May 3, 2014

3 - ஹாரர், திகில், பயம் : Of the Dead Series


முந்தைய பகுதி

போன பகுதியில், 1960களின் இறுதியில் ஹாரர் ஜானரின் ஒரு உட்பிரிவை மறுமலர்ச்சிப்படுத்தியது யார் ? அவர் எடுத்த அந்தப்படம் எது ? என்று கேட்டிருந்தோம்.

அந்தப்படம் : Night of the Living Dead (1968)
அந்த இயக்குனர் : George A. Romero
அந்த Genre : Zombie Horror

ஹாரரில் எனக்குப் பிடித்த ஒரு உட்பிரிவு ஸோம்பி ஹாரர். சிறுவயதில் நான் ஆங்கிலப்படங்களை விரும்பிப் பார்த்ததற்கு ஸோம்பி படங்களும் ஒரு காரணம். புத்தக வாசிப்புக்கு ஆரம்பகாலத்தில் ராஜேஷ்குமார், சுபா, பி.கே.பி. என க்ரைம் நாவல்கள் படிப்போமே அந்தமாதிரி. ஆரம்பத்திலிருந்த அந்த ஆர்வம் இப்போதும் The Walking Dead tv series வரை தொடர்கிறது. அதன் 4வது சீசன் இப்போதுதான் சிலவாரங்கள் முன்பு முடிந்தது. 4வது சீசன் மொக்கையாக இருந்தாலும் விடாமல் அதனை முழுமையாகப் பார்த்தேன். 4வது சீசனோடு முடிக்கவேண்டிய கதையை இழுத்தடித்து 5வது சீசனுக்கும் அடிகோலியிருக்கிறார்கள். அது கண்டிப்பாக இன்னும் மொக்கையாகத்தான் இருக்கப்போகிறது என்பது தெரிந்தும் அதன் வருகைக்கு ஆவலாகக் காத்திருக்கிறேன்.

சோம்பி ஹாரரின் வரலாற்றை ஆராய்ந்தால் அது 1930களிலேயே ஆரம்பித்துவிட்டது. ஆனால் அப்போதைய சோம்பி படங்கள் இப்போதைய சோம்பி படங்களை ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டவை. அப்போதைய சோம்பி படங்கள் Voodoo Zombie-களை மையமாக வைத்து எடுக்கப்பட்டன. ஆப்பிரிக்க-கரீபியத் தீவுகளில் Voodoo என்கிற ஆன்மீக சிஸ்டம் பின்பற்றப்படுகிறது. அதன்படி மந்திரவாதிகளும், சூனியக்காரர்களும் மக்களைக் கட்டுப்படுத்தி அவர்களை அடிமைகளாக்கினர். இறந்தவர்களையும் மாந்த்ரீகம் மூலம் எழுப்பி, கட்டுப்படுத்தி அவர்களையும் தாங்கள் சொன்ன வேலையைச் செய்யும் அடிமைகளாக மாற்றினர். அப்படி அடிமையாகிறவர்களின் உயிர் அவர்களுக்குச் சொந்தமில்லையாதலால் மந்திரவாதிகள் கட்டளையிடுகிற வேலையைச் செய்யவேண்டும். இறந்த அந்த சோம்பிகளின் மேல் உப்பைத் தெளித்தோ அல்லது வேறு மாந்த்ரீக பானத்தைத் தெளித்தோ அவர்கள் இறந்துவிட்டதை ஞாபகப்படுத்த(!?) வேண்டும். அப்படிச் செய்தால் அந்த சோம்பிக்கு தான் இறந்தது தெரியவந்து மீண்டும் கல்லறைக்கே சென்று படுத்துக்கொள்ளும். இதுதான் பழைய சோம்பி படங்களில் வருகிற சோம்பிக்களின் பண்புகள். மற்றபடி இன்றைய சோம்பிக்கள் போல மனிதக்கறி சாப்பிடும் வெறியோடு அன்றைய சோம்பிக்கள் அலையவில்லை. இதுபோல ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படி பழைய சோம்பி படத்திற்கு உதாரணமாக 1932ல் வெளிவந்த White Zombie என்ற முதல் சோம்பி படத்தைச் சொல்லலாம்.

அதன்பிறகு வந்த அனைத்து சோம்பி படங்களும் Voodoo Zombie வகையையே சேர்ந்தவையாக இருந்தன. இந்த நிலையில் தான் 1968ல் Night of the Living Dead படம் வெளிவந்து சோம்பி படங்களின் வரலாற்றையே புரட்டிப்போட்டது. இப்போதுள்ள மாடர்ன் சோம்பி படங்களின் அத்தனை கூறுகளும் ஆரம்பித்த மையப்புள்ளியாக அந்தப்படம் விளங்கியது.

1960களின் ஆரம்பத்தில் கல்லூரி முடித்த கையோடு சினிமா இண்டஸ்ட்ரிக்குள் காலடி எடுத்து வைத்தார் George Romero. தனது நண்பர்களான John Russo மற்றும் Russell Streiner இருவருடனும் சேர்ந்து The Latent Image என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து அதன் மூலம் டிவி விளம்பரங்களையும், குறும்படங்களையும் எடுத்து வெளியிட்டார். பிறகு சிறிதுகாலத்திற்குப் பின்பு அது போரடிக்க ஆரம்பிக்க, லோ பட்ஜெட்டில் ஒரு ஹாரர் படம் பண்ணலாம் என முடிவு செய்தனர். அந்த ஐடியாவை Hardman Associates, Inc., என்ற சினிமா கம்பெனி வைத்து நடத்திக்கொண்டிருந்த மற்ற இரு நண்பர்களான Karl Hardman மற்றும் Marilyn Eastman இருவரிடமும் கூறினர். அதற்கு ஒத்துக்கொண்டு 5 பேரும் பார்ட்னராகச் சேர்ந்து 'Image Ten' என்ற பெயரில் புதிய பேனர் ஒன்றைத் துவக்கினர்.

தங்களுடைய முதல் ஹாரர் படத்துக்கு பட்ஜெட்டாக 6000 டாலர்களை நியமித்தனர். ப்ரொடக்சன் கம்பெனியின் முதலீட்டாளர்களாக 10 பேரைத் தேடிக்கண்டுபிடித்து ஒவ்வொருவரிடமிருந்தும் 600 டாலர்கள் வீதம் வசூல் செய்து 6000 டாலர்களைத் தேற்றி ஷூட்டிங்குக்கு ரெடியானார்கள். ஆனால் அந்தப்பணம் போதாமல் மேலும் 10 முதலீட்டாளர்களைப் பிடித்து மற்றொரு 6000 டாலர்களை வசூலித்தனர். ஆனால் அதுவும் போதாமல் மேலும் வசூலித்து, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கடைசியில் மொத்தப்படத்தின் பட்ஜெட்டும் 114,000 டாலர்களைத் தொட்டது.

ஜார்ஜும் அவரது நண்பர் ஜான் ரஸ்ஸோவும் இணைந்து இந்தப்படத்துக்குக் கதை எழுதினர். முதலில் ஏலியன் வந்து பூமியில் செய்யும் அட்டகாசங்களை வைத்துக் கதை எழுதினர். பிறகு அதை மாற்றி வீட்டிலிருந்து தப்பித்து ஓடும் ஒரு சிறுவன் கல்லறையின் அருகே இறந்த மனிதர்களைத் தின்னும் ஏலியன்களைப் பார்க்கிறான் என்ற ரீதியில் கதை எழுதினர். பிறகு 'இது எல்லாமே ஏற்கனவே வந்த கதைகள் தான். எந்தமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக ஒரு கதை எழுதவேண்டும்' என யோசித்து படத்தின் இப்போதைய திரைக்கதையை எழுதினார்கள். திரைக்கதையில் பெரும்பாலான பகுதிகள் ஜார்ஜினால் எழுதப்பட்டதுதானாம். அவரது நண்பர் ரஸ்ஸோவின் பங்கு குறைவுதான் என்று இணையம் சொல்கிறது.

வெள்ளி(வீனஸ்) கிரகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு செயற்கைக்கோளிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு, எப்படியோ இறந்தவர்களின் மூளையை எழுப்பிவிடுகிறது. அதன்மூலம் இறந்து புதைக்கப்பட்டவர்கள் எல்லாம் ரத்தவெறி பிடித்த சோம்பிகளாக மாறிவிடுகின்றனர். (படத்தில் சோம்பி என்ற வார்த்தையே வருவதில்லை. ஜார்ஜ் அவர்களை ghouls என்றே குறிப்பிடுகிறார்) சோம்பிகளிடமிருந்து தப்பிக்கும் ஒரு க்ரூப் ஒரு பெரிய பண்ணைவீட்டில் ஒளிந்துகொள்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே சோம்பியால் கடிபட்ட ஒரு ஆளும் இருக்க அதனால் அவர்களுக்குள் நடக்கும் போராட்டங்களே மீதிக்கதை. இப்போது வேண்டுமானால் இந்தக்கதை பார்க்க வெகு சாதாரணமாகத் தோன்றலாம். ஏறக்குறைய 90% சோம்பி படங்களின் கதை இதுதானே. ஆனால் இது முதன்முதலாக வந்த சோம்பி கதை அதற்கு முன்பு இதுபோன்ற கதைகளே வந்ததில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இன்றைய சோம்பி படங்களில் வரும் அத்தனை விதிகளும், அம்சங்களும் உருவாக்கப்பட்ட படமும் இதுதான். சோம்பியால் கடிபட்டவர்களும் சோம்பியாக மாறுவது, சோம்பியைக் கொல்ல வேண்டுமென்றால் தலையில் சுடுவது, சோம்பி சாதாரண மனிதர்களைப் போலல்லாமல் மெதுவாக நடப்பது, மனித இறைச்சி சாப்பிட சோம்பிகள் வெறியோடு அலைவது போன்ற பெரும்பாலான சோம்பி படத்தின் பண்புகள் உருவாக்கப்பட்ட முதல் படம் இதுதான். 1968-க்குப் பிறகு வெளிவந்த அத்தனை சோம்பி படங்களுக்குமே மூல ஆதாரம் இந்தப்படம் தான். என்னதான் வித்தியாசமான சோம்பி படமாக யோசித்து எடுத்தாலும் இந்தப்படத்தின் இன்ஸ்பிரேஷன் இல்லாமல் இருக்காது.

கடைசியாக எழுதப்பட்ட கதை, மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டதாக எழுதியுள்ளார் ஜார்ஜ். அதில் முதல் பகுதிதான் Night of the Living Dead படம். மற்ற இரண்டு பகுதிகளையும் வைத்து அந்தப்படத்தின் சீக்வல்கள் Dawn of the Dead (1978) மற்றும் Day of the Dead (1985) எடுக்கப்பட்டது. இந்த சீக்வல்களைப் பற்றி பிறகு விரிவாகக் காண்போம்.


எப்படியோ பல சவால்களைக் கடந்து தனது முதல் படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தார் ஜார்ஜ். படத்திற்கு Night of the Flesh Eaters என்று பெயரும் வைத்தாயிற்று. ஆனால் படத்தை வாங்குவதற்குத்தான் ஆள் இல்லை. படம் ரொம்ப கோரமாக இருக்கிறது, படத்தின் முடிவு சரி இல்லை என பல டிஸ்ட்ரிபியூட்டர்கள் படத்தை வாங்க மறுத்துவிட்டனர். அடடா பலரிடம் பணம் வாங்கி கஷ்டப்பட்டு எடுத்த படமாச்சே தியேட்டரில் ரிலீசாகாவிட்டால் தங்கள் பணம் பணால் தான் என்பதை உணர்ந்த Image Ten நிறுவனத்தின் அனைத்து முதலீட்டாளர்களும் கவலை அடைந்தனர். கொலம்பியா, அமெரிக்கன் இண்டர்நேஷனல் பிக்சர்ஸ் போன்ற டிஸ்ட்ரிபியூட்டர்கள் படத்தை வாங்க முன்வந்தனர். ஆனால் அதற்கு முன்பு, படத்தின் கோரத்தைக் கம்மி பண்ணவேண்டும், க்ளைமாக்ஸ் சீனை மறுபடியும் ரீஷூட் செய்து முடிவை மாற்ற வேண்டும் எனப் பல கண்டிஷன்களைப் போட்டனர்.

கண்டிஷன்களைக் கேட்ட ஜார்ஜ் 'நீ ஒன்னும் என் படத்தை வாங்கவேணாம். போயிட்டு வா' எனக் கோபத்துடன் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். கஷ்டப்பட்டு கதை யோசித்து, திரைக்கதை எழுதி, அதைப் படாதபாடு பட்டு நினைத்ததை திரையில் கொண்டுவர முயற்சித்தால், திடீரென வந்து கதையை மாற்று அதை மாற்று இதை மாற்று என்று சொல்லும்போது சுயமரியாதையுள்ள எந்த இயக்குனருக்கும் அளவுகடந்த கோபம் வரும். அதுதான் நடந்தது ஜார்ஜுக்கும்.

கடைசியில் Walter Reade Organization என்ற நிறுவனம் எந்த கட்டும்(சென்சார்) இல்லாமல் படத்தை அப்படியே ரிலீஸ் செய்ய முன்வந்தது. ஆனால் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்தது. Night of the Flesh Eaters என்ற பெயரில் ஏற்கனவே ஒருபடம் வந்திருப்பதால் அந்தப்பெயரை Night of the Living Dead என்று மாற்றி ரிலீஸ் செய்தது. ஆனால் கூடவே அதனால் ஒரு பிரச்சனையும் எழுந்தது. என்னவென்று பிறகு காண்போம்.

ஒருவழியாக 1968 அக்டோபர் மாதம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியது. 1968 நவம்பர் மாதம் வரை ஹாலிவுட் படங்களுக்கு ரேட்டிங்க் கொடுக்கும் MPAA அமைப்பு அமையாதலால் படத்திற்கு எல்லா வகையான ஆடியன்சும் அனுமதிக்கப்பட்டனராம். படம் குழந்தைகள் பார்க்க உகந்தது இல்லை என்பது எந்தப் பெற்றோருக்கும் தெரியாதலால் குழந்தைகளுடன் வந்து பார்த்து பயந்தது பெரிய சர்ச்சையாகியது. திரையில் காண்பதை உண்மை என நினைக்கும் வயதுதானே குழந்தைகளுக்கு. அதனால் முதன்முதலில் அப்படிப்பட்ட, மனிதவெறி பிடித்து அலையும் சோம்பியைத் திரையில் பார்த்த குழந்தைகள் பலரும் வெகுவாகப் பயந்தனராம்.

படம் உலகளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அமெரிக்காவில் 12-15 மில்லியன் டாலர்களும், உலகளவில் 30 மில்லியன் டாலர்களும் என மொத்தம் 40-45 மில்லியன் டாலர்களை அள்ளியதென்று விக்கி கூறுகிறது. கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட ஒரு சாதாரண ஹாரர் படம், வெறும் ஒரு லட்சம் டாலர் முதல் போட்டு, கிட்டத்தட்ட 4 கோடி டாலர் அள்ளியது என்றால் அதன் பிரமாண்டமான வெற்றியை யோசித்துப் பாருங்கள்.

ஒரு புதிய கான்செப்ட் வெற்றி பெற்றால் அதை வைத்து அடுத்தடுத்து சீக்வல்கள் எடுப்பதுதானே ஹாலிவுட்டின் வழக்கம். இந்தப்படத்திற்கும் அதன் தாறுமாறான வெற்றியைப் பார்த்து வாய்பிளந்து, அடுத்த சீக்வலை எடுப்பதற்கு ஒவ்வொரு ஸ்டுடியோவும் போட்டி போட்டன. ஒரிஜினலை எழுதிய ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர் ரஸ்ஸோ இருவரும் சேர்ந்து அடுத்த பாகத்தை எழுதுவதற்கு இணைந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டிருந்தது. ஜார்ஜ் ஒருமாதிரி கதைசொல்ல, ரஸ்ஸோ வேறுமாதிரி கதை சொல்ல இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. இருவரும் பிரிவதுதான் இருவருக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் நல்லது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டனர்.

ஆனால் இருவருக்குமே தொடர்ந்து சோம்பி படங்களை எடுக்க வேண்டுமென ஆசை. Night of the living dead என்ற பெயரை விட்டுக்கொடுக்க இருவருக்குமே மனமில்லை. பிறகு ஒருவழியாக ஒப்பந்தம் போட்டு அந்தப்பெயரில் ஆளுக்குப் பாதியாகப் பிய்த்துக்கொண்டனர். ஜார்ஜ் Of the Dead என்ற பெயரையும், ரஸ்ஸோ Of the Living Dead என்ற பெயரையும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து படங்களைக் கொடுத்தனர்.

கிட்டத்தட்ட இரண்டுபேருமே சோம்பி களத்தில் நேரடிப் போட்டியாளர்களாக மாறினர். Night of the living dead படத்தின் நேரடி சீக்வலாக Dawn of the Dead (1978) படத்தை ஜார்ஜ் வெளியிட்டார். கதைக்களத்தை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டு கதையின் அரசியலை மட்டும் மாற்றி வித்தியாசம் காட்டினார். அதைப்போல ஜார்ஜின் இயக்கத்தில் வந்த மற்ற அனைத்து சோம்பி படங்களிலுமே கூட ஒரே மாதிரியான கதைக்களம் தான். அந்த சோம்பி சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும், சமூகத்தின் வெவ்வேறான தளங்களில் இயங்கும் மனிதர்கள், எவ்வாறு ரியாக்ட் செய்கிறார்கள் எனும் அரசியலை முன்வைத்தே அனைத்து சோம்பி படங்களையும் எடுத்தார். அவரின் இயக்கத்தில் வெளிவந்த மற்ற of the dead சீரிஸ் படங்களின் லிஸ்ட்,
 • Dawn of the Dead (1978) (இந்தப்படம் 2004ல் மறுபடியும் ரீமேக்கப்பட்டது)
 • Day of the Dead (1985)
 • Land of the Dead (2005)
 • Diary of the Dead (2007)
 • Survival of the Dead (2009)
இப்படி ஜார்ஜ் ஒருபக்கம் படங்களை வெளியிட, ரஸ்ஸோவும் 1985ல் The Return of the Living Dead (1985) என்ற படத்துக்குக் கதையெழுதி Dan O'Bannon என்பவரின் இயக்கத்தில் வெளியிட்டார். அதன்பிறகு பல Return of the Living Dead படங்கள் பலரின் கைவண்ணத்தில் வெளிவந்தது. ஆனால் இந்தப்படங்கள் Night of the Living Dead படத்தின் சீக்வல்களாக இல்லாமல் பகடியை முன்னிறுத்தி தனி ட்ராக்கில் ரிலீஸானவை.
 • The Return of the Living Dead (O'Bannon, 1985)
 • Return of the Living Dead Part II (Ken Wiederhorn, 1988)
 • Return of the Living Dead 3 (Brian Yuzna, 1993)
 • Return of the Living Dead: Necropolis (Ellory Elkayem, 2005)
 • Return of the Living Dead: Rave to the Grave (Ellory Elkayem, 2005)
ரஸ்ஸோ 1998ல் ஒரிஜினல் Night of the Living Dead (1968) படத்தை எடுத்து சிலபல ஒட்டிங், கட்டிங், பிட்டிங் வேலைகளைப் பார்த்து, ஒருசில புதிய காட்சிகளை ஷூட் பண்ணி அதையும் இணைத்து Night of the Living Dead 30th Anniversary Edition (1998) என்ற பெயரில் ரிலீஸ் செய்தார். அதன்பிறகு அந்தப்படத்திற்கு சீக்வலாக Children of the Living Dead (Tor Ramsey, 2001) என்ற படமும் ரிலீஸ் ஆகியது.

இதுமட்டுமில்லாமல் Night of the Living Dead படமே இரண்டுமுறை ரீமேக் செய்யப்பட்டது. ஜார்ஜ் ரொமீரோவின் பெரும்பாலான படங்களில் மேக்கப் & ஸ்பெஷல் எஃபகட்ஸ் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை பார்த்த Tom Savini-வின் இயக்கத்தில் 1990ம் ஆண்டு முதன்முதலில் ரீமேக் செய்யப்பட்டது. பிறகு 2006ல் இரண்டாவது முறையாக Night of the Living Dead 3D(2006) 3டி-யில் ரீமேக் செய்யப்பட்டது.

இதைத்தவிர ஏராளமான அங்கீகரிக்கப்படாத சீக்வல்களும், சீரிஸ்களும், பகடிப்படங்களும் ரிலீஸ் ஆனது. இதுமட்டுமில்லாமல் ஜார்ஜ் வேறுபல ஹாரர் படங்களையும் எடுத்திருக்கிறார். அதில் எனக்குப் பிடித்த ஒரு படம் The Crazies (1973). இந்தப்படம் 2010ல் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது. சோம்பி போலவே இயங்கும் மற்றொரு புத்தியிழந்த மனிதர்களைப் பற்றிய கதைதான் இதுவும். கிட்டத்தட்ட சோம்பி போன்ற குணநலன்கள் தான் என்றாலும் அதிலிருந்து நிறைய விஷயங்களில் வித்தியாசப்படும்.

இதைத்தவிர ஜார்ஜின் படங்களை இன்ஸ்பிரேஷனாக வைத்து வந்த சோம்பி படங்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில். இப்படி ஹாரரில் புதிதாக ஒரு சப்ஜானர் உருவாகவே காரணமாக இருந்த ஜார்ஜ் தனது முதல் படமான Night of the Living Dead (1968)-லிருந்து நிறைய சம்பாதித்திருப்பார் இல்லையா ? அதன் மூலம் உருவான ஏராளமான இன்ஸ்பிரேஷன் படங்களிலிருந்தும் கோடிக்கணக்கான பணம் அவருக்குக் கிடைத்திருக்கும் இல்லையா ?

ஆனால் அதுதான் இல்லை. அதன்மூலம் அவருக்கு சல்லிப்பைசா கிடைக்கவில்லை. அவருடைய முதல்படத்தில் நிகழ்ந்த ஒரு சிறிய தவறு, அவரை வாழ்நாள் முழுவதும் வருந்தச்செய்தது என்றே கூறலாம். அது அவருக்கு மட்டுமல்ல ஹாலிவுட்டில் உள்ள அனைவருக்குமே ஒரு பாடமாகவும் அமைந்தது.

அது என்னவென்றால்....

பி.கு:
1.ஜார்ஜ் இயக்கிய 6 சோம்பி படங்களின் கலெக்சனும் என்னிடம் உள்ளது. தற்போது பெங்களூரில் இருக்கும் யாருக்காவது வேண்டுமென்றால் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2.கடைசியில் சொல்லப்பட்ட சம்பவத்திற்கான க்ளூ இந்தப்பதிவிலேயே உள்ளது.

அடுத்த பகுதி

-தொடரும்

19 comments:

 1. resident evil dhan naan partha mudhal zombie
  padam.enaku pidicha zombie padangal I
  AM LEGEND,DAWN OF THE DEAD,RESIDENT
  EVIL

  ReplyDelete
  Replies
  1. நான் பார்த்த முதல் சோம்பி படமும் RESIDENT EVIL தான்.. :)
   I AM LEGEND சோம்பி படம் இல்லை. அது வேம்பையர் அல்லது க்ரியேச்சர் ரகத்துல வரும்.. அது 1950கள்லயே வந்திருச்சு.. வில் ஸ்மித் வெர்ஷன் ரீமேக் தான்..!!

   Delete
  2. I Hate Resident evil series....


   Delete
  3. அதுல முதல் பார்ட் சூப்பரா இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். மத்த சீக்வல்கள்லாம் மொக்கை..

   Delete
  4. கரெக்ட் பாஸ்... zombie மூவீஸ் வரிசைல "Night of the Living Dead" க்கு அப்புறம் வந்த "zombieland", "worldwarz" படங்கள் நல்லா இருக்கும், அதுவும் "worldwarz" படத்துல zombies லாம் வேகமா வேற ஓடும்.....! ரொம்ப அருமையா எழுதறீங்க.......வாழ்த்துக்கள்

   Delete
  5. இன்னொரு முக்கியமான படத்தை விட்டுட்டீங்களே.. எனக்கு ரொம்பப் பிடிச்ச சோம்பி படமான Shaun of the Dead.. அத குறிப்பிடாம சோம்பி படங்கள் பத்தியே பேச முடியாது...!!

   Delete
 2. Replies
  1. Thank you.. :) Next part will be posted soon..!!

   Delete
 3. Excellent collection & writing Andy..

  Raj.

  ReplyDelete
  Replies
  1. Thank you.. :) (நீங்க ஹாலிவுட் ராஜ் அண்ணனா ? இல்ல வேற ராஜ் ஆ?)

   Delete
 4. One of My all time favourite movie....

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் தான். க்ளாஸிக் ஹாரர் இல்லையா. நிறையப் பேருக்கு ஃபேவரிட்டான படமாக இருக்கும்.
   வருகைக்கு மிக்க நன்றி.. :)

   Delete
 5. அருமையா சொல்லி இருக்கீங்க ,,, ஆர்வமா படிக்க தூண்டுது நண்பா அந்த சஸ்பென்ஸ் கண்டு பிடிக்க முடியலை சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்கோ

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பகுதி ஓரிரு நாட்களில்.. :)

   Delete
 6. தலைவா நீங்க ....பெங்களூர்la எங்க இருக்கீங்க?. எப்ப வரணும்னு சொல்லுங்க. உடனே அங்க வரேன்.

  ReplyDelete
  Replies
  1. ஜி. ஃபேஸ்புக்ல இன்பாக்ஸ் வாங்கஜி.. எப்போ வேணாலும் வாங்க.. படங்களை அள்ளிக்கொண்டு போங்க.. :)

   Delete
 7. ennanga kaanama poiteenga, eppo adutha pathivu.......!

  ReplyDelete
  Replies
  1. சாரி நண்பா.. போனவாரம் பூரா வலைச்சரம்ல பதிவுகள் எழுதிட்டு இருந்ததால நம்ம தொடரைக் கண்டுக்க முடியலை. இந்த வாரம் கண்டிப்பா அடுத்த பகுதியை வெளியிட்டுடறேன்.

   உங்க தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி :)

   Delete
 8. ennanga kaanama poiteenga, eppo adutha pathivu.......!

  ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *