May 2, 2014

2 - ஹாரர், திகில், பயம் : 1960களில் ஹாரரின் எழுச்சி


முந்தைய பகுதி

போன பகுதியில் திகில் திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தவர் யாரென்று கேட்டிருந்தோம் அல்லவா ? அது ஆல்ஃப்ரட் ஹிட்ச்சாக் தான் என்பதை சிறுகுழந்தை கூட சொல்லியிருக்கும். சஸ்பென்ஸ் மன்னனான அவரின் பெயரையே போன பகுதியில் சஸ்பென்ஸாக வைத்தது நகைமுரண் தான்.

1926ல் அவரின் இயக்கத்தில் வெளிவந்த The Lodger (1927) என்ற படத்திலேயே ஹாரரின் அம்சங்களை வெளிக்கொணர்ந்தார் ஹிட்ச்சாக். அதற்குப் பிறகு 30 ஆண்டுகளுக்குப் பிறகு 1960ல் வெளிவந்த Psycho படம் ஹாரர் ஜானரில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். வெறும் 8லட்சம் டாலர்களில், லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வசூலித்த மொத்தத்தொகை 80 மில்லியன் டாலர்களுக்கும் மேல். ஹாரர் என்பது வெறுமனே மான்ஸ்டர்களையும், பயமுறுத்தும் கோரமான முகங்களையும் மட்டுமே காட்டி பயமுறுத்துவது என்று நினைத்துக்கொண்டிருந்த ஹாலிவுட்டை, 'அடேய் முட்டாப்பசங்களா.. பயம்ங்கறது மனசிலேர்ந்து வரனும். படம் பார்த்து முடிச்சப்புறமும் அந்தப்பயம் இருந்துக்கிட்டே இருக்கனும். அப்டி எடுக்கறதுதான் ஹாரர்' என்று பிடறியில் அடித்தது போல எடுத்துக்காட்டியது தான் இந்தப்படம்.

ஹாரர் படமோ அல்லது சைக்கலாஜிகல் த்ரில்லர் படமோ எடுக்கும் எவரும் இந்தப்படத்தின் இன்ஸ்பிரேஷன் இல்லாமல் எடுப்பது கடினம். இந்தப்படம் வெளிவந்த சமயத்தில் அமெரிக்கப் பெண்கள் தங்களுடைய பாத்ரூமிற்குள் செல்வதற்கே மிகவும் பயந்துபோய் பல நாட்கள் குளிக்காமலே இருந்துள்ளார்களாம். அதற்குக் காரணம் இந்தப்படத்தில் வரும் அந்தக் குளியல் காட்சி. இன்றளவும் பாடமாய் இருக்கும் இந்தப்படத்தின் அந்தக் குளியல் காட்சி இதோ,


வெளியிலிருந்து பார்க்கையில் நார்மலான மனிதனாகத் தெரிகிற நார்மன் பேட்ஸ் என்கிற மோட்டல் ஓனர், உள்ளுக்குள் ஒரு சைக்கோவாய் மான்ஸ்டராய் இருப்பதைத் த்ரில்லுடன் காட்டுவதே படம். இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதே பெயரில் இதன் சீக்வல்கள், ப்ரீக்வல்கள் என 4,5 படங்கள் வந்தாலும் எதுவுமே பெரிதாகப் பேசப்படவில்லை. ஒரிஜினல் படம் தான் பெஸ்ட்.

இதையடுத்து மாஸ்டர் இயக்கிய மற்றுமொரு ஹாரர் படம் The Birds (1963). பறவைகள் திடீரென மனிதர்களைத் தாக்கத்தொடங்க அதிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஒரு க்ரூப்பைப் பற்றிய படம் தான் இது. 'It could be the most terrifying motion picture I have ever made!' என்ற டேக்லைனுடன் வெளிவந்த இந்தப்படமும் ஹிட்ச்சாக்கின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்றாகியது.

1960களில் ஆதிக்கம் செலுத்திய ஹாரர் இயக்குனர்களில் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆள் ரோமன் பொலான்ஸ்கி. போலந்து நாட்டைச் சேர்ந்த பொலான்ஸ்கியின் முதல் ஆங்கிலப்படம் 1965ல் வெளிவந்த  Repulsion என்ற ஹாரர் படம். செக்சுவலாக டிஸ்டர்பான கரோல் என்ற பெண்ணின் ஹலூசினேஷன்களால் அவள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறாள் என்பதே இந்தப்படத்தின் கதை.

அதற்குப் பிறகு அவரும் அவரது மனைவியும் இணைந்து நடித்த The Fearless Vampire Killers (1967) என்ற ஹாரர் காமெடிப் படத்தை எடுத்தார். அதற்குப் பிறகு தான் அவருடைய மிகப்பெரிய கமர்சியல் ஹிட்டான பேய்ப்படம் Rosemary's Baby (1968) படத்தை எடுத்தார். சாத்தானின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின், தீயசக்திகளுக்கெதிரான போராட்டங்களே படம் என ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட்டாலும் மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய படங்களுள் இதுவும் ஒன்று. ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் முழுக்க முழுக்க ஐரோப்பிய சினிமாவைப் போன்று கலைநயத்துடன் எடுக்கப்பட்ட படமென இந்தப்படம் போற்றப்படுகிறது.

60களின் ஹாரர் படங்களைப் பற்றிப் பேசுகையில் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டிய ஒரு ப்ரொடக்சன் கம்பெனி இருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த Hammer Film Productions என்ற இந்தக் கம்பெனியிலிருந்து 1955-1979 காலகட்டத்தில் ஏராளமான ஹாரர் படங்கள் வெளிவந்தன. ஹாரரில் கோதிக் ஹாரர் என்று ஒருவகை இருக்கிறது. ரொமான்டிக் கலந்த ஹாரருக்கு கோதிக் ஹாரர் என்று பெயர். ஹாரர்களின் வகைகளைப் பற்றி பார்க்கையில் இதைப்பற்றி மேலும் விரிவாகப் பார்க்கலாம்.

அப்படி கோதிக் ஹாரர் படங்கள் எடுப்பதில் ஆரம்பகாலத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு நிறுவனம் யுனிவெர்சல் ஸ்டுடியோஸ். யுனிவெர்சலின் முந்தைய காலகட்ட கோதிக் மான்ஸ்டர் படங்களை 60களில் ரீமேக்/ரீபூட் பண்ணத்தொடங்கியது ஹேம்மர் ப்ரொடக்சன்ஸ். யுனிவெர்சலின் ஒரிஜினல் படங்களை விட அதிகமான கோரத்தையும், கிளுகிளுப்பையும் சேர்த்து ரீமேக் படங்களை எடுத்தார்கள். 1951ல் இங்கிலாந்து ஃபிலிம் போர்டு (The British Board of Film Classification) 'X Rated' சர்டிஃபிகேட்டை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே அந்த ரேட்டிங் வாங்கிய படங்களுக்கு அனுமதிக்கப்படுவர். 'X' ரேட்டிங் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே அதை விரட்டி விரட்டி வாங்கிய ஒரு நிறுவனம் இந்த ஹேம்மர் ப்ரொடக்சன்ஸ்.

அவர்களின் முதல் கமர்சியல் ஹாரர் ஹிட் படம் The Quatermass Xperiment (1955). இந்தப்படத்தின் டைட்டிலில் Experiment என்பதற்குப் பதிலாக Xperiment என்று போட்டதற்கு அவர்கள் வாங்கிய X ரேட்டிங்கே காரணம். அதைப் பெருமைப்படுத்தும்(!!) விதமாகத்தான் டைட்டிலில் Xperiment என்று போட்டார்களாம். மான்ஸ்டர்கள் மனித உருவத்தில் இருப்பதுதான் இன்னும் அதிக திகிலைக் கொடுக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொண்ட படம் இதுதான். விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்புகிற விண்வெளிக்கலத்தில் இரண்டு பேர் மாயமாகிவிடுகின்றனர். மீதியுள்ள ஒரு ஆளும் நார்மலாக இல்லை. ஏதேதோ மாற்றங்களுக்கு உள்ளாகின்றான். பிறகு ஒரு புதிய 'உருவத்தை' அடைந்து மக்களைத் தாக்கத் தொடங்குகிறான். ஏலியன் பற்றிய நம்பிக்கைகள் அதிகமாக இருந்த அந்த காலகட்டத்தில் ஏலியன் பற்றிய படங்களுள் குறிப்பிடத்தக்க படமாக இதுவும் இருந்தது. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் ஹேம்மர் ப்ரொடக்சன்ஸ் ஹாரர் படங்களின் பக்கம் முழுமையாக சாயத்தொடங்கியது.

அதன்பிறகு யுனிவெர்சல்லின் 1930களின் ஃபேமசான ஹாரர் படங்களான Dracula, Frankenstein, The Mummy போன்ற பல படங்களை, ஹேம்மர் ப்ரொடக்சன்ஸ் ரீமேக் பண்ணி அதில் தொடர்ச்சியாக பல சீக்வல்களையும் வெளியிட்டது. அவர்களின் முதல் கோதிக் ஹாரர் ரீபூட் படம் The Curse of Frankenstein (1957). ஃப்ரான்கென்ஸ்டைன் படங்களில் முதல்முறையாக ரத்தம் தெறிப்பதை கலரில் திரையில் காண்பித்த படமும் இதுவே. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக 6 ஃப்ராங்கென்ஸ்டைன் சீக்வல்களை 1959-74க்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிட்டனர். அத்தனையிலும் கிளுகிளுப்பும், ஹாரரும் அதிகமாக இருந்தது.
 •     The Revenge of Frankenstein (1959)
 •     The Evil of Frankenstein (1964)
 •     Frankenstein Created Woman (1967)
 •     Frankenstein Must Be Destroyed (1969)
 •     The Horror of Frankenstein (1970)
 •     Frankenstein and the Monster from Hell (1974)


அதேபோல 1958ல் மிகப்பிரபலமான ஹாரர் கேரக்டரான ட்ராகுலாவையும் ரீமேக் பண்ணியது. ஃப்ராங்கைன்ஸ்டின் கேரக்டரில் நடித்த நடிகர் Peter Cushing தான் Dracula (1958) படத்திலும் முதன்மைக் கதாபாத்திரமான வேன் ஹேல்ஷிங் கேரக்டரில் நடித்தார். சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப்படத்திற்குப் பிறகு 1960-74க்கு இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக 8 ட்ராகுலா படங்களை வெளியிட்டனர்.
 •     The Brides of Dracula (1960)
 •     Dracula: Prince of Darkness (1966)
 •     Dracula Has Risen from the Grave (1968)
 •     Taste the Blood of Dracula (1969)
 •     Scars of Dracula (1970)
 •     Dracula AD 1972 (1972)
 •     The Satanic Rites of Dracula (1973)
 •     The Legend of the 7 Golden Vampires (1974)
அதேபோல 4 மம்மி படங்களும் இந்தக் காலகட்டத்தில் வெளியிடப்பட்டன.
 •     The Mummy (1959)
 •     The Curse of the Mummy's Tomb (1964)
 •     The Mummy's Shroud (1966)
 •     Blood from the Mummy's Tomb (1971)
இந்தப்படங்களித் தவிர இன்னும் ஏராளமான ஹாரர் படங்களையும், ஹாரர் அல்லாத படங்களையும் ஹேம்மர் ப்ரொடக்சன்ஸ் அளித்திருக்கிறது. ஹாரர் + பெண்கள் + கிளுகிளுப்பு + கோரம் = வெற்றிப்படம் என்ற ஃபார்முலாவை உருவாக்கியதே இந்த நிறுவனம் தான் எனலாம். இப்போது வேண்டுமானால் ஹாரர் படங்களில் கோரமும், கிளுகிளுப்பான காட்சிகளும் சர்வசாதாரணமாய் இருந்திருக்கலாம். ஆனால் ஹேய்ஸ் கோட் என்றழைக்கப்படும் (திரைப்படங்களில் இன்னின்ன காட்சிகள் வரலாம். இன்னின்ன காட்சிகள் வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் அமைப்பு. 1930-1968) சென்சார் போர்டு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்ட அந்தக்காலத்தில் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இப்படிப்பட்ட படங்களை எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களின் துணிச்சல் தான் காரணம் எனலாம்.

Virginia Wetherell, Madeline Smith, Ingrid Pitt, Janina Faye, Vera Day, Caroline Munro, Martine Beswicke, Carol Marsh, Yvonne Monlaur, Valerie Leon போன்ற நடிகைகள் ஹேம்மர் ப்ரொடக்சனின் ஹாரர் படங்களில் கதாநாயகி, வில்லி, மான்ஸ்டர்ஸ், ட்ராகுலா போன்ற முக்கிய பாத்திரங்களில் நடித்து ஹேம்மர் க்ளாமர் கேர்ள்ஸ் என்ற பட்டத்தை ரசிகர்களிடமிருந்து பெற்றனர். சாம்பிளுக்குக்கூட இங்கே சில படங்களை போட முடியாத அளவுக்கு கில்பான்சியாக இருப்பதால் கூகுளே உங்களுக்குத் துணை. (கூகுள் இமேஜில் மேற்சொன்ன நடிகைகளின் பெயர்களை சர்ச் செய்யும்போது அக்கம் பக்கம் பார்த்து கவனமாக சர்ச் செய்யவும். பிறகு ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று என்னைக் குறைசொல்லக்கூடாது. ஹிஹி) இருந்தாலும் இதை வாசிக்கும் வாசகர்கள் ஏமாந்துவிடக்கூடாது(!?) என்பதற்காக டீசண்டான ஒரு சாம்பிள்,


நடிகைகளைப்போலவே Peter Cushing, Christopher Lee போன்ற நடிகர்களும் ஹேம்மர் ப்ரொடக்சனின் ஆஸ்தான நடிகர்களாக இருந்தனர். பெரும்பாலான ஹேம்மர் ப்ரொடக்சனின் படங்களில் இவர்களே கதாநாயகர்கள், மான்ஸ்டர்கள் & வில்லன்கள். (கதாநாயகர்களின் பெயர்களைத் தெரிந்துகொண்டு என்னாகப்போகிறது என்கிறீர்களா? அதுவும் சரிதான்).

இப்படி ஹாரரில் வீறுநடை போட்ட இந்த ப்ரொடக்சன் பேனரின்  திரையுலக வாழ்க்கை 1979ல் The Lady Vanishes என்ற த்ரில்லர் படத்துடன் முடிவுக்கு வந்தது. பின்னர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு கைமாறி Beyond the Rave (2008), Let Me In (2010) போன்ற ஹாரர் படங்களுடன் மறுபடியும் தனது திரைப்பிரவேசத்தை ஆரம்பித்தது. டேனியல் ராட்க்ளிஃப் நடித்த The Woman in Black (2012) என்ற படம் சமீபத்தில் ஹேம்மர் பேனரில் வந்த படங்களுள் குறிப்பிடத்தக்க படம். மொத்தம் வெளியிடப்பட்ட 200க்கும் அதிகமான படங்களுள் 50க்கும் அதிகமான படங்கள் ஹாரர் படங்கள். ஹாரர் படங்களின் வரலாற்றைப் பற்றிப் பேசுகையில் ஹேம்மரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசமுடியாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற, ஹேம்மர் ப்ரொடக்சனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள பின்வரும் லிங்குகளைக் க்ளிக்குங்கள்.

Hammer filmography
History of Hammer
Official Site

1960களின் இறுதியில் ஹாரரில் மற்றொரு வகை புத்துயிர் பெற்றது. 28 இளைஞன் ஒருவன் படைத்த அந்த கருப்பு வெள்ளை ஹாரர் படம், பின்னாட்களில் அந்த ஹாரர் வகையில் பல படங்கள் வெளிவருவதற்குக் காரணமாய் இருந்தது. இன்றளவும் வெற்றிகரமாகத் திகழும் அந்த ஹாரர் வகைக்கு அடித்தளம் போட்டது அந்தப்படம் தான். 1930களிலேயே இந்த ஹாரர் வகை தலையெடுத்துவிட்டாலும், மாடர்ன் காலத்துக்கேற்ற வகையில் புத்துயிர் பெற்று அனைவரையும் கவர்ந்தது அந்த இளைஞனின் படம் தான். அதற்குப் பிறகு அந்த இளைஞன் அந்த ஹாரர் வகைக்கென்றே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இந்தக்காலத்திலும் அதே வகையில் தான் படங்களை எடுத்து வருகிறார்.

அந்தப்படத்தின் பெயர்....

அடுத்த பகுதி

-தொடரும்

13 comments:

 1. "Wes Craven" or "John Carpenter" ......???/

  ReplyDelete
  Replies
  1. Wise guess..!! But that's not who I'm talking about.. Wes Craven and John Carpenter both became popular in 70s and 80s.. not in 60s.. ;)

   This guy who I'm talking about is very famous for a particular horror type in which we have hundreds of, wide range of movies..!! He's the sole reason for that horror type to grow fast..!!

   Delete
  2. "George A. Romero" - Night of the Living Dead...!

   Delete
  3. ;) இன்றிரவு அடுத்த பகுதி வருகிறது.

   Delete
 2. அந்த சைகோ படம் பார்த்து இருக்கேன் நண்பா ,குப்ரிக்கா??? நீங்கள் குறிப்பிடும் இயக்குனர்

  ReplyDelete
  Replies
  1. இல்லை தல. குப்ரிக் தன்னோட வாழ்நாள்லயே ஒரே ஒரு ஹாரர் படம் தான் எடுத்திருக்கார். The Shining (1980)..
   நான் சொல்ற ஆள் வேற.. ;)

   Delete
 3. Replies
  1. இல்லை. இந்தப்பதிவிலேயே அவரைப் பத்தி சொல்லிட்டேனே..!!

   Delete
 4. No, He wrote about Polanski (Repulsion, Rosemarys baby) in his Prevuious chapter.......!

  ReplyDelete
  Replies
  1. கரெக்டா சொன்னீங்க தல.. ஆனா அது ப்ரீவியஸ் சேப்டர் இல்லை. இந்த சேப்டர் தானே.. :)

   Delete
  2. Paavam avare confuse aayitaru.....!

   Delete
 5. ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க.
  ஹிட்ச்காக் படங்களை பற்றி பேசாமல் ஹாரர் உலகை பற்றி எழுதுவது கஷ்டம்..அதுவும் சைக்கோ ஒரு மறக்க முடியாத அனுபவம்..BLACK and WHITE காலத்தின் இறுதியில் வெளிவந்த பொக்கிஷம்.அதுவரை அவ்வளவு DETAIL ஆன சைக்கோலாஜிக்கல் சம்பந்தபட்ட படம் வந்ததில்லை என்றும் சொல்லலாம்..தங்களது எழுத்துக்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *