Oct 16, 2014

Black Mirror (2011) - TV Mini Seriesநண்பர்கள் பல வாரங்களுக்கு முன்பே இந்த டிவி தொடரைப் பார்க்கச் சொல்லி பரிந்துரைத்து இருந்தாலும், சில நாட்களுக்கு முன்பு தான் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனைப் பார்த்ததிலிருந்து கலங்கிப் போயிருக்கிறேன். இன்றைய சமூக அவலங்களை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்லும் ஓர் அருமையான தொடர் இது. ஒவ்வொரு எபிசோடு முடிந்ததும் இப்படிப்பட்ட அவலமான சமூகத்தின் ஒரு பகுதியாக நாமும் இருக்கிறோமே என்று பார்க்கிற ஒவ்வொருவரையும் வருத்தப்பட வைக்கிற மாதிரியான கதையமைப்பைக் கொண்டது. இதைப்பார்த்து முடித்த எனக்குப் பளார் பளாரென்று யாரோ செருப்பால் அடித்தது போல் இருந்தது.

ஓவர் பில்டப் எல்லாம் இல்லை. நான் பார்த்தவரையில் உண்மையிலேயே பிரில்லியண்டான ஒரு டிவி தொடர் இது. சமூக மாற்றத்திற்கான அரசியலைப் பற்றிப் பேசி, பொழுதுபோக்குக்காகப் படம் பார்க்கிற ஒவ்வொரு ரசிகனையும் கொஞ்சமாவது யோசிக்க வைக்கிற வெகுசில படைப்புகளில் இதுவும் ஒன்று. மொத்தம் 2 சீசன்கள். சீசனுக்கு 3 எபிசோடுகள் வீதம் இதுவரை மொத்தம் 6 எபிசோடுகள் வந்துள்ளன. ஒவ்வொரு எபிசோடும் ஒரு சிறுகதை போல, ஆறுமே வெவ்வேறு கதைகள். அவை எல்லாவற்றிற்கும் இடையேயான ஒரே தொடர்பு டெக்னாலஜியும் சமூக அவலமும் மட்டுமே.

டெக்னாலஜி என்பது மனிதர்களின் வசதிக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு விஷயம். நாம் செய்யும் கடினமான வேலைகளை எளிதாக்க உதவி செய்யும் ஒரு கருவியே டெக்னாலஜி. ஆனால் இப்போதிருக்கும் இந்தச் சமூகம் டெக்னாலஜியை அப்படியா பயன்படுத்துகிறது. நமக்கு உதவிசெய்ய வந்த டெக்னாலஜிக்கு இப்போது நாம் அடிமையாகிக் கிடக்கிறோம். உண்மையான சமூகம் என்பது ரத்தம், சதையுடைய உயிருள்ள மனிதர்களின் உறவால் பிணைக்கப்பட்டது. ஆனால் இப்போதிருக்கும் சமூகம் வெறும் ஃபேஸ்புக்கால் அல்லவா பிணைக்கப்பட்டிருக்கிறது.

வசதிக்காக உடுத்தும் ஆடையில் தான் நம் கலாச்சாரம் உள்ளது எனச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். மனிதனை மனிதன் மதிக்கக் கற்றுக்கொண்ட நம் உண்மையான கலாச்சாரம் எங்கே போனது ? ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும், அன்பு செலுத்த வேண்டும், உறவுகளைப் பேண வேண்டும், கூடி வாழ வேண்டும், பிறருக்கு உதவிசெய்யும் மனப்பான்மை வேண்டும் போன்ற நம் சமூகப் பண்புகள் இன்றைக்கு ஏன் எல்லோரிடமும் தேடும் நிலையில் உள்ளது. 15 நிமிடத்திற்கும் மேலாக ஒரு மனிதன் புலியின் கூண்டில் மாட்டிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது அனைவரும் வீடியோ எடுப்பதில் தானே ஆர்வமாக இருந்தோம், அப்போது நம் கலாச்சாரத்தின் ஆணிவேரான மனிதாபிமானம் எங்கே போனது? தொலைக்காட்சிகளிலும் சோசியல் நெட்வொர்க்களிலும் அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அந்தப் பரிதாபத்தையும் காசாக்குவதில் தானே நாம் ஆர்வமாக இருந்தோம்.

பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் பெயர் கூடத் தெரியாது. வீட்டில் இருக்கும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு வெளியில் விளையாடக்கூட அனுப்புவது கிடையாது. பிள்ளைகள் ப்ளே ஸ்டேஷனில் விளையாடுவதைத்தான் பெருமையாகக் கருதுகிறோம். யாருக்காவது உதவி செய்தாலும் அதில் நமக்கென்ன ஆதாயம் என்பதைத்தான் முதலில் சிந்திக்கிறோம். மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை விட ட்விட்டர், யூட்யூப், ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிப்பதில் தான் அதிக மகிழ்ச்சி கொள்கிறோம். உறவினர்கள் வீட்டுக்கு வருவதைத் தொல்லையாகக் கருதுகிறோம். மனைவியிடம் கூட மனம் விட்டுப் பேசுவதில் தயக்கம் கொள்கிறோம். வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதைத் தேவையற்ற சுமையாகக் கருதுகிறோம். நண்பர்களைப் பார்த்தால் கண்டும் காணாமலே ஓடி ஒளிந்துகொள்கிறோம். டிவி, செல்போன், லேப்டாப் தான் நம்முடைய ஒட்டுமொத்த பொழுதுபோக்காக இருக்கிறது. உண்மையில் நாம் எங்கே தான் சென்றுகொண்டிருக்கிறோம் ? இப்படியே இருந்து என்னத்தைத்தான் சாதிக்கப் போகிறோம் ? நம்முடைய வாழ்க்கைமுறை அதலபாதாளத்திற்குச் செல்வது நமக்குக் கொஞ்சமாவது புரிகிறதா ? அல்லது புரிந்துகொள்ளத்தான் முயற்சிகள் எடுக்கிறோமா ?

இதையெல்லாம் நமக்குத் தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்து சமூக மாற்றத்திற்கான புரட்சிவிதையைத் தூவுகிறது இந்தத் தொடர். இந்தத் தொடரின் முதல் எபிசோடு கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும் அது சொல்லவரும் கருத்து மிகப்பெரியது. புலியிடம் மாட்டிக்கொண்ட சிறுவனின் வீடியோவிற்கும் இந்த எபிசோடிற்குமே கூட ஒரு பெரிய தொடர்பு உண்டு. முதல் எபிசோடின் முதல் ஐந்து நிமிடங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

ஓர் அதிகாலை நேரத்தில், இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கு அரசாங்க அதிகாரிகளிடமிருந்து ஒரு போன்கால் வருகிறது. முக்கியமான வீடியோ ஒன்று யூட்யூப்பில் தரவேற்றப்பட்டிருப்பதாகவும் அதில் பிரதமர் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். உடனே கிளம்பிச் சென்று அதிகாரிகளுடன் சேர்ந்து அந்த வீடியோவைப் பார்க்கிறார். அந்த வீடியோவில் இங்கிலாந்து நாட்டின் இளவரசியை யாரோ கடத்தி வைத்துக் கட்டிப்போட்டிருப்பது தெரிகிறது. இளவரசியைக் கொல்லப்போவதாக இளவரசியை வைத்தே சொல்லவைக்கிறார்கள், இளவரசியைக் கொல்லாமல் உயிரோடு விடவேண்டுமென்றால் அதற்கு அவர்கள் வைக்கும் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.
அந்த வேண்டுகோள் என்னவென்றால், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் சாயங்காலம் 4 மணிக்கு அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நேரடியாகத் தோன்றி, ஒரு பன்றியுடன் உறவுகொள்ள வேண்டும். என்னாது ???? ஆம். நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். அதுதான் கடத்தியவர்களின் வேண்டுகோள் அல்லது மிரட்டல். அதைச் செய்யாவிட்டால் இளவரசி கொல்லப்படுவாள். இதைக்கேட்டு அதிர்ச்சியாகிறார் பிரதமர். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

விறுவிறுப்பாகச் செல்லும் இந்த எபிசோடின் முடிவில் அந்த வேண்டுகோளுக்கான காரணம் என்னவென்று தெரியவரும்போது தான், மேலே சொன்னேனே நெற்றிப்பொட்டில் அடித்தமாதிரி என்று, அப்படி நம்மை யோசிக்க வைக்கும். மொத்தம் 6 எபிசோடுகள். ஒவ்வொன்றும் 45 நிமிடங்கள். கண்டிப்பாகத் தவறவிடக்கூடாத ஒரு தொடர் இது.

ஒவ்வொரு எபிசோடுமே ஏதாவது ஒரு விதத்தில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். நம் மனதைப் பாதிக்கும் வகையில் இருக்கும். அதற்குக் காரணம் இப்படிப்பட்ட ஓர் அவலமான வாழ்க்கை முறையைத்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற சுயபுரிதல் தான். அதைப் புரியவைக்கும் கருவியாக இந்தத்தொடர் இருக்கும். ஒருசில எபிசோடுகள் கொஞ்சம் அட்வான்ஸ்டாக எதிர்காலத்தில் நடப்பது போலக் காட்டப்பட்டிருந்தாலும் அது சொல்லவரும் கருத்து நம்முடைய இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும்.

மற்றொரு சிறப்பம்சம், இந்தத்தொடரின் மையக்கருத்தை அப்படியே பிரதிபலிக்கும் இதனுடைய டைட்டில். Black Mirror. கருப்புக்கண்ணாடி எங்கெல்லாம் இருக்கும் ? செல்போன், லேப்டாப், டிவி இன்னும் பல டிஜிட்டல் கருவிகளின் மானிட்டர்களில் இருக்கும். இதுபோன்ற கருவிகளின் பிடியில் நம் ஒட்டுமொத்த சமூகமும் சிக்கிக்கொண்டு தவிப்பதைத்தான் டைட்டில் பிரதிபலிக்கிறது. டைட்டில் பற்றி இந்தத் தொடரை உருவாக்கிய சார்லி ப்ரூக்கர் இதைத்தான் சொல்லியிருக்கிறார். "The 'black mirror' of the title is the one you'll find on every wall, on every desk, in the palm of every hand: the cold, shiny screen of a TV, a monitor, a smartphone".

இதுபோன்ற ஒரு தொடரை உருவாக்குவதற்குத் தில் வேண்டும். அப்படித் தில்லுடன் அருமையாக எழுதி உருவாக்கிய இந்தத்தொடரின் க்ரியேட்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிற, புரட்சியைத் தூண்டுகிற இதுபோன்ற ஒரு நல்ல தொடர், பிரபல தொலைக்காட்சியான பி.பி.சி.யில் வரவில்லை. அரசியல் பேசுகிற இப்படி ஒரு தொடர் சேனல் 4-லிருந்து வந்ததில் ஆச்சரியமே இல்லை. இப்போதுவரை 2 சீசன்கள் மட்டுமே வந்துள்ளன. அடுத்த சீசன் வந்தால், அதைப்பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.

தற்போது இந்த வருடம் கிறிஸ்துமஸ் லீவுக்கு ஏதோ ஸ்பெஷல் எபிசோடு வெளிவருவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. அதேபோல இந்தத்தொடரின் "The Entire History of You" என்ற எபிசோடைப் பார்த்த Robert Downey, Jr. (நம்ம அயர்ன் மேனே தான்) அதன் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு அதைப்படமாக்குவதற்கான உரிமையை வாங்கியுள்ளார். வார்னர் பிரதர்சும், அவரது சொந்த ப்ரொடக்சன் கம்பெனியும் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கப் போகின்றன.

சிறந்த டிவி மினிதொடருக்கான எம்மி விருதையும் இந்தத் தொடர் பெற்றுள்ளது. இதற்கு மேல் தொடரின் கதையைப் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் சொல்லப் போவதில்லை. அந்த அனுபவத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். பார்த்துவிட்டுத் தயவுசெய்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Black Mirror - A television anthology series that shows the dark side of life and technology.

8 comments:

 1. மிக அருமையாக எழுதி உள்ளீர்கள் நண்பா , படிக்கும் போதே உணர முடிகிறது நம்முடைய அவலங்களை. யோசிக்க வைக்கின்றது. அப்படியே இதை எங்கே தரவிறக்கம் செய்வது என்று கூறிவிடுங்கள் நண்பா

  ReplyDelete
  Replies
  1. நன்றி தல. டாரண்ட் லிங்க் ஆல்ரெடி ஃபேஸ்புக்ல இன்பாக்ஸ் பண்ணிட்டேன். கண்டிப்பா பாருங்க.

   Delete
 2. அவசியம் பார்க்கவேண்டும். டவுன்லோட் பண்ணி சீட்ஸ் போதாமல் நிறுத்தி வைத்திருந்தேன். விரைவில் பார்த்துவிட்டு என் கருத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அவசியம் பாருங்கள். உங்கள் கருத்து எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். :)

   Delete
 3. இன்ட்ரோ அற்புதமாக இருக்கிறது... பட், திரைப்படங்களையே பார்க்கமுடிவதில்லை... இதில் எங்கிருந்து சீரீஸ் எல்லாம் டவுன்லோட் செய்து பார்ப்பது... ஹ்ம்ம்...

  அயர்ன் மேன் இதை படமா எடுக்கட்டும்... அப்போ பார்த்துக்கலாம்'ன்னு தோணுது...

  ReplyDelete
  Replies
  1. திரைப்படங்களை விட சீரிஸ் ஒருபடி மேல் என்றே சொல்வேன். ஒரே ஒரு எபிசோடு மட்டுமாவது ட்ரை பண்ணுங்க. அதுக்கப்புறமும் பிடிக்கலைன்னா விட்டிருங்க. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய சீரிஸ் இது.

   Delete
 4. அருமையான பதிவு...
  இதனுடைய torrent link தேடி கிடைக்கவில்லலை.. பகிர முடியுமா??

  ReplyDelete
  Replies
  1. இங்க லிங்க் போட முடியாது நண்பா... ஃபேஸ்புக்ல மெஸேஜ் பண்ணுங்க.. டாப்ல மெனுபாக்ஸ் கார்னர்ல என் ஃபேஸ்புக் லிங்க் இருக்கு..!!

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *