Dec 27, 2017

Jim & Andy: The Great Beyond (2017)ஜிம் கேரியைத் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. The Mask, Liar Liar, The Truman Show, Bruce Almighty, Eternal Sunshine of the Spotless Mind னு அவரோட படங்களைப் பார்த்து ரசிக்காத சினிமா ரசிகனே இருக்க முடியாது. உடல்மொழியின் மூலம் காமெடி பண்ணும் ஆக்டர்களில் ஒருவர். விவேக் வந்தா டயலாக் பேசினா தான் சிரிப்பு வரும். ஆனா வடிவேலு வந்து நின்னாலே போதும். சிரிப்பு வரும்னு சொல்லுவாங்களே. அதைப்போல ஜிம் கேரி வந்து நின்னாலே சிரிப்பதற்கு ஒரு பெரிய ரசிகக் கூட்டமே உண்டு.

அவருடைய கமர்சியல் படங்கள் அத்தனையையும் பார்த்து ரசித்திருக்கும் நம்மில் எத்தனை பேர் அவரோட Man on the Moon (1999) படத்தைப் பார்த்திருக்கீங்கனு தெரியல. நான் இன்னும் பார்த்தது இல்லை. ஆனால் கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும். ஏன்?

Man on the Moon (1999) - 1970-80 கள்ல மிகவும் பிரபலமா இருந்த Andy Kaufman அப்டிங்கற எண்டர்டெயினர்/காமெடியனைப் பற்றிய வாழ்க்கை வரலாறு தான் இந்தப்படம். Andy Kaufman பற்றித் தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தேடித் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பர்சனாலிட்டி. எனக்கும் அவ்வளவாகத் தெரியாது. இனிமேல் தான் இந்தப்படம் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். தனது வித்தியாசமான நகைச்சுவை உணர்வினால், ரியாலிட்டிக்கும் கற்பனைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தனது பர்பாமென்ஸ்களால் உடைத்து எறிந்து உலகையே தன்வசப்படுத்தியவர்.

இவர் பண்ணிய அட்டகாசங்களை கூகுளில் தேடினால் அள்ளிக்கொட்டுகிறது. உலகின் முதல் Intergender wrestler (பெண்களை எதிர்த்துப் போட்டியிடுவது) என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டவர். தனக்கு ஆல்டர் ஈகோவாக ஒரு கேரக்டரை 'Tony Clifton' உருவாக்கி, அந்த கேரக்டரைப் போல வேடமிட்டு டிவி ஷோக்களிலும், ஸ்டேஜ்களிலும் பர்பாமன்ஸ் செய்திருக்கிறார். அது Andy Kaufman தான் என்பதை அறிந்துகொள்ளவே ஆடியன்ஸிற்கு பல காலம் ஆகியிருக்கிறது. அப்படி தனது வித்தியாசமான பர்பாமன்ஸினால் உலகைக் கவர்ந்த Andy kaufman தனது 35வது வயதில் கேன்சரால் இறந்து போனார். அவர் இன்னும் இறக்கவில்லை, இறந்து போனது மாதிரி நடித்து ஆடியன்ஸை Prank செய்திருக்கிறார் என்றெல்லாம் இன்னும் சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இப்படி ஒரு eccentric பர்பாமெராக இருந்த Andy Kaufman வாழ்க்கை வரலாறு தான் Man on the Moon (1999) என்ற படமாக எடுக்கப்பட்டது. இந்தப்படத்தில் Andy kaufman ஆக நடித்தவர் சாட்சாத் நமது Jim Carrey தான். ஜிம் கேரி ஒரு லாவகமான உடல்மொழியைக் கொண்ட, கிறுக்குத்தனங்கள் அதிகம் செய்கிற ஒரு காமெடியன் கேரக்டர். ஆனால் Andy Kaufman ரொம்பவே விசித்திரமான ஒரு எண்டர்டெயினர் கேரக்டர், ஆடியன்சை என்டர்டெயின் பண்ணுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கேரக்டர். படம் ஆரம்பிக்கப்பட்ட போது, ஜிம் இந்தக் கதாபாத்திரத்துக்கு ஒத்துப்போவாரா என்பதே பலரின் கேள்வியாகவும் இருந்துள்ளது.

Man on the Moon படத்தின் இயக்குனர் Milos Forman பழந்தின்னு கொட்டை போட்ட ஒரு மாபெரும் லெஜண்டரி இயக்குனர். (One Flew Over the Cuckoo's Nest, Amadeus போன்ற படங்களை எல்லாம் இயக்கியவர்) அவருக்குமே, ஜிம் கேரியை இந்தப்படத்தில் Andy Kaufman கேரக்டரில் நடிக்க வைப்பதில் பெரிதாக விருப்பமில்லை. வேறு வழியில்லாமல் ப்ரொடக்சனின் சாய்ஸாகத்தான் ஜிம்மை வைத்து இயக்கி இருக்கிறார்.

ஆனால் படம் வெளிவந்த பிறகு, ஜிம் மட்டும் தான் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்க முடியும். வேறு யாராலும் இப்படி ஒரு பர்பாமன்ஸைக் கொடுத்திருக்கவே முடியாது என்று அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஏனென்றால் அந்தப்படத்தில் ஜிம் தெரியவே இல்லை. Andy Kaufman தான் மீண்டும் உயிர்கொண்டு வந்துவிட்டார் என்று சினிமா உலகம் முழுவதும் ஜிம்மைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அந்த வருடத்திற்கான கோல்டன் க்ளோப் சிறந்த நடிகருக்கான விருதையும் ஜிம் பெற்றார்.

எப்படி அவரால் மிகச்சிறப்பாக Andy Kaufman என்ற வாழ்ந்து மறைந்த உண்மையான கேரக்டருக்கு உயிர்கொடுக்க முடிந்தது? Andy Kaufman கேரக்டர் மட்டுமில்லாமல் அவருடைய ஆல்டர் ஈகோ கேரக்டரான Tony Clifton என்ற கற்பனை கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருந்தார் ஜிம். எப்படி இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் நடித்தார்? என்ற கேள்விக்கு விடை சொல்லும் டாகுமெண்டரி படம் தான் Jim & Andy: The Great Beyond (2017).

Man on the Moon படம் தயாரிப்பில் இருந்த போது அந்தப் படத்தின் மேக்கிங்கிற்காக இன்னொரு படக்குழு ஜிம்மைப் பின்தொடர்ந்து அவருடைய அத்தனை நடவடிக்கைகளையும், நடிப்பிற்காக அவர் முன்னெடுக்கும் அத்தனை முயற்சிகளையும் படமெடுத்தது. அப்படி எடுக்கப்பட்ட 100+ மணிக்கணக்கான ஃபுட்டேஜ்களில் இருந்து ஒரு சில ஃபுட்டேஜ்களைத் தொகுத்து செய்யப்பட்ட டாகுமெண்டரி தான் இந்தப்படம்.

மெத்தட் ஆக்டிங் என்றால் என்னவென்று சினிமா ஆர்வலர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஒரு ஆக்டர், படத் தயாரிப்பின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரைக்கும் அந்தக்கதாபாத்திரமாகவே வாழ்வது. இந்த மெத்தட் ஆக்டிங் பற்றி எல்லாம் கட்டுரைகளில் படித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். வியந்திருக்கிறேன். ஆனால் அதை முதன்முறையாக இந்த டாகுமென்டரியில் விசுவலாகப் பார்த்த போது அப்படியே சிலிர்த்து விட்டது.

ஜிம் ஏற்று நடித்திருக்கும் அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்காகவும் எந்தளவுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளார் என்பதை இந்த டாகுமெண்டரி பார்த்து அறிந்து கொள்ளலாம். ஜிம்'மே தனது வாழ்க்கையை Man on the Moon படத்திற்கு முன், அந்தப்படத்திற்கு பின் என இரண்டாகப் பிரிக்கிறார். அந்த அளவிற்கு அவருக்குள்ளும் பல தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது Andy Kaufman கதாபாத்திரம். எப்படி என்பதைப் படம் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

சினிமா மீது ஆர்வமுள்ள அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய டாகுமெண்டரி இது. ஒரு ஐந்து நிமிடங்கள் பாருங்கள். பிறகு மொத்த டாகுமென்டரியையும் முடித்து விட்டு வியப்பின் உச்சியில் Man on the Moon படத்தை டவுன்லோடு செய்வீர்கள். ஜிம் கேரி என்ற நடிக ராட்சஸனின் பேயாட்டத்தை உணர்வீர்கள்.

Netfix இல் கிடைக்கிறது. தவறவிடாதீர்கள்.

No comments:

Post a Comment

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *