Apr 28, 2014

1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்திகில், பயம், த்ரில், ஹாரர் - மனித வாழ்க்கையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த உணர்ச்சிகள் இவை. மனிதன் தொடர்ந்து வாழ்வதற்கும் இவைதான் ஆதாரமாக இருக்கின்றன. பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோரும் இதற்கு விதிவிலக்கல்ல. தான் உயிர்வாழவேண்டும் என்பதற்கான உள்ளுணர்வு எப்போதுமே மனிதனுக்கு இருந்துவருகிறது. அதற்கு பங்கம் வரும்போது தான் மனிதன் பயத்திற்கு ஆளாகிறான். எனக்குத் தெரிந்து 80 வயதான பெரியவர்கள் கூட தான் சாகப்போவதை அறிந்து பயந்து கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள்.  அதை நேரிலேயே கண்டிருக்கிறேன். உயிர் வாழ்வதற்கான இந்த பயம் தான் மனிதனின் பரிணாமத்திலும் பல வளர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது. தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு எப்போது போகிறதோ அப்போதே பய உணர்வு வந்து ஆக்கிரமித்துக்கொள்கிறது.

அப்படிப்பட்ட இந்த பயத்தை, திகிலை நாம் அனுபவிக்க வேண்டும். ஆனால் நம் உயிருக்கோ அல்லது உடலுக்கோ எந்த சேதாரமும் ஏற்படக்கூடாது. அதற்கு ஒரே வழி ஹாரர் படங்கள் தான். மனித இனத்தின் இந்த ஆதார உணர்வை மையமாக வைத்துப் படம் எடுப்பதால் தான் எப்போதுமே ஹாரர் படங்களுக்கு வரவேற்பு இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப்பதிவில் ஹாரர் படங்களின் வகைகளை இணையத்தின் உதவியுடன் சற்றுத் தெரிந்துகொள்வோம். எப்படியெல்லாம் இந்த ஹாரர் ஜானர் மாற்றம் பெற்று வந்திருக்கிறது, அதனுடைய வகைகள் என்ன என்பதையெல்லாம் முடிந்தவரை சுருக்கமாகப் பார்க்கலாம்.

க்ளாசிக் ஹாரர்:


ஆரம்பகாலத்தில் எடுக்கப்பட்ட ஹாரர் படங்கள் பயமுறுத்தும் பழைய மாளிகைகள், இருண்ட அரண்மனைகள், பனிபடர்ந்த புகைமூட்டமான கட்டிடங்கள் போன்றவற்றில் தான் எடுக்கப்பட்டன. பேய், பிசாசுகள், மான்ஸ்டர்கள், வித்தியாசமான ஜந்துக்கள், தீய சக்திகள், சாத்தான்கள் போன்றவை தான் முதன்மைக் கதாபாத்திரங்களாக இருந்தன. சினிமா வரலாற்றில் முதன்முதலில் எடுக்கப்பட்ட ஹாரர் படம் எதுவென்று தெரியுமா ? Hugo(2011) படத்தில் பென் கிங்க்ஸ்லி ஏற்ற கதாபாத்திரம் ஜார்ஜ் மெலியஸ் (Georges Méliès) நினைவிருக்கிறதா ? அவர் 1896ல் எடுத்த The Haunted Castle என்ற படம் தான் முதல் ஹாரர் படமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 3 நிமிடங்களில் முடிந்துவிடும் அந்தப்படம் இதோ யூட்யூப்பில்,


அந்த மௌனயுகத்தில் குறிப்பிடத்தக்க சில க்ளாசிக்குகள் Esmeralda (1905), The Hunchback of Notre Dame (1911) போன்ற படங்களைச் சொல்லலாம். இந்த காலகட்டத்தில் வந்த ஹாரர் படங்களில் புதியதொரு அலையை ஏற்படுத்தி இன்றளவும் ஒரு முன்னோடியாக நினைவுகொள்ளப்படுவது ஜெர்மன் எக்ஸ்ப்ரஸனிச படங்கள் தான். முதல் உலகப்போருக்கு முன்பாக ஆரம்பித்த இந்த கலைப்புரட்சி 1920களில் பெரிய எழுச்சியைப் பெற்றது. அதில் முதல் முதலாக வெளிவந்த எக்ஸ்ப்ரஸனிச ஹாரர் படம் The Cabinet of Dr. Caligari (1919). முழு நீளப்படமான இந்தப்படம் ஹாரர் ஜானரில் மிக மிக முக்கியமான ஒரு படம். சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்கும் வகையில் முன்னேறிக்கொண்டிருந்தது ஜெர்மன் சினிமா இண்டஸ்ட்ரி. முதல் உலகப்போரின் முடிவில் அதன் உச்ச நிலையை அடைந்தது. 1920ல் ஹாலிவுட்டிலும் வெளியிடப்பட்ட இந்தப்படம், அதன்பிறகு பல ஹாரர் படங்கள் வெளியாவதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.

ஸ்லீப்வாக்கிங்க் (சோம்னாம்புலிசம் என காவலன் படத்தில் விஜய் சொல்வாரே அதே வியாதி) உடைய ஒரு நோயாளியும் (சீசர்), டாக்டர் காலிகரியும் மற்றும் ஃப்ரான்சிஸ், அவனது காதலி ஜேன், நண்பன் ஆலன் ஆகிய மூவருக்கும் இடையே நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் படம். மௌனப்படமான இந்தப்படம் முழுதாக யூட்யூப்பில் காணக்கிடைக்கிறது.அதன்பிறகு அதே எழுச்சியுடன் தொடர்ந்து வெளிவந்த படமான The Golem: How He Came into the World (1920) படமும் எக்ஸ்பிரஸனிச வகையில் ஒரு க்ளாசிக்காக மாறியது.

அதேபோல ஆரம்பகாலப் படங்களில் மிக முக்கியமானவை வேம்பையர்களை வைத்து வெளியான ஹாரர் படங்கள். 1897ல் Bram Stoker என்ற ஆங்கிலோ-ஐரிஷ் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளியான "Dracula" என்ற வேம்பையர் நாவல் தான் பல வேம்பையர் ஹாரர் படங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. The Vampire (1913), A Fool There Was (1915), Night of Horror (1916), The Death of Dracula (1921) போன்ற சில படங்கள் வேம்பையர் ஜானரில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், மிக முக்கியத்துவம் வாய்ந்த, முழுநீள வேம்பையர் படம் Nosferatu (1922) தான். ட்ராகுலா நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வேம்பையர் படங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. 1979ல் இந்தப்படம் பிரபல ஜெர்மன் டைரக்டர் வெர்னர் ஹெர்சாக்கினால் Nosferatu the Vampyre (1979) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

மௌனயுகத்தின் முடிவும், படங்கள் பேச ஆரம்பித்த காலமுமான 1930களில் ஹாரர் ஜானர் ஒரு புதுப்பிறவி எடுத்தது என்றால் அதில் மிகையில்லை. இசையும், ஒலியும் ஹாரர் படங்களுக்கு எந்தளவு முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அமானுஸ்யத்தை அப்படியே ஆடியன்சுக்கு உணர்த்துவதில் இசையும், ஒலிக்கலவையும் பெரும்பங்கு வகித்தன. இயக்குனர் Roy Del Ruth இயக்கி  1928ல் வெளியிடப்பட்ட The Terror என்ற படமே முதல் பேசும் ஹாரர் படமாகக் கருதப்படுகிறது. கதவு க்றீச்சிடும் சத்தம், காற்று வீசும் சத்தம், ஆர்கன் இசை என இந்தப்படத்தின் ஒலியை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தினார்கள்.  அதன் பிறகு 1930கள் ஹாரர் படங்களின் மிக முக்கியமான காலகட்டம்.

இன்றைக்கு நாம் க்ளாஸிக்குகள் என்று கொண்டாடும் பல படங்கள் இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டது தான். ஜெர்மன் எக்ஸ்பிரஸனிசத்தின் வேர்கள் ஹாலிவுட்டிலும் காலூன்றி அதன் விளைவாய் வந்த Frankenstein, Dracula போன்ற காலத்தால் அழிக்க முடியாத க்ளாஸிக் ஹாரர் படங்களின் காலகட்டம் இதுதான். ஐரோப்பியக் காட்டேரிகள், ஜோம்பிகள், விபரீத சயின்டிஸ்ட்டுகள், இன்விசிபிள் மேன், வித்தியாசமான ஜந்துக்கள், மான்ஸ்டர்ஸ் என பலவகையான ஹாரர் கேரக்டர்களைப் படைத்து திரையில் உலவவிட்டதும் இந்தக் காலகட்டமே. இலக்கியம் மற்றும் தொன்மங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த ஹாரர் படங்கள் அழியாப்புகழைப் பெற்றன. 1930களைத் தொடர்ந்து 1940களிலும் ஃப்ராங்கென்ஸ்டைன், ட்ராகுலா, மம்மி, இன்விசிபிள் மேன், ஓநாய் மனிதன் எனப்பல கேரக்டர்களை அறிமுகப்படுத்தியது ஹாலிவுட்.

கின்னஸ் புத்தகத்தின்படி இதுவரை வெளிவந்த ஹாரர் படங்களில் அதிகளவு பயன்படுத்தப்பட்ட கேரக்டர் ட்ராகுலா தானாம். ஏறக்குறைய 200-க்கும் அதிகமான படங்கள் ட்ராகுலாவை மையப்படுத்தி வெளிவந்திருக்கின்றன. 1930களில் ஹாரருக்கு ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு ஹாலிவுட் யுனிவெர்சல் ஸ்டுடியோவுக்குத்தான். 1931ல் Tod Browning இயக்கத்தில் வெளிவந்த Dracula படம் ட்ராகுலா வகைப்படங்களில் கல்ட் க்ளாஸிக். Frankenstein (1931), The Mummy (1932), The Invisible Man (1933), King Kong (1933), Werewolf in London (1935), Dracula’s Daughter (1936) போன்ற படங்கள் வெளிவந்ததிலிருந்தே 1930கள் ஹாரர் ரசிகர்களின் பொற்காலமாக இருந்ததுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஹாரர் படங்களின் இன்னொரு முக்கியமான வகை ஸோம்பி படங்கள். எனக்கு மிகவும் பிடித்த ஹாரர் வகையும் இதுதான். யுனிவெர்சல் ஸ்டுடியோ 1930களில் ஹாரரில் புரட்சி செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் பரிசோதனை முயற்சியாக பலவிதமான மான்ஸ்டர்களை திரையில் களமிறக்கிக் கொண்டிருந்தது. அப்படி 1932ல் வெளியிடப்பட்ட White Zombie (1932) என்ற படம் தான் முதல் முழுநீள ஸோம்பி படமாக நம்பப்படுகிறது. அதன்பிறகு Revolt of the Zombies (1936), Drums of the Jungle (1936), King of the Zombies (1941), Revenge of the Zombies (1943), I Walked With A Zombie (1943) எனப்பல ஸோம்பி படங்கள் 1930-40களில் வெளியானது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஹாரர் படங்களில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது. நியூக்ளியர் அழிவுகளை நேரடியாகப் பார்த்த மக்களின் மனதில் இன்னும் அதிக பயமூட்டுவதற்கு சயின்ஸ்பிக்சனில் ஹாரரைப் புகுத்தி படமெடுத்து வெளியிட்டார்கள். The Thing From Another World (1951), The Day The Earth Stood Still (1951), Forbidden Planet (1956), Invasion of the Body Snatchers (1956) போன்றவை இந்தக்காலகட்டத்தில் முக்கியமான ஹாரர்-சயின்ஸ்பிக்சன் படங்கள்.


அதேபோல 1954ல் வெளிவந்த ஜப்பானிய நியூக்ளியர் மான்ஸ்டர் படமான Godzilla படத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த காலகட்டத்தில் ஹாரர் படங்கள் பி-கிரேடு படங்களாய் மாறிப்போனது. லோ பட்ஜெட், ரீமேக்குகள், சீக்வல்கள் என ஹாரர் படங்கள் தரைமட்டத்திற்குப் போனது. கொஞ்சம் காசு இருந்தால் போதும் அதைவைத்து மூன்றாந்தர, ஏழாந்தர வேம்பையர், ஹாரர் படத்தை எடுத்து ரிலீஸ் செய்தனர். காட்சில்லா படத்தைத் தொடர்ந்து அதுமாதிரியே எக்கச்சக்கமான காட்சில்லா (ராட்சஷப் பல்லி) படங்களை எடுத்து தொடர்ச்சியாக ரிலீஸ் செய்தனர்.

The Incredible Shrinking Man (1957) - ரேடியோக்கதிர்களால் பாதிக்கப்படும் ஒருவன் உருவத்தில் சிறியதாகிக்கொண்டே சென்று 6 இன்சுகள் உயரத்தை அடைகிறான். அதனால் பூனை, எட்டுக்கால் பூச்சி போன்ற்வை கூட அவனுக்கு மான்ஸ்டர்கள் போலத் தெரிகிறது. அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என சுவாரசியமாகக் கதை சொன்ன இந்தப்படம் சூப்பர் ஹிட். அதேபோல வளர்ந்துவந்த டிவிக்களின் ஆதிக்கத்திலிருந்து தப்ப, ஒவ்வொரு ஸ்டுடியோவும் பலவிதமான பரீட்சார்த்த முயற்சிகளை எடுத்தது.

அப்படி பரீட்சார்த்த முறையில் வார்னர் பிரதர்சால் எடுக்கப்பட்ட முதல் கலர்+ 3டி படம் House of Wax (1953). இதன் ரீமேக்கான House of Wax (2005) படத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். (அட்லீஸ்ட் பாரிஸ் ஹில்டனாவது ஞாபகமிருக்க வேண்டும்). 1950களின் இறுதியில் வெளிவந்த இரண்டு சயின்ஸ்பிக்சன் ஹாரர் படங்கள் The Blob (1958), The Fly (1958). இதில் The Fly படத்தின் தொடர்ச்சியாக Return of the Fly (1959), Curse of the Fly (1965), The Fly (1986), The Fly 2 (1989) என ஏகப்பட்ட சீக்வல்கள் வெளிவந்தன.

1950களின் இறுதியில் லோ பட்ஜெட் படங்கள், பி கிரேடு படங்கள், கிம்மிக்ஸ் ஹாரர் படங்களின் ஆக்கிரமிப்பால் சயின்ஸ்பிக்சன் ஹாரர் படங்கள் முடிவுக்கு வந்தன. அம்மாதிரியான கிம்மிக்ஸ் (Gimmicks - மந்திர தந்திர வேலை) ஹாரர் படங்களை இயக்கியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்  William Castle. இவரின் இயக்கத்தில் 1958ல் வெளிவந்த Macabre படத்திற்கு விளம்பரம் என்ன தெரியுமா ? படத்தைப் பார்க்கவரும் ஒவ்வொரு கஸ்டமருக்கும் 1000டாலர்கள் மதிப்புள்ள லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கப்படும். யாராவது படம் பார்த்து இறந்துபோனால் அவர்கள் குடும்பத்துக்கு இந்தப்பணம் சென்றுசேரும் என ஓவரோ ஓவராக ஹைப் ஏத்தி படத்துக்கு விளம்பரம் தேடினார்.


அதேபோல 1959ல் வெளியான House on Haunted Hill என்ற படத்தில் "Emergo" என்கிற கிம்மிக்ஸ் வேலையை உபயோகித்தார். அதாவது படத்தில் எப்போதெல்லாம் எலும்புக்கூடு வருகிறதோ அப்போதெல்லாம் தியேட்டரின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ஒரு ப்ளாஸ்டிக் எலும்புக்கூடு ஆடியன்ஸ் தலை வழியாகப் பறக்கவிடப்படுமாம். திடீர் திடீரென்று அப்படிச் செய்வதால் ஆடியன்ஸ் மத்தியில் பயத்தை உருவாக்கலாம் என்றெண்ணி இதைச் செய்திருக்கின்றனர். ஆனால் லோக்கல் சிறுவர்கள் இதைக்கண்டுபிடித்து, அடுத்த முறை படம் பார்க்கச் செல்லும்போது கற்களை எடுத்துச்சென்று அந்த எலும்புக்கூடு வரும்போதெல்லாம் அதைக் கல்லால் அடித்து ரசித்தார்களாம்.

அதேவருடம் வெளியான The Tingler என்ற படத்திலும் இந்த கிம்மிக்ஸ் வேலை தொடர்ந்துள்ளது. எப்போதெல்லாம் அந்த டிங்க்ளர் திரையில் வருகிறதோ அப்போதெல்லாம் ஆடியன்ஸ் அமர்ந்துள்ள சீட் அதிருமாம். சீட்டுக்கடியில் ஏதோ மெக்கானிக்கல் டிவைஸைப் பொருத்தி இம்மாதிரி செய்துள்ளனர். அதேபோல தியேட்டரில் பல இடங்களில் ஸ்பீக்கர்களைப் பொருத்தி எதிர்பாராத நேரத்தில் அந்த ஸ்பீக்கரிலிருந்து கத்தவிடுவது, வெயிட்டான பைகளை வைத்து ஆடியன்சின் கால்களை இறுக்கிப் பிடிப்பது எனப்பல கிம்மிக்ஸ் வேலைகளைப் பார்த்துள்ளனர். எப்படியெல்லாம் பண்ணி பயத்தை வரவழைக்கிறாங்க பாருங்க ? படம் நல்லாருந்தா ஏன் இந்த வேலையெல்லாம் பண்ணனும் ?

இப்படி ஹாரரை வேறு ஒரு பாதைக்குத் திருப்பி அதன் அழிவுப்பாதை ஆரம்பிக்கையில் தான் அந்த மகான் உதித்தார். திகில் திரையுலகின் லெஜண்ட் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த இயக்குனர் கொடுத்த பொக்கிஷங்கள் ஏராளம். பயம் என்ற உணர்வைச் சரியாக உணர்ந்துகொண்டு அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலகையே பயப்படுத்தி, பய உலகின் மன்னனாக வாழ்ந்த அந்த திரையுலக ஜாம்பவான்...

யாரென்று உங்களுக்கும் தெரியும். அவரின் படைப்புகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

பி.கு.:
1.அடுத்த பதிவிலிருந்து ஹிஸ்டரியை முடித்துக்கொண்டு, ஹாரரின் வகைகளைப் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
2.ஓரிரு பகுதிகளில் முடிந்துவிடும் மினிதொடர் இது என்பதால் அடுத்தடுத்த பகுதிகள் அதிக கால இடைவெளியில்லாமல் தொடர்ந்து வெளியிடப்படும்.
3.மேலே சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான கருத்துக்களின் சோர்ஸ் இணையம் தான். அதனால் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.

அடுத்தபகுதி

-தொடரும்

6 comments:

 1. ஹாரர் படங்களை பற்றி நீங்களும் எழுத தொடங்கிட்டீங்க , நிறைய தேடி கண்டுபிடிச்சு எழுதி இருக்கீங்க நண்பா உங்கள் விவரிப்பில் தெரிகிறது. என்னை போன்ற ஆளுகளுக்கு ரொம்ப வசதியா போச்சு :P தொடருங்கள் நண்பா

  ReplyDelete
  Replies
  1. இணையம் இருக்கப் பயமேன்.. :)

   Delete
 2. The Great Suspense king "alfred hitchcock".... waiting boss....!

  ReplyDelete
  Replies
  1. yes. you're absolutely correct. will post next part soon.
   Thanks for visiting and commenting..!! :)

   Delete
 3. நீங்கள் குறிப்பிட்ட சில படங்களை முன்னமே பார்த்திருக்கிறேன்.ஹாரர் படங்கள் பற்றி பலர் எழுதி இருந்தாலும் அதன் வரலாற்றை பற்றிய கட்டுரைகள் தமிழில் காண்பது அரிது..உங்கள் பதிவு அதை நிறைவு செய்கிறது..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. என் நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கிரது

  ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *