Feb 11, 2014

The Hunt (2012) - விரிவான அலசல்


டிஸ்கி : இந்தப்பதிவில் படத்தின் முழுக்கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல பல முக்கியமான சீன்களைப் பற்றியும் அலசப்பட்டிருப்பதால் படம் பார்க்காதவர்கள் கண்டிப்பாக இந்தப்பதிவைப் படிக்க வேண்டாம். முழுக்க முழுக்க ஸ்பாய்லர்களுடன் கூடிய பதிவு இது.

படத்தைப்பற்றிய எனது முந்தைய பதிவைப் படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

படத்தின் கதை:

லூகாஸ், அவனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு ஏரியில் ஜாலியாகக் குளித்து விளையாடுவதுடன் படம் ஆரம்பிக்கிறது. அந்த ஒரு காட்சியிலேயே அவன் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்துவருகிறான் என்பது தெரிவிக்கப்படுகிறது. அடுத்த காட்சியில் கிண்டர்கார்டனில் குழந்தைகள் அனைவரும் லூகாசின் வருகைக்காக ரகசியமாகக் காத்திருக்கின்றனர். அவன் உள்ளே நுழைந்தவுடன் எல்லோரும் அவன் மீது பாய்ந்து விளையாடுகின்றனர். அவனும் சந்தோஷமாக விளையாடுகின்றான். ஒரு குழந்தை நம்பர் டூ போவதற்கு உதவி செய்கிறான். இதிலிருந்தே அவனுக்குக் குழந்தைகள் மீதுள்ள பாசமும், அன்பும் வெளிப்படுகிறது.

அந்த ஊரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் சில பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வரும் லூகாஸ், அங்கே அவனுடைய நெருங்கிய நண்பனான தியோவின் பெண்குழந்தை க்ளாரா தனியே நிற்பதைப் பார்க்கிறான். வீட்டிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதால், வீட்டுக்குப் போகும் வழியை மறந்து நிற்பதாகக் க்ளாரா சொல்கிறாள். பிறகு லூகாஸ் க்ளாராவை அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றான். வீட்டிற்குப் போகும் வழியில் க்ளாரா பெரியமனுஷித்தன்மையாய் பேசிக்கொண்டு வருகிறாள். குழந்தைகளுக்கே உரிய அந்த innocence அவளிடம் இல்லை. லூகாசின் செல்ல நாய் ஃபேன்னியை அவளுக்குப் பிடித்துப்போகிறது.

க்ளாராவின் வீட்டில் அவளது அப்பா தியோ, அம்மா, அண்ணன் டோர்ஸ்டான் எல்லோரும் இருக்கின்றனர். லூகாஸ் அங்கே உரிமையோடு பழகும் காட்சிகள், அங்கே அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தைக் காட்டுகிறது. லூகாசும், தியோவும் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் பேசுவதிலிருந்து லூகாஸ் டைவர்ஸ் ஆனவன் என்று தெரிந்துகொள்கிறோம். லூகாஸ் மற்றும் கிர்ஸ்டன் தம்பதியினரின் ஒரே பிள்ளை மார்க்கஸ் இப்போது கிர்ஸ்டனுடன் வாழ்ந்துவருகிறான். ஆனால் அவனுக்கு தன்னுடைய அப்பா லூகாசுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று ஆசை. அதை லூகாஸ் கண்ணியமாகத் தன் முன்னாள் மனைவி கிர்ஸ்டனிடம் போனில் தெரிவிக்கிறான்.

பிறகொரு நாள், க்ளாரா ஹாலில் தனியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது அவளது அண்ணன் டோர்ஸ்டனும், அவனது நண்பனும் அங்கே வருகின்றனர். அவனது நண்பனின் ஐபேடில் ஆபாசப் படங்களைப் பார்த்துக்கொண்டே உற்சாகமாக வருகின்றனர். டோர்ஸ்டனுடைய ரூமுக்குச் செல்லும் வழியில், அவனது நண்பன் அந்த ஆபாசப்படத்தை க்ளாராவுக்குக் காண்பித்து விடுகிறான். ஒரு ஆணும், பெண்ணும் அந்தரங்கத்தில் இருக்கும்படியான அந்த போட்டோவைக் க்ளாரா பார்த்து விடுகிறாள். பிறகு டோர்ஸ்டனும், அவன் நண்பனும் அவனுடைய ரூமுக்குச் சென்றுவிடுகின்றனர்.

இந்த இடத்தில் க்ளாராவாக நடித்திருக்கும் அந்த குட்டிப்பெண்ணின் ரியாக்சன்களைப் பார்க்க வேண்டும். அந்தக் குட்டி முகத்தில் அத்தனை உணர்ச்சிகளைக் காட்டுகிறாள். பின்னாட்களில் கண்டிப்பாக மிகச்சிறந்த நடிகையாக வருவாள்.

ஆபாசப்படத்தைப் பார்த்ததின் பாதிப்பு அவளிடம் அப்படியே உள்ளது. அது அவளின் மனதைப் பாதிக்கிறது. அடுத்த நாள் லூகாசைப் பார்க்கிறாள். அவன் எப்பொழுதும் போல க்ளாராவிடம் ஆறுதலாகப் பேச அவனை அவளுக்கு பிடித்துப்போகிறது. லூகாசுக்குத் தெரியாமல் அவனுடைய கோட் பாக்கட்டில் ஒரு கிஃப்ட் வைக்கிறாள். கிண்டர்கார்டனில் லூகாஸ், மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதைப் பார்க்கிறாள். ஓடிச்சென்று அவன் இதழில் முத்தமிடுகிறாள்.

க்ளாராவின் இந்தச்செயலைக் கண்டு லூகாஸ் அதிர்ச்சியடைந்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளாமல் மற்ற குழந்தைகளை அனுப்பிவிட்டு க்ளாராவிடம் தனியே பேசுகிறான். அவளுக்குப் புரியும்படி அட்வைஸ் பண்ணுகிறான். ஹார்ட் வடிவில் உள்ள அந்த கிஃப்டை வேறு யாராவது குட்டிப்பையனுக்குக் கொடுக்குமாறு கூறுகிறான். அதேபோல அம்மா, அப்பாவிற்கு மட்டும் தான் இதழில் முத்தமிட வேண்டும் என்றும் பொறுமையாக எடுத்துக் கூறுகிறான். ஆனால் தான் அந்த கிஃப்டை அவனது பாக்கெட்டில் வைக்கவில்லை என்றும் யாரோ அவனோடு விளையாடுகிறார்கள் என்றும் கூறுகிறாள்.

அவனிடம் மாட்டிக்கொண்டது அவளுக்குக் குற்ற உணர்வைக் கொடுக்கிறது. மிகவும் சோகமாகிவிடுகிறாள். கிண்டர்கார்டனின் ஹெட் மாஸ்டரான க்ரெத் அவள் சோகமாக இருப்பதைக் கண்டு, அவளிடம் விசாரிக்கிறாள். க்ளாரா தனக்கு லூகாசைப் பிடிக்கவில்லை என்று கூறுகிறாள். ஏன் என்று க்ரெத் கேட்பதற்கு "அவன் ஒரு முட்டாள். அசிங்கமானவன். அதுமட்டுமில்லாம அவனுக்கு குஞ்சு இருக்கு" என்று க்ளாரா கூறுகிறாள். அதற்கு க்ரெத் சிரித்துக்கொண்டே "ஆண்கள் எல்லோருக்கும் பெரும்பாலும் இருக்கும் விஷயம் தானே" என்று கூறுகிறாள்.

உடனே க்ளாரா "ஆமா. ஆனா லூகாசோடது நேரா நீட்டிகிட்டு இருக்குது. ஒரு கம்பி மாதிரி" என்று கூறவும் சீரியஸ் ஆகிறாள் க்ரெத். "ஏன் அப்பிடிச் சொல்றே. உனக்கு என்ன ஆச்சு ?" என்று விசாரிக்கவும் "இதோ இந்த ஹார்ட் கிஃப்டை லூகாஸ் எங்கிட்டே கொடுத்தான். ஆனா எனக்கு இது வேணாம்" என்றுகூறி அதை க்ரெத்திடம் கொடுத்துவிடுகிறாள். இந்தக் காட்சிதான் இந்தப்படத்தின் முதல் ப்ளாட் பாயிண்ட்.

திரைக்கதை அமைப்பு:

திரைக்கதையைப் பற்றிப் படித்துள்ளவர்களுக்கும், திரைக்கதை அமைப்பைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும், இந்த 3 ஆக்ட் முறை பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். ..திராதவர்களுக்கு இந்த விளக்கம். அதாவது ஒவ்வொரு படமும் மொத்தம் 3 பகுதிகளாகப் பிரிக்கப்படும். முதல் பகுதியில் படத்தின் கேரக்டர்கள் அறிமுகப்படுத்தப்படும். கதைச்சூழல் நமக்கு தெளிவாக்கப்படும். கதை நடக்கும் பின்புலம் பற்றிய காட்சிகள் இடம்பெறும். இந்த முதல் பகுதி முடியும் இடம் முதல் ப்ளாட் பாயிண்ட் எனப்படும். இந்த ப்ளாட் பாயிண்டில் கதையினுடைய பிரச்சனை ஆரம்பிக்கும். படம் எதைப்பற்றியது என்பதை விளக்கும் காட்சியாக இந்த ப்ளாட் பாயிண்ட் அமையும்.

பிறகு இரண்டாம் பகுதியில் அந்த பிரச்சனையின் விளைவுகள் காட்சிப்படுத்தப்படும். கதாபாத்திரங்கள் அந்தப் பிரச்சனையால் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்கிறார்கள் அல்லது எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் இரண்டாம் பகுதி. இரண்டாம் பகுதி முடியும் இடம் இரண்டாவது ப்ளாட் பாயிண்ட் எனப்படும். இந்த ப்ளாட் பாயிண்டில் கதையினுடைய பிரச்சனைக்குத் தீர்வு சொல்லப்பட்டிருக்கும். அடுத்து மூன்றாவது பகுதி க்ளைமாக்ஸ். அதாவது அந்த பிரச்சனையின் தீர்வு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதுதான் பொதுவாக, பெரும்பாலான படங்களில் உபயோகப்படுத்தப்படும் 3 ஆக்ட் திரைக்கதை உத்தி. இதைப்பற்றி மேலும் தெளிவாகத் தெரிந்துகொள்ள அண்ணன் கருந்தேளின் திரைக்கதை பற்றிய தொடரைப் படிக்கவும்.

க்ளாரா லூகாசைப்பற்றி சொல்லும் காட்சி தான், இந்தப்படத்தில் மையப்பிரச்சனையின் ஆரம்பம் என்று சொல்லலாம். அதாவது முதல் ப்ளாட் பாயிண்ட். மேலே சொன்ன கதை படத்தின் முதல் 15 நிமிடங்கள் மட்டுமே. க்ளாரா தெரியாமல் சொன்ன அந்தப்பொய்யால், லூகாஸ் அனுபவிக்கும் விளைவுகளே படத்தின் இரண்டாவது ஆக்ட். க்ளாராவைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுவான். போலிசாரால் கைது செய்யப்படுவான். இதில் சமூகம் அவனை எவ்வளவு கேவலமாக நடத்துகிறது, அவன் கேர்ள்ஃப்ரண்ட் முதற்கொண்டு நண்பர்கள் வரை அத்தனை பேரும் அவனுக்கெதிராகத் திரும்புவது வரை அத்தனையும் மனதைத் தொடும்வகையில் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். அவ்வளவு காலம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தவனின் வாழ்க்கை அந்தச் சிறிய பொய்யால் எப்படியெல்லாம் திசைமாறுகிறது என்பதைத் தெளிவான திரைக்கதையால் நெத்தியடியாகச் சொல்லியிருக்கின்றனர்.

இந்தப் பழியிலிருந்து தப்பிப்பது அல்லது இழந்துபோன சந்தோஷத்தை மீண்டும் பெறுவதுதான் பிரச்சனைக்கான தீர்வாக இருக்க முடியும். படமும் அதை நோக்கிதான் நகர்கிறது. க்ளாராவின் அப்பாவான தியோ லூகாசின் நெருங்கிய நண்பன். ஆனால் அவன்கூட லூகாசை நம்பாமல் அவனை வெறுப்பான். அந்த ஊரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் அவனை அனுமதிக்க மாட்டார்கள். எந்தப்பொருளையும் அவனுக்கு விற்பனை செய்ய மாட்டார்கள். அவனுடைய வீட்டில் கல்லைத் தூக்கி எறிவார்கள். லூகாசின் செல்ல நாயான ஃபேன்னியைக் கொன்றுவிடுவார்கள். இயல்பு வாழ்க்கையே நரகமாய் மாறிவிட்ட சூழலில் தான் அந்த சர்ச் சீன் வரும். அதுதான் இந்தப்படத்தின் இரண்டாவது ப்ளாட் பாயிண்ட். லூகாஸ் அந்தத் தவறை செய்திருக்க மாட்டான் என தியோ நம்ப ஆரம்பிக்கும் அந்த சீன் தான் க்ளைமாக்சின் ஆரம்பப் புள்ளி.

பிறகு ஒரு வருடத்திற்குப் பிறகு எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக லூகாசை நம்ப ஆரம்பிப்பர். மறுபடியும் எல்லா நண்பர்களும் சேர்ந்து பழக ஆரம்பித்திருப்பர். லூகாசின் மகனான மார்க்கஸ்-க்கு வேட்டையாடுவதற்கான அனுமதி கிடைத்திருக்கும். அதனால் அந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி அவனுக்கு ஒரு துப்பாக்கியைப் பரிசாகக் கொடுப்பான் லூகாஸ். பிறகு நண்பர்கள் எல்லோருடனும் வேட்டையாடுவதற்காக காட்டிற்குள் செல்வான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாகச் சென்றுவிட லூகாஸ் மட்டும் தனியாக இருப்பான். அப்போது எங்கிருந்தோ வரும் துப்பாக்கி குண்டு ஒன்று அவன் தோளுக்கு மேலாக உரசிச்செல்லும். வேண்டுமென்றே அவனைக் குறிபார்த்து யாரோ சுடுவதாகப் படம் முடியும்.

படத்திற்கான பெயர் The Hunt என எதற்காக வைத்தனர் என்று யோசித்தீர்களா ?

படத்தில் இடையில் ஒரு காட்சியில் லூகாஸ் ஒரு மானை வேட்டையாடுவதாக வரும். எந்த ஒரு தப்பும் செய்யாத அந்த அப்பாவி மான் லூகாசால் வேட்டையாடப்படும். அதேபோல தான் எந்த ஒரு தப்பும் செய்யாத லூகாஸ் இந்த சமூகத்தால் பழிச்சொல்லுக்கு ஆளாகி வேட்டையாடப்படுவதாக இயக்குனர் குறியீட்டோடு காட்சியமைத்திருக்கின்றார். இதுபோலப் படம் முழுவதும் பல குறியீடுகள் உண்டு. இரண்டாவது ப்ளாட் பாயிண்டான அந்த சர்ச் சீன் குறியீட்டுக்கு மற்றுமொரு உதாரணம். மற்ற குறியீடுகளை எல்லாம் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

லூகாசைச் சுட்டது யார் ?

படம் பார்த்தவுடன் வரும் முதல் கேள்வி க்ளைமாக்சில் லூகாசை சுட்டது யார் என்பது தான். சிலர் அது லூகாசின் மகன் மார்க்கஸ் தான் என்று கூறி வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். சிலர் அது சூப்பர் மார்க்கெட் ஓனர் தான் என்று கூறுகிறார்கள். சிலர் அது தியோ என்றும், வேறுசிலர் அது தியோவின் மகன் டோர்ஸ்டன் என்றும் கூறுகிறார்கள். ஆனால் என்னைக்கேட்டால், பொதுமக்களில் யாரோ ஒருவர் என்றுதான் சொல்லுவேன். இயக்குனர் அந்தக்காட்சியை ரசிகர்களிடமே விட்டுவிட்டார். அதனால் தான் அந்தக்காட்சி பன்முகத்தன்மை பெறுகிறது.

அது யாரென்பது முக்கியமல்ல. இயக்குனர் என்ன சொல்ல வருகின்றார் என்பதே முக்கியம். 'இந்தமாதிரி பழியில் மாட்டிக்கொண்ட ஒருவனால் எவ்வளவு காலம் ஆனாலும் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது' என்பது தான் இயக்குனர் சொல்லவரும் கருத்து. அந்தக்காட்சியை வேறு மாதிரியாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட, தான் நல்லவன் என்பதை நிரூபிக்க முடியாத இயலாமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் லூகாஸின் மனச்சிதைவின் பிம்பமாகவும் அந்தக்காட்சியை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

லூகாஸ் உண்மையிலேயே நல்லவனா ? இல்லை கெட்டவனா ?

படம் பார்த்த பலருக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கும். நம்மைக் குழப்புவதற்காக லூகாசை நல்லவனாகக் காண்பிக்கிறார்களோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இயக்குனரின் காட்சியமைப்புக்கான சான்று அது. பிரச்சனையின் வீரியம் நமக்குப் புரிய வேண்டும் என்பதற்கான காட்சியமைப்பு அது. ஆனால் லூகாஸ் ஒரு அப்பாவி. நல்லவன் என்பதே உண்மை.

படத்தில் சொல்லப்படும் மையக்கருத்து என்ன ?

இதற்கு இயக்குனர் சொல்வதையே பதிலாக எடுத்துக்கொள்ளலாம். "1970களில் நான் வளர்ந்தபோது எங்கள் சமூகத்தில் எல்லோருக்கும் நிர்வாணம் என்பது சகஜம். ஆனால் யாரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படவில்லை. ஒரு பையன் நிர்வாணமாக உள்ள ஒரு மனிதனின் மடியில் கூட அமர்ந்துகொள்ள முடியும். யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனால் இப்போது உலகம் மாறிவிட்டது. பயம், சந்தேகம், கவலை என எல்லாமுமாகச் சேர்ந்து உலகத்தை ஆட்டுவிக்கிறது. அதனால் தான் படத்தின் முதல் காட்சியை, நிர்வாணமாகச் சிலர் ஏரியில் குதித்து சந்தோஷமாக விளையாடுவதாக வைத்தேன். இது குடும்பம், சேர்ந்துவாழுதல், சமூகத்தைப்பற்றியதான காட்சி. பிறகு படம் முழுவதும் அந்த ஏரி உறையத் தொடங்கும். அதேபோல அந்த மக்களும் பயம், சந்தேகம் எனத்துன்பப்படத் தொடங்குவர்."

இப்படி ஒரு கதையை எடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது ?

இதற்கும் இயக்குனரே பதில் சொல்கிறார். "The Celebration படம் பார்த்த ஒரு சைக்யாட்ரிஸ்ட், 2000ன் ஆரம்பத்தில் ஒரு கேஸ் ஃபைலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். இதைப்படமாக எடுங்கள் என என்னிடம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து பல கேஸ் ஃபைல்களைப் படித்தேன். அவையெல்லாம் சேர்ந்தவையே இந்தப்படம். ஆனால் படத்தில் காட்டப்பட்ட காட்சிகளை விடவும் உண்மைச் சம்பவங்கள் இன்னும் மோசமானவை."

படத்தில் வரும் கிராம மக்கள் அனைவரும் லூகாசை துன்புறுத்துகின்றனரே ஏன் ? அவ்வளவு மோசமானவர்களா இந்த சமூகம் ?

என்னைக்கேட்டால் படத்தில் எவருமே கெட்டவர்கள் இல்லை. அந்த மக்கள் கூட, உண்மை தெரியாமல் தான் லூகாசைத் துன்புறுத்துகின்றனர். லூகாஸ் தான் அந்தக்குற்றத்தைச் செய்தவன் என்று நம்புவதால் தான் அவனை அடிக்கின்றனர். அதேபோல க்ளாராவையும் குற்றம் சொல்ல முடியாது. அவள் தான் சொல்வது பொய் என்பதைக்கூட அறிந்துகொள்ள முடியாத சிறுமி. தான் ஏதோ உளறியதால் தான் லூகாசை எல்லோரும் வெறுக்கின்றனர் என்பதை உணர்ந்துகொண்ட அவள், பிற்பாடு 'நான் ஏதோ உளறிவிட்டேன். லூகாஸ் ரொம்ப நல்லவன்' என்று கூறுவாள். ஆனால் அதை யாரும் நம்பமாட்டார்கள். அதேபோல பிரச்சனைக்குக் காரணமாக அவளிடம் ஆபாசப்படத்தைக் காட்டிய அவளின் அண்ணனும், அவனுடைய நண்பனையும் கூட குற்றம் சாட்ட முடியாது. பிரச்சனை பெரிதானதும் க்ளாராவின் அண்ணன் டோர்ஸ்டன் மனம் வருந்தி அழுவதாக ஒரு காட்சி வரும். மொத்தத்தில், இப்படி ஆபாசப் படங்கள் சர்வ சாதாரணமாக ஒரு சிறுவனின் கையில் கிடைக்கும் வகையில் செயலிழந்து கிடக்கும் அரசாங்கத்தையும், சமூகத்தையும், மக்களின் வாழ்க்கைமுறையையும் மட்டுமே குற்றம் சாட்ட முடியும். சமூகத்தின் ஓர் அங்கமான நாம் எல்லோருமே இதற்கு ஏதோ ஒரு வகையில் காரணமாகியிருக்கிறோம் என்பது தான் உண்மை.

க்ளாரா பற்றி ?

படத்தின் பிரச்சனைக்குக் காரணமான, மிகவும் சவாலான கதாபாத்திரம். ஆனால் கொஞ்சம்கூட கஷ்டப்படாமல் அசால்டாக நடித்துள்ளாள் அந்தக்குட்டிப்பெண். ஒவ்வொரு காட்சியையும் பிரமாதப்படுத்தி உள்ளாள். அதேபோல படத்தில் க்ளாராவின் நடிப்புக்குச் சான்றாக இன்னொரு காட்சியைச் சொல்லலாம். ஹெட்மாஸ்டர் க்ரெத்தும், விசாரணையாளனும் சேர்ந்து க்ளாராவை தனியாக அழைத்து லூகாஸ் என்ன பண்ணிணான் என்பதை விசாரிக்கும் காட்சி. அதில் பல கேள்விகளின் உண்மையான அர்த்தம் அவளுக்குத் தெரிந்ததா என்பதே சந்தேகம் தான். ஆனாலும் தனது ரியாக்சன்களால் பிரமாதப்படுத்தி இருப்பாள். அவளுக்கு அந்தக் காட்சி ஏதோ தவறான ஒன்றைப்பற்றியது என்பது மட்டும்  விளங்கியதாம். மற்ற எதுவும் தெரியாதாம். நன்றாக நடித்து எல்லோரிடமும் பாராட்டுப் பெற வேண்டும் என்பது மட்டும் தான் அவளின் ஒரே நோக்கமாக இருந்ததாம்.

குழந்தைகள் பொய்சொல்வதாகக் காட்சி வந்திருக்கிறதே ? குழந்தைகள் எப்படி பொய் சொல்லும் ?

குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பது காலங்காலமாக நம்மிடையே சொல்லப்படும் ஒரு அபத்தமான கருத்து. குழந்தைகள் சிலவேளைகளில் தூண்டுதலினாலும், பெரியவர்களின் கவனத்தைப் பெறவும் தெரியாமலே கூட பொய் சொல்லக்கூடும். ஆனால் அதற்குக் கண்டிப்பாகக் காரணம் இருக்கும். அப்படியான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது பெரியவர்களான நாமாகத்தான் இருக்கும்.

கடைசியாக, படம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையிலும் இன்னும் அதன் தாக்கம் என்னிடம் குறையவில்லை. அதுதான் நல்ல படத்துக்குரிய அறிகுறி. சாதாரண ட்ராமா வகைக் கதைக்கு எப்படி த்ரில்லாக, விறுவிறுப்பாகத் திரைக்கதை அமைக்க வேண்டும் என்பதை இந்தப்படத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். திரைத்துறையில் சாதிக்க விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது.


12 comments:

 1. இந்தளவு படம் பார்க்கும் போது சிந்திக்கவில்லை... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி..!!

   Delete
 2. எவ்வளவு வீரியமான எழுத்து நிச்சயம் நானும் இப்படத்தை பார்த்துவிட்டு பதிவிடுகிறேன் நண்பா இப்பொழுதே பார்க்க விரும்புகிறது இதை படித்தவுடன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பாருங்க... உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. பாத்துட்டு உங்க பார்வைல படத்தைப்பத்தி ஒரு பதிவு போடுங்க..!!

   Delete
 3. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தலைவா..!! :)

   Delete
 4. அருமையாக அலசி ஆராய்ந்துள்ளீர்கள்... சென்னை உலக திரைப்படவிழாவில் இந்த படத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது, இதை பற்றி எழுத தோன்றினாலும் முதல் 10 நிமிட காட்சிகளை காணாததால் பார்த்துவிட்டு எழுத இருந்தேன், தங்கள் எழுத்துக்களில் அதை கண்டுவிட்டேன் அண்ணா.
  மேலும் அந்த சிறுமி இரவு தூக்கத்தில் இருக்கும் பொழுது லூகாஸின் நாய் ஃபேன்னியை நினைத்துக்கொண்டே இருக்கிறாள், எனவே பாதி உறக்கத்தில் கண்விழிக்கும்போது அந்த நாய் இருப்பதாக நினைக்கிறாள் உடன் இருக்கும் உருவத்தை லூகாஸ் என நினைத்து லூகாஸ் என அழைக்கிறாள், அந்த உருவம் மெல்ல அவள் அருகே வரும்போதுதான் தெரிகிறது அது அவளது அப்பா என்று. அப்போது அவளது தந்தை அழும் காட்சி, தன் குழந்தை தவறாக சொல்லிவிட்டதோ,தன் நண்பனை தவறாக எண்ணி தவறு செய்துவிட்டோமே என்று எண்ணுவதை தெளிவாக காட்டும்.

  ReplyDelete
  Replies
  1. அடடா.. நான் சொல்லாமல் விட்ட காட்சியை நீங்க ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க. அந்தக்காட்சியும் அதைத்தொடர்ந்து தியோ, லூகாசைச் சென்று சந்திக்கும் காட்சியும் அருமையான காட்சிகள்.

   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. :)

   Delete
 5. ஓராண்டு கழித்து நடக்கும் ஒன்றுகூடுகையின்போது லூகாஸின் மகன் மார்க்கஸுக்கு சுடு-உரிமம் வழங்குவதாக அறிவிக்கப்படுகையில், லூகாஸ் தன்னைச் சுற்றி நின்றவாறும் அமர்ந்தவாறும் உள்ளவர்களை நோட்டமிடுவான்..! ஓராண்டுக்குமுன் நான் செய்யாத தவற்றுக்காக அதுவரையிலும் ஒன்றுக்குள் ஒன்றாயிருந்த என்னை இந்த நண்பர்களும் ஊராரும்தாம் எவ்வளவு எளிதாக, கொஞ்சமும் சிந்திக்காமல் ஒரே நாளில் பழித்தும், தூற்றியும், அடித்துவிரட்டியும் வாழவிடாமல் செய்தனர் என்று அவனுள் ஓடும் நினைப்பை அவன் பார்வை தெரிவிக்கும்..! பின்னணியில் இசைக்கப்படும் கிதார் நெஞ்சைப் பிசையும்..!

  காலவரிசையில் முன்னும் பின்னுமாக தனித்தனியாக நடந்த நிகழ்வுகளை தொடர்பற்றவகையில் ஒன்றோடொன்று பிணைத்துக்கொள்ளும் மிகுகற்பனை வாய்த்தவளாக சிறுமி கிளாரா இருப்பதாகத் தெரிகிறது..! அவளது அண்ணனும் அவனது நண்பனும் அவளிடம் விளையாட்டாகக் காட்டிய படத்திலுள்ள விறைத்த ஆணுறுப்பை, லூகாஸின்மீதான வெறுப்பின்பொருட்டு அவனுடைய உறுப்பாக, அவன்தான் தன்னிடம் காட்டியதாக ஒரு கலங்கலான பிறழ்காட்சியை புனைந்துகொள்கிறது அவளது மனம்..! அவள் அறிந்து பொய்யுரைக்கவில்லை..! இஃது உளத்தியலில் நிகழவாய்ப்புள்ள, நிகழ்கிற பிறழ்நிலையே..!

  எடுத்தோம் கவிழ்த்தோமென்று எதையும் குருட்டாம்போக்கில் மதிப்பிடும் பொதுப்புத்தியின் அபத்தத்தையும், அராஜகத்தையும் அருமையாகத் தோலுரித்துக்காட்டுகிறது படம்..! சிக்கலான தருணங்களில், குறிப்பாக நெருங்கிய உறவுகளில், உணர்வார்ந்தன்றி அறிவார்ந்து செயல்படவேண்டியதன் தேவை ஆழமாக உணர்த்தப்படுகிறது..! வெகுளியும் நல்லியல்புமிக்கவனுமான லூகாஸும் அவனுக்கு நேர்ந்த அவமானமும் வலியும் என்னை மிகவும் கலங்கடித்துவிட்டன..!

  ReplyDelete
  Replies
  1. அடாடா.. யாருங்க நீங்க ? இவ்ளோ அருமையா படத்தோட மொத்தக்கருத்தையும் ஒரு பாராவுல சொல்லிட்டீங்களே...!!! உங்க தமிழுக்கு நான் ரசிகனாகிட்டேன்.

   //இஃது உளத்தியலில் நிகழவாய்ப்புள்ள// - உயிரெழுத்துக்கு முன்னாடி வரும்போது இஃது தான் சொல்லனும். இதுனு சொல்லக்கூடாது. இவ்ளோ தெளிவா தமிழை உபயோகப்படுத்தியிருக்கீங்கன்னா நீங்க உண்மையிலேயே க்ரேட். உங்கள் தமிழ்ப்பற்று புல்லரிக்க வைக்குது.

   யாரோ பெரிய ஆள் தான் இந்த குட்டிபையனோட ப்ளாக்ல வந்து அனானிமசா கமெண்ட் போட்டுருக்கீங்க. அது மட்டும் நல்லா தெரியுது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 6. முதல் முறை பார்த்த போதே மனதை உலுக்கிய படம். சென்னை திரைப்பட விழாவில் பார்த்தேன்.. அருமையான விமர்சனம்..

  ReplyDelete
  Replies
  1. உங்க பாணியில நீங்களும் ஒரு விமர்சனத்தைப் போடுங்கோ தல..
   வருகைக்கு மிக்க நன்றி..!! :)

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *