களில் நடித்துள்ளார்.

Captain Phillips படத்துக்கு முன், கடைசியாக இவரின் நடிப்பில் வெளிவந்த Cloud Atlas படத்தை மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்து சற்று ஏமாந்துதான் போனேன். ஆனால் இந்தமுறை டிபிகல் டாம் ஹேங்க்சின் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அதெல்லாம் சரியாக அமைந்து பெரும் திருப்தியைக் கொடுத்துள்ளது. The Bourne சீரிஸ் புகழ் இயக்குனர் Paul Greengrass தான் இந்தப்படத்துக்கும் இயக்குனர். Bourne சீரிஸ் பார்த்தவர்களுக்கு அந்தப்படத்தின் திரைக்கதை எவ்வளவு வேகமாக இருக்கும் என்பது தெரிந்திருக்கும். ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் எடுக்கப்பட்டிருக்கும் அந்த சீரிஸ். இந்தப்படத்தையும், அதேபோல படம் ஆரம்பிக்கும் நிமிடம் முதல் முடியும் வரை பரபரவென்று எடுத்துள்ளார்.

2009ம் ஆண்டு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பலொன்று ஆப்பிரிக்க நாட்டின் வழியே பயணம் செய்தபோது, சோமாலிய கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. பணம் எதுவும் அவ்வளவாகக் கிடைக்காத நிலையில், கொள்ளையர்கள் அந்தக்கப்பலின் கேப்டனைப் பணயக்கைதியாகக் கைது செய்து கடத்தினர். இதைத் தெரிந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் கடும் முயற்சிக்குப் பின் அவரை மீட்டது. இந்த அனுபவங்களை எல்லாம் அந்த கேப்டனான Richard Phillips பின்னர் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். அந்தப்புத்தகத்தின் பெயர் A Captain's Duty: Somali Pirates, Navy SEALs, and Dangerous Days at Sea.

புத்தகம் 2010 ஏப்ரல் வாக்கில் ரிலீசாக, அடுத்த சில நாட்களிலேயே சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அதன் திரைப்பட உரிமையை வாங்கியது. உடனே Billy Ray திரைக்கதை எழுத அமர்த்தப்பட்டார். அவர் எழுதி முடித்தவுடன், அதன் முதல் ட்ராஃப்டை வாங்கிப்படித்துப் பார்த்த ஹேங்க்ஸ் தனக்கே தனக்கென உருவாக்கப்பட்டதுபோல உணர, உடனடியாக இந்தப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார். அடுத்ததாக பால் க்ரீன்க்ராஸ் படத்தை இயக்குவதற்கு நியமிக்கப்பட அவர் கச்சிதமாக இயக்கிக்கொடுத்துவிட்டார்.

"ஒரு கப்பலின் கேப்டன் பணயக்கைதியாகிறார். அவரை அரசு மீட்டுகிறது" என்ற ஒற்றைவரிக் கதையை 2 மணி நேரப்படமாக எடுப்பதற்குக் கண்டிப்பாக துணிச்சல் வேண்டும். படம் ஆரம்பிப்பதும் தெரியவில்லை. முடிவதும் தெரியவில்லை. அவ்வளவு கச்சிதமாக, விறுவிறுப்பாக திரைக்கதை செல்கிறது. அதற்கேற்றாற்போல இசையும், ஒளிப்பதிவும் படத்தின் வேகத்தைக் கூட்டுகின்றன.

டாம் ஹேங்சின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. எவ்வளவோ பெரிய படங்களைப் பார்த்துவிட்டோம் இதென்ன ஜூஜூபி என்ற ரேஞ்சுக்கு அசால்ட்டாக நடித்துள்ளார். அவருக்கெல்லாம் இந்தப்படம் அல்வா சாப்பிடுவது மாதிரி தான். அவ்வளவு எளிதாக, கஷ்டப்படாமல் நடித்துள்ளார். படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் டாம் ஹேங்ஸ் மறைந்து, கேப்டன் பிலிப்ஸ் தெரிவார். அதுதான் அவரின் நடிப்புக்கு சான்று. படம் முடியும்போதுதான் மறுபடியும் இது டாம் ஹேங்ஸ் என்பதே நினைவுக்கு வருகிறது. இது டாமின் எல்லாப்படங்களுக்குமே பொருந்தும்.

ஆனால் என்னைக் கேட்டால், டாமை விட இந்தப்படத்தில் வில்லன் Muse-ஆக நடித்த Barkhad Abdi நடிப்பில் ஒருபடி மேல் தான். அவருக்கு இது முதல் படமாம். நம்பவே முடியவில்லை. டாமிற்கு ஈடுகொடுத்து நடித்ததாலேயே தனித்துத் தெரிகிறார். வில்லனாக எட்டுக் கட்டையில் கத்தாமல் கூலாக "No problem 'Irish', everything gonna be OK." என்று சொல்வதிலேயே பின்னிவிடுகிறார். அவர்களை வெறும் கொள்ளையர்களாக மட்டும் காட்டாமல் சாதாரண மனிதர்களாகக் காட்டியதில் படத்தின் யதார்த்தம் இன்னும் கூடுதலாகத் தெரிகிறது.

ஆனால் படத்தில் சில குறைகளும் இல்லாமலில்லை. அவ்வளவு பெரிய சரக்குக் கப்பலுக்கு ஒரு செக்யூரிட்டி கூடவா இல்லை. அவ்வளவு பெரிய கப்பலை, சிறிய படகில் வந்த 4 கொள்ளையர்கள் கைப்பற்றும் காட்சி முதலில் நம்பவே முடியவில்லை. சிரிப்பாகக் கூட இருந்தது. ஆனால் அதுதான் உண்மையாம். என்னத்த சொல்ல ?

அதேபோல படத்தில் வில்லன் கொஞ்சம் புத்திசாலித்தனமாகக் காட்டப்பட்டிருப்பான். ஆனால் அது முரணாகிற மாதிரி படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு காட்சி வரும். பணயக்கைதியாகப் பிடிக்கப்பட்ட கேப்டன் பிலிப்ஸ் ஒரு லைஃப்போட்டில் சீட் நம்பர் 15ல் அமர்த்தப்பட்டிருப்பார். உள்ளே 4 கொள்ளையர்களும் இருப்பர். அமெரிக்க நேவிப் படையினர் சமாதானம் பேச வரும்போது கேப்டன் பிலிப்சை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். உடனே கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் அவரை வெளியில் வரவழைப்பார்கள்.

நேவிப்படையினரிடம் "நான் சீட் நம்பர் 15ல் அமர்ந்திருக்கிறேன். எனது குடும்பத்துக்கு நான் உயிரோடு இருப்பது தெரியவேண்டும்" என்று சொல்லுவார். அதற்கு நேவிப்படையினர் "நீங்கள் எங்கு உட்கார்ந்திருந்தீர்களோ அங்கேயே உட்காருங்கள். இந்த மஞ்சள் டீ-ஷர்ட்டை அணிந்துகொள்ளுங்கள்" என்று கொடுப்பார்கள். அதன்படியே அந்தக்கொள்ளையர்களும் அந்த உடையை கேப்டன் உடுப்பதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், சீட் நம்பர் 15லேயே அமரவைப்பார்கள். இதில் நமக்கென்ன சந்தேகமென்றால்,புத்திசாலியாகக் காட்டப்பட்ட அந்தக் கொள்ளையனுக்கு கொஞ்சம்கூடவா சந்தேகம் வராமல் போனது.

எதற்காக சீட் நம்பர் 15 பற்றி நேவிப்படையிடம் கேப்டன் சொன்னார் என்று சந்தேகப்பட்டு கேப்டனை வேறு இடத்தில் அமரவைத்திருக்கலாம். அப்படித்தான் ஒரு புத்திசாலிக் கொள்ளையன் செய்திருப்பான். ஆனால் அந்தக்காட்சிக்கு கொள்ளையர்கள் எந்தவித ரியாக்சனும் காட்டவில்லை. அது சற்றே படத்தின் உண்மை நிலையில் சற்றே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதேபோல படத்தில் கொள்ளையர்களின் வில்லத்தனத்தை எடுத்து சொன்னதுபோல அவர்களின் நல்ல மனதையும் சொல்லியிருப்பார்கள். ஆனால் படத்தில் கேப்டன் முழுக்க முழுக்க நல்லவராகவே காட்டப்பட்டிருப்பார்.கொள்ளையர்களுக்குக் கூட தீங்கிழைக்காத நல்லவராகக் காட்டப்பட்டிருப்பார். (கொள்ளையனைக் கடலில் தள்ளிவிடும் காட்சியைத் தவிர). உண்மையிலேயே அவ்வளவு நல்லவரா என்ற சந்தேகம் நமக்கு எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

Richards Phillips and Tom Hanks

இந்தமாதிரி சின்னச் சின்னக் குறைகளைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை. படம் ஒட்டுமொத்தமாக மனதைக் கவர்ந்துவிட்டது. அதிலும் படத்தின் கடைசி 20 நிமிடங்கள் நம்மை அப்படியே கதை நிகழும் இடத்துக்கே கொண்டுசென்று விட்டது. நடிப்பென்றால் என்னவென க்ளைமாக்ஸ் காட்சியில் டாம் காட்டிவிட்டார். அதற்காகவே இந்தப்படத்தைப் பார்க்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு டாமின் நடிப்பில், பிரமித்துப்போய் வாயடைத்து உட்கார்ந்திருந்த காட்சி அது.

சிறந்த படம், சிறந்த துணைநடிகர் (வில்லன்), சிறந்த திரைக்கதை போன்றவை உள்பட மொத்தம் 6 கேட்டகிரிகளுக்கு இந்தப்படம் ஆஸ்காரில் நாமினேட் பண்ணப்பட்டிருக்கிறது. டாம் ஹேங்சுக்கு சிறந்த நடிகருக்கான நாமினேஷன் கிடைக்கவில்லை. ஆனால் கோல்டன் க்ளோப் உள்ளிட்ட வேறு சில விருதுவழங்கும் விழாக்களில் நாமினேட் ஆனார். ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லனுக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த கேட்டகிரியில் ஜோனா ஹில், ப்ராட்லி கூப்பர் போன்ற பெருந்தலைகள் உருளுவதால் என்ன நடக்கும் என்று சரியாகக் கணிக்கமுடியவில்லை. பார்க்கலாம்.

Captain Phillips (2013) - விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.


4 comments:

 1. டாம் ஹேங்க்ஸ் எனக்கும் மிகவும் பிடித்த நடிகர்.
  இந்த படத்தில் எனக்கு செம தீனி போட்டார்.
  நன்றியோடு உங்கள் பதிவை வாழ்த்தி வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. :)

   Delete
 2. இந்த படம் நானும் வெளிவந்த பொழுதே பார்த்தது எனக்கு மிகவும் பிடித்து போனது அதுவும் டாம் ஹேங்க்ஸ் நடிப்பு அசத்தல், அதையே இங்க நீங்க சொல்லி இருப்பதும் அருமை . அவரின் வேறு படங்களை பார்க்க வேண்டும்.(அப்புறம் பதிவு டைட்டில் பரபர விறுவிறு என்று படித்தவுடன் சிரிப்பு வந்துடுச்சு நண்பா டெம்ப்ளேட் வாசகத்தை உங்களையும் யூஸ் பண்ண வச்சிட்டாங்க :D )

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல,

   பதிவுக்கு அந்த டைட்டில் ஏன் வச்சேன்னா, போன பதிவுக்கு "பரபர விறுவிறு ரேஸ்"னு பேரு வச்சிருந்தேன். சரி.. இந்தப்படத்துக்கும் அந்தமாதிரி வச்சு, இனிமே வர்ற இந்தமாதிரிப் படங்களுக்கு எல்லாம் இந்தப்பேர வச்சு, ஒரு சீரிஸ் மாதிரி ஆக்கிடலாம்னு தான்.. வேறொன்னும் இல்ல தல..!!

   "பரபர விறுவிறு ஸ்டாக் மார்க்கெட்" போட்டு அடுத்த விமர்சனத்த எழுதலாமானு யோஜனை வேற... ஹிஹி..!!

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *