Oct 3, 2014

மெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்றுஅட்டகத்தி படத்தில் சென்னைப் புறநகர்ப்பகுதி மக்களின் வாழ்வியலைப் படமாக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் இரண்டாவது படமான மெட்ராஸ் படத்தைக் கண்டிப்பாகத் தியேட்டரில் சென்று தான் பார்க்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தேன். அதேபோல சென்ற வாரம் சென்று பார்த்தாகிவிட்டது. கடைசியாகப் பார்த்த படங்களில் ஜிகர்தண்டா தான் மனசுக்கு நிறைவான படமாக இருந்தது. அதற்குப்பிறகு இடையில் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" படத்தை வெகுவாக ரசித்துப்பார்த்தேன். அதற்குப் பிறகு இப்போது தான் மனதுக்கு நிறைவான நல்ல படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது.

எல்லோருக்கும் வணக்கம் என்று சாதாரணமாக ஆரம்பித்து, இரண்டு தலைமுறையாக நடக்கும் கோஷ்டி மோதலை முதல் 10 நிமிடத்திலேயே வாய்ஸ் ஓவரில் சொல்லிமுடித்து படம் இப்படித்தான் போகப்போகிறது என்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு முன்னறிவிப்பை செய்துவிடுகிறார் இயக்குனர். ஆனால் அந்த 10 நிமிடத்திலேயே அனைத்து கேரக்டர்களையும் அறிமுகம் செய்து வைத்து அவர்கள் எப்படிப்பட்ட கேரக்டர்கள் என்பதையும் ஆளுக்கொரு வசனம் கொடுத்து பேசவைத்து நமக்கு புரிய வைத்து விடுகிறார்.

1990ல் மெட்ராஸ் வியாசர்பாடி பகுதியில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் கிருஷ்ணப்பர் மற்றும் கருணாகரன். இரண்டு பேரும் ஒரு பிரச்சனையில் சண்டை போட்டு ஆளுக்கொரு கட்சியாகப் பிரிந்துவிட, அதற்கப்புறம் இரண்டு பேருக்குமிடையில் யார் அதிகாரத்தைப் பிடிப்பது என்று போட்டி, விரோதம் உண்டாகிவிடுகிறது. அவர்கள் இருக்கும் ஏரியாவை ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்துக்கொண்டாலும் ஹவுசிங் போர்டில் இருக்கும் ஒரு சுவரைப் பிடிப்பதில் மட்டும் இருவருக்கும் இடையில் சண்டை உருவாகிறது.

அதில் அந்த ஏரியாவைச் சேர்ந்த செங்கன் என்பவனை கிருஷ்ணப்பர் மகன் கண்ணன் கொலை செய்துவிட, அதற்குப் பதிலுக்கு கருணாகரன், மாங்கா என்பவனைத் தூண்டிவிட்டு கிருஷ்ணப்பரைக் கொலை செய்ய வைத்து விடுகிறான். பதிலுக்கு மாங்காவையும் அவனது பையனையும் கொலை செய்கிறான் கண்ணன். அதற்குப் பிறகு இரண்டு பக்கங்களிலும் சிலபல கொலைகள் நடக்கின்றன. ஒரு கட்டத்தில் கண்ணனுக்கு வடசென்னை மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்க, அதன் மூலம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹவுசிங் போர்டு சுவரை எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் கைப்பற்றி அதில் தனது அப்பா கிருஷ்ணப்பர் படத்தை வரைந்து வைக்கிறான்.

சுவர் பறிபோய்விட்டதே, தோற்றுவிட்டோமே என்கிற ஏக்கத்திலேயே கருணாகரன் இறந்துவிட, அவரது பையன் மாரி ஹவுசிங் போர்டு தலைவனாகிறான். கட்சியிலும் பொறுப்பைப் பிடிக்கிறான். அதே சமயம் சுவர் முன்னாடி ஒருசில விபத்துக்களின் மூலம் உயிர்ப்பலி நடக்க, எல்லோரும் அந்த சுவரைப் பார்த்து காவு வாங்குற சுவர் என்று பயப்பட ஆரம்பிக்கின்றனர். அதைவைத்தே தன் அப்பா படத்தை அழியாமல் காத்துக்கொள்கிறான் கண்ணன். ஆனால் எப்படியாவது அந்த சுவரைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று வெறியோடு காத்துக்கொண்டிருக்கிறான் மாரி. இப்படி இரண்டாவது தலைமுறையிலும் தொடரும் இந்த விரோதத்தினால், அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் போட்டியில் என்ன நடக்கிறது என்பதே ரத்தமும் சதையுமான மீதிப்படம். 

முதல் 5 நிமிடங்களில் இந்தக்கதையைச் சொல்லிவிட்டு "சென்னை வடசென்னை" என்ற அட்டகாசமான பாடலுடன் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கிறது படம். பாடலின் இடையிலேயே தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி விடுகிறார் இயக்குனர். "எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்கதானே அட்ரசு" என்ற வெறித்தனமான பாடல் வரிகளின் பிண்ணனியில் வெள்ளை வேஷ்டி சட்டையுடன், மீசை தாடியோடு சிரித்த முகமாக அறிமுகமாகும் 'அன்பு' கேரக்டருடன், பார்த்த மாத்திரத்திலேயே ஒன்றிவிட முடிகிறது. மாரி கும்பலைச் சேர்ந்த அன்பு, 

"அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுறதுல தான் நம்ம மக்களோட விடுதலை. அந்த அதிகாரத்தை நான் புடிச்சே தீருவேன்"

என்று முழங்கும் அந்த முதல் வசனத்திலேயே அந்த கேரக்டர் எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. அதே போல,

"யாருக்குமே பயப்படாத போலிஸ்காரன் நம்மளைப் பாத்து பயப்படறான்னா ஏன்..? அரசியல்... அரசியல் பலம்"

என்று சொல்லிக்கொண்டே அறிமுகமாகும் மாரி,

"நான் பெரிய ஐட்டங்காரன் ஆவனும். என்னைப் பாத்தாலே எல்லாரும் அலறனும். நான்தான் எல்லாம்"

என்று அறிமுகமாகும் கண்ணன் கும்பலைச் சேர்ந்த விஜி, என்ன சொல்கிறார் என்றே புரியாதபடி படபடவென்று பேசி அறிமுகமாகும் ஹவுசிங் போர்டைச் சேர்ந்த ஜானி, நடனமாடிக்கொண்டே அறிமுகமாகும் ப்ளூ பாய்ஸ் டான்ஸ் குழு, கடைசியாக,

"லைஃபே ஷார்ட் மச்சி. இந்த நாளு.. இந்த நிமிஷம்.. ஜாலியா எஞ்சாய் பண்ணனும். அவ்ளோ தான் மச்சி"

என்று அறிமுகமாகும் அன்புவின் நண்பன் காளி என ஒவ்வொரு கேரக்டரையும் முதல் அறிமுகத்திலேயே நமக்கு நன்றாக விளங்கவைத்து விடுகிறார் இயக்குனர். கூடவே அந்தப்பாடலின் ஊடாகவே வடசென்னையைச் சுற்றிக் காண்பிக்கிறார். அந்த ஏரியாவின் முக்கிய அம்சங்களான கால்பந்து, குத்துச்சண்டை, கேரம் போர்டு, கபடி, குழாயடி சண்டைகள், ஒண்டுக்குடித்தன ஹவுசிங் போர்டு வீடுகள், நெரிசலான சந்துகள், கானா பாடல், பேண்டு இசை, குத்து டான்ஸ், ரவுடியிசம், போஸ்டர், தெருக்கூட்டங்கள் இன்னும் பலப்பல விஷயங்களைக் காட்டி நம்மை வடசென்னைக்கே அழைத்துச் சென்று கதை சொல்ல ஆரம்பிக்கிறார் இயக்குனர். இப்படி முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே கதைக்குள் மூழ்கி அந்த கதைக்களத்திற்கே நாம் சென்றுவிட்டபடியான அனுபவத்தைத் தந்துவிடுகிறார். பிறகு நடப்பதெல்லாம் ஏதோ நிஜத்திலேயே நம் கண் முன்னாடி நடப்பது போல அவ்வளவு தத்ரூபமாக காட்சிப்படுத்தி, இயக்குனர் தன் கட்டுப்பாட்டிலேயே நம்மை வைத்திருக்கிறார்.

இப்படி ஒரு அட்டகாசமான அனுபத்தைக் கொடுத்த ஓபனிங்கை சமீபத்தில் வேறு எந்தப்படத்திலும் பார்க்கவில்லை. அதிலேயே ஒரு இயக்குனராக ரஞ்சித் ஜெயித்துவிட்டார் என்றே கூற வேண்டும். அதற்கப்புறம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் நம் வாழ்வில் நடப்பதுபோல நம்மை நம்பவைத்து ஒவ்வொரு காட்சியிலும் நம் உணர்வுகளோடு விளையாடுகிறார். கிட்டத்தட்ட கார்த்தி கேரக்டர் அனுபவிக்கும் ஒவ்வொரு உணர்வையும் நம்மையும் உணரவைத்து விடுகிறார். படத்தின் கடைசியில், அந்த துரோகத்தைப் பற்றி அறிந்தவுடன் கார்த்தி கேரக்டருக்கு எழும் அடங்கமாட்டா கோவம் நமக்கும் ஏற்படுவது இதனால் தான். அந்த சுவரை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற வெறியைக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள்ளும் உணரவைத்துவிடுவார்.

படம் பார்க்கும் ஆடியன்சின் மனதை எப்போது ஒரு இயக்குனர் தன்வசப்படுத்துகிறாரோ, தான் நினைத்தபடியெல்லாம் ஆடியன்சை ஃபீல் பண்ணவைக்கிறாரோ அப்போதே அவர் ஜெயித்துவிட்டார் என்றே அர்த்தம். அந்தக் கைவண்ணம் பெரும்பாலும் பல படங்களை இயக்கிய பிறகே ஒரு இயக்குனருக்கு அமையப்பெறும். ஆனால் பா.ரஞ்சித் அதைத் தனது இரண்டாவது படத்திலேயே அமையப் பெற்றிருக்கிறார். அதனால் இன்னும் தரமான படங்களை இவரிடமிருந்து நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

படத்தின் கதாபாத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அன்பு-மேரி ஜோடி தான். படத்தின் முதல் பாதி முழுக்க நம்மைக் கவர்வது இவர்கள் தான். ஒருசில சமயம் ஒருவேளை இவர்கள் தான் ஹீரோ-ஹீரோயினோ என்று சந்தேகப்படும் அளவுக்கு நம்மை ரசிக்கவைத்திருக்கிறார்கள். "குத்துக்கல்லு மாதிரி உக்காந்திருந்தா தலைவனுக்குத்தான் முத்தம் கொடுப்பாங்க" என்று காதலுடன் மேரி சொல்ல, அதை உடனே உணர்ந்துகொண்டு அன்பு அவளை அள்ளியணைத்து முத்தமிட அந்தக்காட்சி கவிதையோ கவிதை. இப்படி ஒருசில காட்சிகளில் வந்தாலும் இவர்களின் காதல், ஏனோதானோ என்று காரணமே இல்லாமல் வரும் காளி-கலையரசி காதலை விட மேலானதாக நமக்குத் தோன்றுகிறது.

அதேபோல குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ஜானி. சற்றே மனநிலை பிறழ்ந்த அந்தக் கதாபாத்திரத்தை மிக அசால்ட்டாகச் செய்திருக்கிறார் அந்த நடிகர். யாரிவர் என்று எல்லோரையும் ஒரு நிமிடம் புருவம் தூக்கிப் பார்க்க வைத்துவிட்டார். ஒவ்வொரு ஏரியாவிலும் இவரைப் போன்ற ஒருவர் கண்டிப்பாக இருப்பார். நம் வாழ்வில் ஒருமுறையாவது இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தைச் சந்தித்திருப்போம். அதையே படத்திலும் பார்க்கும்போது படத்தின் யதார்த்தம் அதிகரிக்கிறது. பெரும்பாலான நேரங்களிம் ஜானி பேசுவது என்னவென்றே சுத்தமாகப் புரியவில்லை. புரியவேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் படம் முழுவதும் வடசென்னையின் அடையாளமாக அந்தக்கதாபாத்திரமும் கூடவே வருகிறது. மெட்ராஸ் படத்தை சில வருடங்களுக்குப் பிறகு நினைத்துப் பார்த்தால், தவறாமல் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஜானி கதாபாத்திரமும் ஒன்றாக இருக்கும். அந்தளவுக்கு தன் வசன உச்சரிப்பிலும், பாடி லாங்க்வேஜிலும் பிரித்திருக்கிறார் அந்த நடிகர்.

அதேபோல காளியின் அம்மாவாக நடித்திருக்கும் 'என்னுயிர்த்தோழன்' ரமா, வெத்தலை பாக்கு போட எப்போதும் காசு கேக்கும் காளியின் பாட்டி, ஆரத்தி எடுத்துவிட்டு காசு கொடுக்கும்போது வேணாம் வேணாம் என்று சொல்லிக்கொண்டே காசை வாங்கிக்கொள்ளும் அந்தப்பாட்டி, பெருமாள், விஜி, மாரி என்று ஒவ்வொரு கேரக்டரும் நம் மனதிலேயே நிற்கிற அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கிறது. கலையரசியாக நடித்திருக்கும் கேத்ரீன் தெரசா சுமாரான அழகுடன் இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் மனதை அள்ளுகிறார். "நீதான் வேணும். கல்யாணம் பண்ணிக்கிறியா" என்று கோவம் கலந்த காதலுடன் சொல்லும்போதும், "உனக்கு அன்பு முக்கியமா நான் முக்கியமா" என்று கேக்கும்போதும், கையை வாயருகில் வைத்து மறைத்துக்கொண்டு ஃப்ளையிங் கிஸ் கொடுக்கும்போதும் அப்படியே மிளிர்கிறார்.

ஒவ்வொரு கேரக்டருடனும் இப்படி வெகு எளிதாக நம்மால் ஒன்றிவிட முடிகிறது ஒரே ஒரு கேரக்டரைத் தவிர. அது கார்த்தி. அமுல் பேபி மாதிரி இருக்கும் அவரை வடசென்னையின் ஒரு லோக்கல் ஆளாகக் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்தப்படத்தில் கார்த்திக்குப் பதிலாக தனுஷ் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எனக்கு தோணுமளவுக்கு உறுத்தலாக இருந்தது. (அப்படி மட்டும் தனுஷ் நடித்திருந்தால் பட்டயைக் கிளப்பியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை). தோற்றத்தில் தெரிகிற உறுத்தலைத் தனது நடிப்பினாலும், வசன உச்சரிப்பாலும் மாற்ற முயற்சித்திருக்கிறார். படத்தின் கதை பரபரவென்று பட்டாசாய் பறப்பதால் அந்த உறுத்தல் சிறிதாகி அவரைக் காப்பாற்றியிருக்கிறது. நடிப்பிலும் ஒருபடி முன்னேறியிருக்கிறார்.

படத்தில் எனக்கு மிகப்பிடித்த மற்றொரு விஷயம் இசையும் ஒளிப்பதிவும். அந்த சுவரையும் ஒரு கேரக்டராகக் காட்டுமளவுக்கு சிறந்த ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.முரளி. வடசென்னையின் தெருக்களை அப்படியே நம் கண் முன்னால் கொண்டுவந்து படத்தின் யதார்த்தத்தை அதிகப்படுத்தியதில் ஒளிப்பதிவின் பங்கு தான் அதிகம். சுவரின் முன்னால் கார்த்தி நிற்க, ஸ்லோமோஷனில் கேமராவைப் பின்னுக்குக் கொண்டு போகும்போது, சுவரில் அவரது நிழல் பெரிதாகிக்கொண்டே போகும் அந்தக்காட்சி ஒளிப்பதிவாளரின் திறமைக்கு ஒரு சான்று. அதேபோல கார்த்தி ஒரு இடத்தில் ஷாக் ஆகி நிற்பதைக் காண்பிப்பதற்கு Dolly Zoom Shot-இல் எடுத்திருப்பார். அப்படி என்றால் என்ன என்பதற்கு இந்த யூட்யூப் லிங்கைக் கிளிக் செய்து பார்க்கலாம்.

ஒரு ஆப்ஜெக்டை ஃபோகஸ் செய்தபிறகு, டாலியில் கேமராவை வைத்து பின்னாடியே செல்லவேண்டும் அதே சமயம் கேமராவில் ஸூம் செய்ய வேண்டும். அப்படிச்செய்தால் இந்த எஃபக்ட் கிடைக்கும். இந்தப்படத்தில் இரண்டு முறை அந்தமாதிரி காட்சி வருகிறது. முதல் முறை கார்த்தி ஷாக் ஆகி நிற்கும் போது வந்தபோது அந்த எஃபக்ட் நன்றாக இருந்தது. மறுபடியும் இன்னொரு இடத்தில் வந்தது. அதைத் தவிர்த்திருக்கலாம்.

இசை. சந்தோஷ் நாராயணன் பிரித்து விளையாடியிருக்கும் மற்றொரு படம். வெர்சடைலான இசையமைப்பாளர் என்று இப்போதைய நிலையில் யாரையாவது சொல்ல வேண்டுமென்றால் அது இவர் தான். மனிதர் ஒவ்வொரு பாடலையும் செதுக்கியிருக்கிறார். ஒவ்வொரு பாடலும் படத்தின் சூழலுக்கேற்ப அமைந்து படத்தின் கதையோட்டத்தையும், அந்த ஃபீலையும் அப்படியே ஒருபடி உயர்த்துகிறது. சென்னை வடசென்னை பாடல் ஆல்ரெடி பிரபலமடைந்து விட்டது. அதற்கப்புறம் வரும் "காகிதக்கப்பல்", "ஆகாயம் தீப்பிடிச்சா", சாவு வீட்டில் கானா பாலா குரலில் ஒலிக்கும் "இறந்திடவா நீ பிறந்தாய்" என அனைத்துப் பாடல்களுமே ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் ஏதோ ஒரு பாடல் மட்டுமே படத்திற்கு பிரேக் போடுவதாய் எனக்குத் தெரிந்தது. பாடல்கள் மட்டுமில்லாமல், பிண்ணனி இசையிலும் படத்தை பலமடங்கு உயர்த்தியிருக்கிறார் சந்தோஷ். ஜிகர்தண்டாவில் படத்தின் உயிர்நாடியாய் பிண்ணனி இசை அமைந்தது போல இந்தப்படத்திலும் மிக முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி ஒரு வெர்சடைலான இசையமைப்பாளர் நமக்குக் கிடைத்தது மிகப்பெரிய கிஃப்ட் தான்.

படத்தில் குறைகளென்று பார்த்தால் அவை மிக மிகக் குறைவே. முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி வேகமாகச் செல்வதில்லை. இரண்டாம் பாதியின் இடையில் ஒரு 10 நிமிடத்திற்கு படம் போரடிக்கிறது. ரொம்பவே நீளமான படம் என்று ஓரிரு குறைகள் இருந்தாலும் அவை பெரிதாகத் தெரிவதில்லை. அதேபோல படத்தில் வரும் அந்த முக்கிய ட்விஸ்ட் முன்பே தெரிந்துவிடுகிறது. ஆனால் அதுவும் கூட பெரிய குறையாய் தெரியவில்லை. இயக்குனரும் அந்த ட்விஸ்டைப் பெரிதாக அதிர்ச்சி தரும் காட்சியாகக் காண்பிக்காமல் அந்த துரோகம் எவ்வளவு பெரியது என்பதைக் காண்பிப்பதாகவே தெரிகிறது. அதனால் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

முடிவாக, அதிகாரம் என்ற பெயரில் சாமான்ய மக்களை வைத்து நடக்கும் அரசியலைப் புட்டுப் புட்டு வைத்ததிற்காகவும், "மனுசனை மனுசன் மதிக்கிறதுக்கும் சமூகப்பிரச்சினையை அணுகறதுக்கும் இங்கே வெறும் கல்வி மட்டும் பத்தாது கல்வியோட சேர்ந்த சமூக அரசியலும் பகுத்தறியும் தன்மையும் தேவை" என்கிற வலுவான கருத்தை முன்வைத்ததற்காகவும், வன்முறையும் பழிவாங்கும் குணமும் தவறு என்று வன்முறைக்கெதிராகக் கொடி பிடித்ததற்காகவுமே படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். இது எங்கள் தமிழ் சினிமா என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளக்கூடிய படங்களுள் ஒன்றாக இந்தப்படமும் அமைகிறது.

மெட்ராஸ் - அதிகாரத்தின் பெயரில் நடக்கும் அரசியலைத் தோலுரிக்கும் படைப்பு. வடசென்னையின் அடையாளம்.

16 comments:

 1. மிக்க நன்றி சகோ

  பாத்திரங்களை எவ்வளவுக்கெவ்வளவு ரசித்திருக்கிறீர்கள் என்பது ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  WWW.mathisutha.COM

  ReplyDelete
 2. மிக அற்புதமாக படத்தை உள் வாங்கி எழுதி உள்ளீர்கள்.
  இது போன்ற ஒரு படைப்பைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. படம் அந்தளவுக்கு உள்ளிழுத்து விட்டது. வருகைக்கு மிக்க நன்றி ஐயா :)

   Delete
 3. ஒரே அடியாக கார்த்தியை மட்டம் தட்டாதீர்கள்,கார்த்தியின் நடிப்பு உங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.வடசென்னை பையானாகவே மாறி பட்டையை கிளப்பி இருக்கிறார் கார்த்தி.தடாலென உணர்சி வசபடுவதும் பொளேரென கன்னத்தில் விடுவதும்,வேனின் பின்னால் இருந்து திடீரென பொங்கி எழுந்து சம்மட்டியால் ஓங்கி கழுத்தில் விடுவதும் என கார்த்தியின் நடிப்பு ருத்ரதாண்டவம்,ஆக கார்த்திக்கு நிச்சயம் ஒரு அவார்டு காத்திருக்கு இந்த படத்துல wait and see. சும்மா உங்களுக்கு ஒரு நடிகர் பிடிக்கலன்னா ஒதுங்கி போய் நின்னு வேடிக்கை பாருங்க.உண்மையான நடுநிலையாளராக இருந்தால் மட்டும் விமர்சனம் பண்ண வாருங்கள் சகோ.

  ReplyDelete
 4. to justify the karthi's character, director shown him as IT guy from north madras. So we may not consider him as just local boy. he suited perfectly to that character.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்குமில்லையா. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கு கார்த்தியை லோக்கல் பையனாக ஏற்றுக்கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் போகப்போக கதையோட்டத்தில் அது சரியாகிவிட்டது என்பதைத்தான் நான் சொல்கிறேன்

   Delete
 5. The best thing in the movie, it dint deviate from the main plot. If there is a love scene it is just happening within a limit without taking the movie to some other plot. It happened in maryaan .
  After seeing this movie I too felt that movie will still be good if vijay sethupathy is in lead.

  ReplyDelete
  Replies
  1. உனக்கு விஜய் சேதுபதியா மச்சி ? சூப்பர். ஆனா இந்தப்படத்துல ஏதோ ஒரு புதுமுகம் நடிச்சிருந்தா கூட படம் நல்லா இருந்துருக்கும். ஏன்னா படம் அப்படி. ;)

   Delete
 6. மிக நீளமான விரிவான அலசல்... நல்ல இருக்கு... :)

  ReplyDelete
 7. நல்ல தகவல். தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிக்கு நன்றி :P :)

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *