என்னைப்பற்றி

என்னைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னு இவ்ளோ தூரம் வந்த உங்களுக்கு முதல்ல நன்றிகள் பலகோடி. பேரு, ஊரு போன்ற மேட்டர்லாம் கீழ ஃபேஸ்புக் ப்ரஃபைல்ல இருக்கு. அதத்தவிர பொதுவா சில விஷயங்கள வேணும்னா இங்க சொல்ல ட்ரை பண்றேன்.

இந்த ப்ளாக் உலகம்ங்கறது எனக்கு ரொம்ப புதுசு. இப்டி ஒன்னு இருக்குங்கறதே கிட்டத்தட்ட 2012ன் ஆரம்பத்தில் தான் தெரியும். முதன்முதலா நான் பார்த்த ப்ளாக் 'ஹாலிவுட் பாலா' அண்ணனோட அக்கரைச்சீமை தான். அப்போ தான், இந்தமாதிரிலாம் தமிழ்ல கூட நிறைய விஷயங்கள படிச்சுத் தெரிஞ்சுக்கலாமோனு தெரிஞ்சது. சரினு அப்டியே இது ரொம்ப புடிச்சுப் போயி நிறைய ப்ளாக் ப்ரவுஸ் பண்ணி நிறைய நல்ல விஷயங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். 

கொஞ்ச நாள் கழிச்சு நாம ஏன் ஒரு ப்ளாக் எழுத ஆரம்பிக்கக் கூடாதுனு தோணுச்சி. ஒரு நயாபைசா செலவில்லாம இந்த மாதிரி ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு தெரிஞ்சது இன்னும் வசதியா போச்சு. காசா, பணமா சும்மா ஆரம்பிச்சு வைப்போமேனு 2012 ஏப்ரல் வாக்கில வேர்ட்ப்ரெஸ்ல ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு வச்சேன். ரெண்டு, மூனு பதிவுகளையும் எழுதி போஸ்ட் பண்ணேன். அப்றம் என்ன ஆச்சோ தெரியல அந்த ஆர்வம் அப்பிடியே சொய்ய்ங்க்னு இறங்கிப் போயி ப்ளாக் பக்கம் போறதையே நிறுத்திட்டேன். அப்டி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சதையே, சுத்தமா மறந்து போயிருந்தேன்.

2012 மே மாசத்தோட எனக்கு காலேஜ் முடிஞ்சு போச்சு. ஜூன் மாசத்துலருந்து ஒரு ஐ.டி. கம்பெனில சேர்ந்து குப்பை கொட்ட ஆரம்பிச்சேன். சேர்ந்த வேகத்துல ஒரு நாலஞ்சு மாசத்துக்கு என்னமோ உலகத்தையே தலைகீழா திருப்பிப் போடறதுக்கு கோடிங் போடற மாதிரி ஒரு ஆர்வம் இருக்கும்ல. எனக்கும் இருந்துச்சி. அந்த நாலஞ்சு மாசம் கழிச்சு ஆர்வம்லாம் சுத்தமா வடிஞ்சவுடனே கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சுருச்சு. ஒரே வேலை. அதையே மறுபடி மறுபடி பாத்துகிட்டு, இந்தியா சுதந்திரம் வாங்கறதுக்கும் முன்னாடியே வந்த டெக்னாலஜில போட்ட கோடிங்க எடுத்து, தலையப் பிச்சுக்கிட்டு அனலைஸ் பண்ணி, ஒரு மாதிரி லைஃபே போரடிச்சப்போ தான் மறுபடியும் ப்ளாக் பத்தின யோசனை வந்துச்சி.

சரி அந்த பழைய ப்ளாக் வேணாம். புதுசா ஆரம்பிக்கலாம்னு ப்ளாக்கர்ல இந்த ப்ளாக் ஆரம்பிச்சேன். சரி ஆரம்பிச்சாச்சி. எதப்பத்தி எழுதறது ?. எதுனா கதை எழுதலாம்னு நினச்சா, உடனே சாகித்ய அகாதமி விருது கொடுத்து நம்மள கொத்திகிட்டு போயிடுவாங்களே அப்றம் ப்ளாக் எழுத முடியாதே என்னா பண்ணலாம்னு யோசிச்சேன். கவிதை எழுதலாம்னாலும் உடனே சிறுகல், பெருங்கல், கருங்கல், பாறாங்கல்னு பாரபட்சம் பாக்காம அத்தனையையும் கொண்டு எறிவாய்ங்களே நம்ம தாங்கமுடியாதேனு ஒரே யோசனை. அப்டி இப்டி யோசிச்சுப் பாத்ததுல அப்டி நம்மகிட்ட என்னதான் சரக்கு இருக்குதுனு கழிவறைல அமர்ந்து யோசிச்சுக்கிட்டுருந்தப்போ கண நேரத்தில் உதித்தது இந்த ஞானம்.

ஆமா. இருக்கவே இருக்கு சினிமா விமர்சனம். அல்லு, சில்லுல இருந்து பொண்டு, புடிச்சு வரைக்கும் அத்தனை பேரும் சினிமா பத்தியே எழுதி யாவாரம் பாக்குறாய்ங்க. நாம ஏன் நமக்குத் தெரிஞ்ச சினிமாக்கள் பத்தி எழுதக்கூடாதுனு நினச்சப்போதான் இந்த உலகம் போற்றும் வலைத்தளம் உருவானது. சின்ன வயசுலேர்ந்தே படங்கள்னா அவ்ளோ ஒரு விருப்பம். எந்தப்படமாயிருந்தாலும் உக்காந்து பாக்க ஆரம்பிச்சுருவேன். கருப்பு வெள்ளை படமா இருந்தாகூட விடறதில்லை. பழைய படங்களும் நிறைய பாத்துருக்கேன். தமிழ் தவிர, ஆங்கிலப்படங்களும் நிறைய பாத்துருக்கேன்.

காலேஜுக்கு முன்னாடி ஸ்கூல்ல இருந்தப்போ நிறைய தமிழ் டப்புடு இங்க்லீஷ் படங்கள் பாத்துருக்கேன். எல்லாமே பயங்கரமான ஹாரர் படங்கள் அல்லது ஆக்சன் படங்களா தான் இருக்கும். அது தவிர குழந்தைகளுக்கு புடிக்கற மாதிரியான படங்களும் நிறைய வாங்கிப் பாப்பேன். ஜாக்கியும் சுட்டிக்குழந்தையும், ஜத்தூரா, 101 டால்மேஷன்ஸ், அனகோண்டா, ஜுராசிக் பார்க், ஸ்பைடர் மேன், ஸ்பை கிட்ஸ் இது மாதிரி என்னல்லாம் தமிழ்ல கிடைக்குதோ அது அத்தனையும் பாத்துருவேன். அப்போ ஒரு டிவிடி ரேட் 30 ரூபாய். நான் வாடிக்கையா வந்து வாங்குறதால எனக்கு மட்டும் 25 ரூபாய். இப்டி ஏகப்பட்ட டப்பிங்க் படங்களோட டிவிடி கலெக்சன் எங்கிட்ட இருந்துச்சு. அட்லீஸ்ட் 200 படங்களாச்சும் எங்கிட்ட இருந்துருக்கும். சரியான பராமரிப்பு இல்லாததால இப்போ அதுல முக்கால்வாசி டிவிடி ஒர்க் ஆக மாட்டேங்குது.

அப்றம் கொஞ்ச நாள் கழிச்சு இந்தவகைப் படங்கள் போரடிச்சப்போ பேக் டு த ஃப்யூச்சர் மாதிரியான படங்கள்லாம் பாக்க ஆரம்பிச்சேன். அப்போதான் டைம் ட்ராவல் படங்கள் மேல நிறைய ஆர்வம் ஏற்பட்டுச்சு. அப்டியே அது சம்பந்தமா என்னலாம் படங்கள் கிடைக்குதோ அத்தனையும் வாங்கிப் பாத்தேன். அப்டியே காலேஜ் ஆரம்பிக்கற வரைக்கும் ஒன்லி டப்பிங் படங்கள் தான். அதுக்கப்புறம், காலேஜ்ல சேர்ந்ததுக்கப்புறம் தான் படங்களோட இன்னொரு உலகம் தெரிய வந்துச்சு.

ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சதால, ஏகப்பட்ட படங்கள் பத்தி தெரிய வந்துச்சு. நம்ம கற்பனையில இருந்த சினிமா உலகத்த தாண்டி இவ்ளோ விஷயங்கள் இருக்குங்கறது புரிஞ்சதே காலேஜ்ல சேர்ந்தப்புறம் தான். அதுக்கப்புறம் தான் விதவிதமான படங்கள் பாக்க ஆரம்பிச்சேன். காலேஜ் முடியறதுக்குள்ள என்னால எவ்வளவு படங்கள் பாக்க முடியுமோ அவ்ளோ படங்கள் பாத்தேன். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், நோலன், க்வண்டின், ராபர்ட் ராட்ரிகய்ஸ் போன்ற ஆளுமைகள்லாம் என்னை முழுமையா ஆட்கொண்டனர். 

சரி, அதெல்லாத்தயும் பத்தி ப்ளாக்ல எழுதலாமேனு தோண, அப்டி ஆரம்பிச்சு தொடங்குனது தான் இந்த ப்ளாக். முதன் முதல்ல எழுதுன பதிவு & படம் "நீதானே என் பொன்வசந்தம்". அதுக்கப்புறம் கூட ஒரு ரெண்டு மாசத்துக்கு எதுவும் எழுத ஆர்வம் வரலை. ப்ளாக்க அப்டியே விட்டுட்டேன். அப்பறம் 2013, பிப்ரவரி மாசத்துல இருந்துதான் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சேன்.

ஏதோ சும்மா ஒரு பேருக்கு தான் சினிமா விமர்சனம்னு சொன்னேனே தவிர, உள்ளுக்குள்ள அந்தமாதிரிலாம் எதுவும் நினச்சது கிடையாது. ஏன்னா விமர்சனம்னா என்னானு எனக்கு நல்லா தெரியும். நான் எழுதறது விமர்சனமே கிடையாது. அது என்னோட பார்வைதான். உண்மையான விமர்சனம்லாம் எப்டி எழுதுறதுனு எனக்கு ஒன்னியும் தெரியாது.

அதேபோல ப்ளாக் எழுத வந்துட்டதால் எனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஆயிடாது. உண்மைல சொல்லப்போனா, நிறைய விஷயங்கள் தெரிஞ்ச ஆளுங்க நிறையப் பேரு சைலண்டா ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்காய்ங்க. அவிய்ங்கள்லாம் சைலண்டா சுத்துறதாலதான் நான்லாம் இங்கே அடாவடி பண்ண வேண்டிய நிலைம ஆயிருச்சி. அதுபோக வேற வேலை வெட்டி இல்லை எனக்கு. ஆர்வம், டைம் இது ரெண்டும் இருக்கறதால தான் இங்கே கிறுக்கிக்கிட்டு இருக்கேன். படிக்கிற வாசகர்கள் எழுதுற எழுத்தாளன விட புத்திசாலிகள்ங்கற மேட்டர நான் நல்லா புரிஞ்சு வச்சுருக்கேன்.

அதனால நண்பர்களே, வாங்க நாம எல்லாருமா சேர்ந்து சினிமாங்கற கடலுக்குள்ளே முத்தெடுக்க ட்ரை பண்ணலாம். அப்பப்போ, முத்துக்கு பதிலா வெறுக்கூடு தான் கிடைக்கும். அதுகளயும் கழுவி ஊத்தலாம். ஆக மொத்தத்துல ஜாலிக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த ப்ளாக் முழுக்க முழுக்க ஜாலிக்காக மட்டுமே. யாருடைய மனமும் புண்படுவதற்கு அல்ல.

பி.கு:
ஒரு முக்கியமான விஷயம். ப்ளாக்ல ரொம்பப்பேரு உலக சினிமானு ஒரு மேட்டர சொல்லிட்டு திரியறாங்க. அப்டி இப்டினு ஏகப்பட்ட குறியீடுகள்லாம் இருக்கும்னு சொல்லி பயமுறுத்தறாங்க. எனக்கு அந்தமாதிரி படங்கள்னா கொஞ்சம் அலர்ஜி. அதனால அந்த ஏரியாப் பக்கமே நாம போக வேணாம். எனக்குப் புடிச்ச நல்ல கதையம்சமுள்ள படங்கள் பத்தி மட்டும் நாம பாக்கலாம். அதுல ஒருவேளை அவங்க சொல்ற ஒலகப் படங்கள் சில சமயம் வரலாம்.

நன்றி வணக்கம்.

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *